அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
அரசியல் தொடர்பால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் தொடர்பால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஆகஸ்ட், 2018

அரசாங்கத்திற்கும் மக்களிற்குமான உறவுப்பாலமாக விளங்குவது ஊடகங்களே!

             மக்களின் வரியில் செயற்படும் அரச ஊடகங்கள் மற்றவர் மீது சேறு பூசும் விதத்தில் செயற்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அபே கம வளாகத்தில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
சுயாதீனத் தொலைக்காட்சி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் என்பன அரச நிறுவனங்கள் ஆகும். இது நடுநிலையாக செயற்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்துக்கு வால் பிடித்து, மற்றவர்கள் மீது பொய்யான செய்திகளை ஒளிபரப்பி வருவதை அனுமதிக்க முடியாது.
தனியார் ஊடகமொன்றில் யாராவது ஒருவர் மற்றொருவர் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடுவதாயின், அதனை எதிர்க்க முடியாது. ஆனால், நாட்டின் வரிப் பணத்தில் இயங்கும் ஒரு ஊடகம் இவ்வாறு செயற்பட முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். குறித்த செய்தியானது இணையதளத்தில் வெளியாகியிருந்தது. இந்த செய்தியின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதாகவே இந்த பத்தி எழுத்து அமையவிருக்கின்றது.
      ஊடகங்கள் என்பது தகவல்கள் மற்றும் கருத்துகளை பரிமாற்றம் செய்கின்ற சாதனங்களே ஆகும். ஜனநாயகத்தை நிலைநாட்டும் முக்கிய காரணியாக ஊடகங்கள் விளங்குகிறது. எனினும், ஊடகங்கள் பெரும்பாலும் அடக்குமுறையை எதிர்கொள்வதாகவே காணப்படுகிறது. எமது நாட்டை பொறுத்தவரை பாரிய யுத்தமொன்றை எதிர்கொண்ட காரணத்தால் ஊடக சுதந்திரம் பற்றி வாயே திறக்காத சூழ்நிலையே காணப்பட்டது. இதேவேளை யுத்த சூழலில் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். சில ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு தப்பியோடினர். இவ்வாறான ஊடகவியலாளர்களில் பலர் தமிழர்கள்  என்பது கவனிக்கத்தக்கது. மேலும் லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலி கொட போன்றவர்களிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக கேள்வி எழுப்பும் செய்தி ஊடகங்களே காணப்படுகிறதே அன்றி தமிழ் ஊடகவியலாளர் பற்றி ஊடகங்கள் அலட்டிக் கொள்வதில்லை. குறிப்பாக இத்தகைய ஊடகவியலாளர்களிற்கான அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியாக மகிந்த ராஜபக்சவின் காலமே இருந்தது. நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படுகின்ற அரசாங்கத்தின் காலப்பகுதியில் முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் பாரிய ஊடக சுதந்திரத்திற்கான களமுன்டு எனலாம். பொதுவாக அரச ஊடகங்கள்  நடப்பு அரசாங்கத்தின் பிரச்சாரபீரங்கிகளாகவே காணப்படும். காரணம், குறித்த அரச நிறுவனங்களின் தலைவர் குறிப்பிட்ட அரசாங்கத்தினால் நியமிக்கப்படுவார். எனவே, அரச ஊடகங்களினை கட்டுபடுத்தும் அதிகாரம் முழுமையாக அவரிடம் ஒப்படைக்கப்படும். முன்னாள் ஜனாதிபதி குறித்த விடயத்தை அறியாதவர் அல்ல. கடந்த தனது ஆட்சியில் அரச ஊடகங்களினை மிகவும் தனக்கு உடன்பாடுமிக்கதாக பயன்படுத்தியவர்களில் முன்னோடியானவர். போரை வெற்றி பெற்றுக்கொடுத்தவர் மற்றும் சரத்பொன்சேகாவினை ஹிட்லருக்கு ஒப்பிட்டமை போன்றன சில உதாரணங்கள் மேலும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சியினை பிரச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு மஹிந்த ராஜபக்ஷ மீது காணப்படுகிறது. எது எப்படியோ குறித்த கருத்து அரசியல் நோக்கத்தில் வெளியிட்டகருத்தாகவே உட்பொருள் கொள்ள முடிகிறது.
          
           இதேவேளை, அன்மையில் உலக நாடுகள் இடையே ஊடக சுதந்திரம் பற்றி ஆய்வு மேற்கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட 180 நாடுகளை உள்ளடக்கிய அட்டவணையில் இலங்கை பத்து இடங்கள் முன்னேற்றமடைந்து 131 இடத்தை பிடித்துள்ளது. இதற்கான முக்கிய காரணமாக தகவல் அறியும் உரிமை சட்டதை அமுல்படுத்தியமையைக் கூறலாம். மேற்கண்ட அட்டவணையில் நோர்வே முதலிடத்தையும் சுவீடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. தாய்லாந்து 42 வது இடத்திலும் தெற்காசிய நாடான பூட்டான் 84வது இடத்திலும் பட்டியல் படுத்தப்பட்ட அதேவேளை வடகொரியா இறுதி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நாட்டின் காவல் நாய்களாக விளங்கும் ஊடகங்கள் எது மக்களிற்கு சரி எது நடுநிலையானது என்பதை அறிந்து வெளியிட வேண்டும். ஒரு சிறந்த அறிவுத்தெளிவு மிக்க சமூகத்தை உருவாக்கும் அதிகாரம் ஊடகங்களிற்கே உண்டு. எனினும் குறித்த ஊடகங்கள் சில அரசியல் சுயலாபங்களிற்காக ஒருபக்க நியாயப்பாடுகளை முன்வைப்பது கவலையான விடயமாகும். அரசாங்கத்திற்கும் மக்களிற்குமான உறவுப்பாலமாக விளங்கும் ஊடகங்கள் நேர்மைத்தன்மையுடன் செயற்படும் போதே ஜனநாயகம் தொடர்பாக சற்றேனும் உரையாட முடியும்.

ஆக்கம்:
இ.தனஞ்சயன்

செவ்வாய், 12 டிசம்பர், 2017

கருத்தின் ஆழம் குறைவுபடாமல் இருப்பதே கவிதை!

படைப்பாளியின் எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள் போன்ற மன உணர்வுகள் படைப்பாக வெளிவரும் போதே படைப்பாளி சுயதிருப்த்தி அடைகின்றான்.படைப்பாளி தனது திறமைகளை ஏதோஒரு வகையில் தனது ஆக்கப் படைப்புகளை வெளிஉலகிற்கு வெளிக்கொணர முயல்கின்றான்.சில சமயங்களில் வெற்றி பெறும் படைப்பாளி பல சமயங்களில் காணாமலே போய்விடுகின்றான்.படைப்பாளி தனது சூழலில் இருந்தே தனது ஆக்கப் படைப்புகுரிய கருப்பொருளை பெற்று கொள்கின்றான். சூழல்கள் மாறும் போது படைப்பின் தன்மைகளும் மாறுபடுகிறது.அந்தவகையில், இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாகக் கூறப்படுகிறது. இலக்கிய வகையில் முக்கியமானதாக கவிதை விளங்குகிறது. இது சிறுகதை,நாவல், கட்டுரை போன்றவற்றின் சுபாவங்களில் இருந்து மாறுபட்ட இயல்பு கொண்டது.கவிதையானது ஒருவரின் உளக்குமுறல்கள் மொழி வடிவம் பெறும் போது தோற்றம் பெறுவதாகும்.கவிஞர் பிறைசூடன் கவிதை தொடர்பாக கூறும் போது பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றவர்கள் தமிழ் கவிதை உலகில் அனைத்தையும் தொட்டுவிட்டார்கள்.நாம் வரிவடிவம் மற்றும் வார்த்தைகளில் மாத்திரமே மாற்றம் செய்து வருகின்றோம் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது. கவிதையானது எந்த அடக்குமுறை சூழலில் இருந்தாலும், ஏதோஒரு குமுறலாக வெளிவந்துவிடுவது அதன் சிறப்புத்தன்மையாகும்.அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் கல்வி பயிலும் கவிஞர் முகமது அஸ்கரின் கன்னி கவிதைத் தொகுப்பான"விரியும் போராடும் அரும்புகள்" ஒக்ரோபர் மாதம் 11ம் தி கதி கைலாசபதி கலையரங்கில் வெளியீடு தெரிவுசெய்யப்பட்டு இருந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.கவிதை வெளியீடு விழாவுக்கு அழைப்பு வந்தும் அண்றைய வெளியிட்டு விழாவில் தவிர்க்க முடியாத சில தனிப்பட்ட காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லை.ஆயினும், கவிஞரினை பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாகசந்தித்து கவிதைபுத்தகத்தை பெற்று வாசித்த அனுபவித்த உணர்வுகளை திறனாய்வுத்தளத்தில் வலைப்பூபதிவாக்கலாம் என எண்ணுகிறேன்.கவிதை என்பது சமூகத்தின் உணர்வு பிரவாகம் எனலாம்.கவிஞர் அஸ்கர் தனது உணர்வுகளை விரியும் போராடும் அரும்புகள் என்று கவிப்புத்தகத்திற்கு பெயரிட்டுள்ளார் என எடுத்துக் கொள்ளலாம். காரணம், உணர்வுகள் ஓர் ஒழுங்கு முறையில் வார்த்தைகளாகி வரியாகி கவிதையாகின்றது எனலாம்."விரும்பிகள் கொடுத்த காலம் திருடித்தின்னும் காலமே இச் சீர் வரிசை"என்று சீதனம் கொடுமையை சீர் வரிசை எனும் சீதனம் எனும் கவிதையில் கூறுகிறார்.விழுந்தாலும் விதையாகிடு எனும் கவிதையில் "துச்சமும் அச்சமும் உன் இதயங்கள் எனக்கும்வேண்டும் தோழா வீரநடை போட்டதால் நீ மண்ணிலே இன்றும் மணம் வீசுகின்றாய் "என்ற கவிவரிகளில் சோசலிச சித்தாந்ததை வலியுறுத்தியுள்ளார்.

முன் பக்க அட்டைப்படத்திலேயே கவிஞன் கவியின் கருப்பொருளின் ஆழத்தை உணர்த்தியுள்ளதோடு மலையகமக்களின் எதிர்பார்ப்புகளை அரும்புகளாக உவமைபடுத்தியுள்ளமை சிறப்பு.இதே சமயம் ஒரு இளம் கவிஞராக அஸ்கர் கூட ஒரு வகையில் விரியப்போராடும் அரும்பு என்று அர்தப்படுத்திக் கொள்ளலாம்.
இதேவேளை,உழைப்பே உயர்வு என்ற ஒரு கவிதையின் ஆரம்பம் இவ்வாறு அமைகிறது "மூடநம்பிக்கைகளை முடக்கிவிட்டு முடியும் என்ற முடிவோடு வா தோழனே" என்ற கவி வரியானது தன்னம்பிக்கையூட்டும் வரிகளாக அமைகிறது.மேலும், மற்றொரு கவிதையில்
"காலம் காலமாய்
மீட்சி இல்லாப் போராட்டத்தில்
தூளாய் போகின்றது....."மலையகமக்களின் அரசியல் ரீதியாக ஏமாற்றப்படுவதை சலித்து கவிதை வாயிலாகசொல்கிறார்.காணாமல் போன கணவுகள் எனும் கவிதையில்"காலமெல்லாம் காணாமல் போய் கனவுகள் கூட கஞ்சத்தனம் காட்டுகின்றன "எவ்வளவு சோகம் ஏமாற்றம் கணவுகள் கான்பதற்கே நம்பிக்கை அற்ற தன்மை. ஆழ்ந்த சிந்தனை மிக்க வரிகள்.உன்மை நட்பு எனும் கவிதையில் "பாலினம் தடையில்லை உணர்வுகள் ஒன்றானால் தோழன் துனைநிற்பான்"ஆன் பென் நட்பின் புனிதமான தன்மையை குறிப்பிடுகிறார்.பெண்ணின் கொடுமை எனும் கவிதையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டு இறுதி வரிகளில்"தடுத்து எதிர் நிற்க தூக்குதண்டனையை வரச்சொல்லங்களே"என பெண்களின் விடுதலைக்கான அவசியத்தையும் அதற்கு தீர்வாக தூக்குத்தண்டனையும் தனது கவிதையில் வலியுறுத்தியுள்ளார்.தோட்ட தொழிலாளிகள் எனும் கவிதையில் "கட்டைகள் காற்சட்டை வெள்ளையனின் அடி மட்டம் போனபின்னும் போகவில்லை "என்று மலையக மக்கள் தொடர்ந்தும் அடிமைத்தனம் நிறைந்த வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார். நிதியும் நீதியும் எனும் கவிதையில் "நிதி தான் நீதியா இது தான் நியதியா"என நீதி நிதிக்கு பின்னால் என்ற தற்கால நிலமையை கவிதையில் சொல்கிறார்.

"புயலோடு போராடும்
தூக்கணாம் குருவி கூட்டைப் பார்
உழைப்பால் உயர்ந்து போய்
உயரத்திலேயே வாழ்கிறது
மகுடிக்கு வளைந்தாடும்
பாம்பாக ஆகாதே
முடிவின் ஆரம்பத்திலும்
முதுகெலும்போடு உழைத்து வாழ்"
என்று உழைப்பின் அவசியத்தை உழைப்பே உயர்வு எனும் கவிதையில் உணர்த்துகின்றார்.உழவனின் உழுத மனம் எனும் கவிதையில் "உழவன் மனம் ஓயந்து விட்டால் உண்பதற்கு சோறிறின்றி நாற்றோடு சேற்றில் இறங்குவதே மனிதனின் விதி ஆகிவிடும் "விவசாயத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும்கவிஞரின் தொலைநோக்கு பாராட்டுக்குரியது.வடுக்கள் எனும் இன்னொரு கவிதையில்"இறுதி சடங்கு செய்து கொள்ளி வைக்கப் பெற்றெடுத்த மகளைத் தொலைத்து துடிக்கும் பெற்றவரின் கதறல்கள்"என்று போர்காரணமாக இறந்த இளைஞர்களின் பெற்றோரின் மனவருத்தத்தை கவிஞர் அழகாக பதிவு செய்கிறார்.நாகரீகம் உட்புகுந்த மானிடம் எனும் கவிதையில் "சுகங்களை சுத்தமாக காணோம் சூனியமாய் ஆனது உலகே"என்று உலகமயமாக்கலின் தாக்கத்தை கூறும் கவிஞர் குறித்த கவிதையின் இறுதி வரியில் நமக்கெல்லாம் ஆகுமா நாகரீகம்? என்று முடிக்கிறார். இது உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல்என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனி என்பதாகவே கருத்து கொள்ளவேண்டியுள்ளது.

"கல்வி உன் உயர்வெனவும்
ஒழுக்கம் உன் சிறப்பெனவும்
இவையோடு மலர்தலே
உன் புகழ் எனவும் உரைத்திட வேண்டும்"
என்று விளையும் பயிர் எனும் கவிதையில் கல்வியின் அவசியம் பற்றி குறிப்பிடுகின்றார்.அத்துடன், செல்லாக்காசு எனும் கவிதையின் இறுதியில் "புரிதல் வேண்டும் உலகே-காசு புதிதாய் இனிக்கும் நஞ்சே"என்று காசின் தன்னம பற்றி சிந்திக்க வைக்கின்றார்.

நான்,தமிழோடுவிளையாடுமனமே,உழைப்பே உயர்வு,கருகிய மலர் சிரிக்கிறது, சிறகொடிந்தபறவை,
விளையும் பயிர்,தூரத்து நிலா,விளையும் பயிர்,
யார் குற்றம்,தேம்பியழும் சுவர்கள்,
விரிய போராடும் அரும்புகள்,ஒரு மயிலிறகால்,
பாலஸ்தீனக் குரல்,குருவிக்கூடு,
காணி நிலம் வேண்டும்,
கடல்வாழ் காகித ஓடம்,முகிலின் துளிகள், சீர்வரிசை எனும் சீதனம்,
என் உயிர் தங்கை,கடல்வாழ் காகித ஓடம்,கடைசி முத்தம்,உயிருள்ள மரணம்,வறுமை விலகாதோ,
புறப்படு புதுமைப் பெண்ணே,
வடுக்கள்,காணாமல் போன கனவுகள்,உண்மைநட்பு,தோட்டத்தொழிலாளிகள்,பெண்ணினக் கொடுமை
வட்டியில்லா கடன்,
மீளாத மியன்மார்ப் படகுகள்,உழவனின் உழுத மனம்,மொட்டின் மொழி ,வறுமை விலகாதோ,அவசரக் கல்யாணம்
சதுரங்க வேட்டை,இறுதி நாழிகை என்று சமூககவிதைகள்,பொருளாதார,அரசியல் மற்றும் காதல் கவிதைகள் என அனைத்தும் தற்காலத்தின் நிலைமையை உரையாடும் பாங்கில் கவிதை அமைந்துள்ளது.கவிஞன் எனும் கவிதையில் அஸ்கர் கவிதைக்கு பின்வருமாறு வரைவிலக்கனம் கொடுக்கின்றார்"கவிஞ்ஞனின் கற்பனையை இலக்கனம் கற்பிக்க முடியாது இது தான் அதுவென்றாலும் அது கவிதான்"என்று கூறுகிறார். கவிதையின் வரிகள் அற்புதமானது.கன்னி படைப்பினை இவ்வளவு சிறப்பாக செய்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. கவிஞர் முகமது அஸ்கரின் முக நூல்களில் பார்த்து ரசித்த கவிதைகள்
இன்று நூல் வடிவில் உருவாகி இருப்பது மிகவும் பொக்கிஷமான விஷயமாகும். முகப்புத்தகத்துக்குள் தனது கவிதையை சிக்கவிடாமல் அச்சு வடிவில் வெளி உலகிற்கு கொண்டு வந்தமை சிறப்பானது.அச்சு வடிவில் கவிதை வாசிப்பு அனுபவம் அலாதியானது.விரியப் போராடும் கவிதைகள் என்ற கவிஞர் முகமது அஸ்கரின் கவிப்புத்தகம் கவிஉலகிற்கு அமையும் என்பதில் எந்த சந்தேகமும்இல்லை. இறுதியாக மொட்டின் மொழி எனும் கவிதையில் கவிஞர் குறிப்பிட்ட "உலகம் இன்று இருட்டறையில் இனி நீயாவது விழித்துக்கொள்"என்ற வரிகளை சிந்தித்துக்கொண்டு எனது இச் சிறு வலைப்பூப்பதிவினை நிறைவு செய்து மற்றும் ஓர் வலைப்பூப்பதிவில் விரைவில் சந்திக்கின்றேன். இ.தனஞ்சயன்.ஊடகத்துறை

வியாழன், 26 அக்டோபர், 2017

இலத்திரனியல் ஊடகவாசிப்பு அனுபவத்தை காட்டிலும் அச்சு ஊடக வாசிப்பு அனுபவம் உயிரோட்டமானது?

மனித வாழ்க்கையில் மிகவும் அவசியமானதாகும் வாசிப்பு விளங்குகிறது. வாசிப்பின் பிரதானத்தை புரிந்து கொள்ளாதவர்கள் அறிவுச்செல்வத்தை சம்பாதிக்க முடியாதவர்கள். அபிவிருத்தி அடைந்த நாடுகளின் முன்னேற்றத்தின் பின்னால் புத்தக வாசிப்பு பின்னணியாக உள்ளவை மறுக்கமுடியாத உண்மை.வாழ்க்கையில் சாதித்த பெரிய அறிஞர்கள் புத்தக வாசிப்பு பிரியர்களாக உள்ளனர் என்பது அவர்களின் சிந்தனைமிக்க கருத்துக்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது;ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி,அதேபோல்,
கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றார்
தந்தை பெரியார்
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு, என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்,
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் சார்பு கொள்கையை முன்வைத்த
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் மாமனிதர்
நெல்சன் மண்டேலா,
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம் புரட்சியாளன்  லெனின்,
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்,
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் அமெரிக்க ஜனாதிபதி
வின்ஸ்டன் சர்ச்சில்,
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம்
மார்டின் லூதர்கிங்,
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம்
பகத்சிங்,
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
ஆபிரகாம் லிங்கன்,ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!ஜூலியஸ் சீசர்,உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்.டெஸ்கார்டஸ்,
போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு.இங்கர்சால்,
சில புத்தகங்களை சுவைப்போம். சிலவற்றை அப்படியே
விழுங்குவோம் சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
பிரான்சிஸ் பேக்கன்
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
லெனின்,உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
ஆஸ்கார் வைல்ட்,உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
சிக்மண்ட் பிரைட் போன்ற உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றவர்களின் ஆழம்மிக்க சிந்தனை பிறப்பதற்கு புத்தகங்களே தூண்டுகோலாக விளங்கியது.புத்தக வாசிப்பின் ஊடாக பல வழியில் நன்மைகளை பெற முடியும். பாடசாலைகளில் காணப்படும் பாடத்திட்டத்திற்குள் எம்மை மட்டுப்படுத்தாமல் பல்வேறு வகையான புத்தகங்களினையும் வாசிக்க வேண்டும்.நமது பாடத்திட்ட புத்தகங்கள் மாணவர்களின் சிந்தனைகளை சிறைப்படுத்தி வைத்துள்ளன.பரீட்சையை எதிர்கொள்ள மாத்திரமே போதுமானது மாறாக உலக ஓட்டத்துடன் வாழ்வை வெற்றி கொள்ள மேலதீக புத்தகங்களினை நண்பனாக்கி கொள்வதே புத்திசாலித்தனம்.புத்தகங்களினை தெரிவு செய்யும் போது எமது விருப்பு மற்றும் வாசிப்பு சுவை ஏற்ப தெரிவு செய்ய வேண்டும்.ஒவ்வொருவரும் தனக்கென தனித்தன்மையான வாசிப்பு ரசனையை கொண்டுள்ளனர். இலக்கியம், சமயம், அரசியல், சமூகம், தொழில்நுட்பம், அறிவியல் போன்ற பல்வேறு வகைகளில் புத்தகங்கள் நூலகங்களில் குவிந்துள்ளது. இவற்றில் எமது சொந்த ரசனைக்கு(own taste) ஏற்ப வாசிப்பினை அனுபவிக்கலாம்.வாசிப்பு கற்பனை மற்றும் ஆக்கத்திறனை தூண்டுகிறது அதேவேளையில் பெறுமதி மிகுந்த பொழுது போக்காகவும் அமைகிறது, மன முரண்பாடுகளின் இருந்து விடுதலை பெற வாசிப்பே சிறந்த மருந்தாகும்.மேலும் ஒரு சிந்தனையாளரான Dr.Seuss "The more you read The more things you know. The more that you learn the more places you Will go" நிறைய வாசிக்கும் போது நிறைய விடயம் தெரிய வரும் நிறைய விடயம் தெரியும் போது நிறைய இடங்கள் பயணிக்க முடியும் என்று கூறுகிறார்.வாசிப்பு என்பது அறிவு மற்றும் மதிநுட்பம் நிறைந்த மனிதனை உருவாக்கும். தற்போதைய நிலையில் வாசிப்பு என்பது அவசியமில்லை என்ற தோற்றப்பாடு எம்மிடையே பரவலாக காணப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் சமூகத்தை பீடித்துள்ள சமூக ஊடகங்கள் அதற்கு காரணமாக இருப்பதாகவும் மீளவும் சமூக மீட்சிக்கு இலக்கிய ரசனை உடைய அறிவியல் சமூகத்தை உருவாக்க வாசிப்பு ஒன்றே! அறிவியல் நிறைந்ததாக புத்தகங்கள் காணப்படுகிறது. அறிவானந்தம் என்பது வாசிப்பு வாயிலாக ஊட்டப்படுகின்றது.எமது மனதை மகிழ்ச்சியில் வைத்திருப்பதில் புத்தக வாசிப்புக்கு பெரும் பங்கு உள்ளது.புத்தக வாசிப்பு பேரானந்தமானது என்பது அனுபவம் நிறைந்த கருத்து."Reading of books gives us a great pleasure".மனிதனின் மிகவும் நெருங்கிய நண்பனாக புத்தகம் காணப்பட வேண்டும்.இதேபோல்;கற்பனாசிந்தனை அதிகரிக்கும், தகவற்செறிவு நிறைந்த மனிதனாக்கும்,ஏனையோரிடம் தொடர்புகளை பேணிக் கொள்ள உதவும், எமது பண்பாட்டினை உயிர்புடன் பேனுவதற்கு உதவும், மற்றவர்களின் நிலையில் இருந்து தீர்வுகளை அணுகும் ஆற்றல், தகவல்களினை விளக்கமாக பரிமாறிக் கொள்ள உதவும், எம்மை சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள உதவும், சிறந்த சொற்தெரிவுகளை மேற்கொள்ள உதவும், உலக நடப்பு விவகாரங்களை அறிந்து கொள்ள உதவும், புத்தகத்துடன் அதிக நேரத்தை செலவிட வசதியாக அமையும்,உங்கள் மூளையானது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கும்,புதிய பல மொழிகளை கற்றுக் கொள்ள வசதியாக அமையும், ஆன்மாவின் சாளரமாக வாசிப்பு அமையும், எழுத்தாற்றலினை விருத்தி செய்ய வாசிப்பு அமையும்,எதிர்மறையான எண்ணங்களினை வடிகட்ட வாசிப்பே உபாயமாக அமையும்,மனதிற்கு இனிமையாகவும் தெளிவான நிதானமான சிந்தனைக்கு வாசிப்பு வழிகோலும்.அறிவு என்பது நதியைப் போன்றது எவ்வளவு நீளமானதாக இருந்தாலும் அமைதியாக இருக்கும். சொல்வளம் அதிகரிக்கும்,திறனாய்வுத்தள சிந்தனை, ஞாபகத் திறன் அதிகரிக்கும்,கவனகுவிப்பு முன்னேற்றம் அடையும் போன்றன வாசிப்பு அனுபவம் ஊடாக கிடைக்கும் நன்மைகளாகும்.இதேவேளை,நவீன ஊடகங்களின் வருகை,தமிழ் அச்சு ஊடகங்களின் மீதான வாசிப்பு ஆர்வத்தை குறைந்துள்ளது.அண்மையில் மத்திய  வங்கியின் அறிக்கையின் பிரகாரம், கடந்த 2016ம் ஆண்டு 53,882 மில்லியன் பத்திரிகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இது 2015 ம் ஆண்டு 50,808 மில்லியன் ஆகும்.இது விற்பனை அதிகரிப்பை காட்டி நிற்கின்றன.2015 ம் ஆண்டில் ஒவ்வொரு 1000 மனிதனுக்கும் 58 பிரதிகள் என்று இருந்த நிலை 2016 ம் ஆண்டு ஒவ்வொரு 1000 மனிதனுக்கும் 62 பிரதிகள் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளதை குறிப்பிடத்தக்கது. இங்கு, சிங்கள நாளிதழ்களின் 2016 ம் ஆண்டின் விற்பனை 25,949 மில்லியனாகவும்,இது 2015ல் 22,649  மில்லியனாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அதேபோல், ஆங்கில நாளிதழ்களின் விற்பனை 2016ல் 9180 மில்லியனாக காணப்பட்ட அதேவேளையில் 2015 ல் 8073 மில்லியனாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதேபோல, தமிழ் பத்திரிகைகள் 2016ல் 5097 மில்லியனாகவும் 2015ல் 7091 மில்லியனாகவும் காணப்படுகிறமை சிந்திக்க வேண்டியதாகும்.இதேபோன்று, வாரப் பத்திரிகைகளை பொறுத்தவரை,சிங்கள பத்திரிகைகள்   2016ல் 8320 மில்லியனாகவும் 2015ல் 8081 மில்லியனாகவும் காணப்படுகிறது.அதேபோன்று, ஆங்கில வாரப் பத்திரிகைகளை பொறுத்தவரை, 2016ல் 2440 மில்லியனாகவும் 2015ல் 2240 மில்லியன் ஆகும்.தமிழ் வாரப்பத்திரிகைகளை பொறுத்தவரை,2016ல் 1930 மில்லியனாகவும் 2015ல் 2265 மில்லியனாக காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், முடிவாக; சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளின் நுகர்வு அதிகரித்துள்ள அதேவேளையில் தமிழ் பத்திரிகைகளின் நுகர்வு குறைந்துள்ளமை அவதானிக்க முடிகிறது.நவீன ஊடக வாசிப்பின் மேலோட்டமான வாசிப்பு அனுபவத்தை பெற முடியுமே தவிர முழுமையான திருப்திகரமான வாசிப்புக்கு அச்சு ஊடகங்கள் வாசிப்பே சிறந்த தெரிவாகும்.ஒக்ரோபர் மாதம் வாசிப்பு மாதமாக பிரகடனம் அரசாங்கத்தால் செய்ததனை முன்னிட்டு வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக சிந்தித்தாக குறித்த வலைப்பூ பதிவு அமைந்து இருந்தது. இ.தனஞ்சயன்.ஊடகத்துறை.