அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
கல்வி விளம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி விளம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

விசாரணையை முறைமைப்படுத்தும் புலனாய்வு இதழியலின் சாத்தியக்கூறுகள்?

ஊடகத்துறையானது நாளுக்கு நாள் புதிய மாற்றங்களுடன் வேகமாக மாற்றங்களை உள்வாங்கி தம்மை தகவமைத்துக் கொள்கின்றது. இவ்வாறான மாற்றங்களை உண்டுபண்னியதன் மிகப் பிரதான காரணம் புதிய ஊடகங்களின்(Online media)வருகையே பிரதானமாகும்.அந்த வகையில் ஊடகங்களிற்கான இதழியல் என்பது செய்திகளை இலகுவாக அறிந்து, தெளிந்து, புரிந்து கொள்ள உதவுகிறது.இதழியல்  (Journalism) என்பது இன்று விளையாட்டு இதழியல்,வணிக இதழியல்,கலை இதழியல்,புகைப்பட இதழியல்,விபசாய இதழியல், கல்வி இதழியல், நவீன இதழியல்(fashion journalism),பொருளாதார இதழியல்(Economic journalism),மஞ்சள் இதழியல்,பிரஜைகள் இதழியல்,தீர்வுகாணும்இதழியல்,புலனாய்வு இதழியல் போன்றன ஆகும். தற்போதைய நிலையில் இறுதியாக கூறப்பட்ட இதழியலின் தேவைப்பாடு உணரப்படுகின்றது.அந்த வகையில்,புலனாய்வு இதழியலின் அவசியத்தை உணர்ந்து அது தொடர்பாக சிந்திக்கப்போவதாகவே இப் பதிவு அமையப்போகின்றது.புலனாய்வு இதழியல் என்பதை வரைவிலக்கனப்படுத்துவது சற்று கடினமானது. எனினும், சாதாரண இதழியல் மரபில் இருந்து எவ்வாறு புலனாய்வு இதழியல் வேறுபடுகிறது என்று சிந்திப்பது வரைவிலக்கணப்படுத்த சுலபமாக அமையும். குறிப்பாக, செய்திகள் அனைத்தும் புலனாய்வுத் தளத்தின் அடிப்படையிலே வழங்கப்படுகிறது. எந்த ஒரு செய்திகளும் பிரதான ஊடகங்களினை பொறுத்தவரை உறுதிப்படுத்தி ஆதாரத்துடனே வெளியிடும் பண்புகளை கொண்டு இருக்கிறது.இந்த நிலையில் புலனாய்வு இதழியல் அவசியமா?என்பது கேள்விக்குரிய விடயமாகும்.சாதாரண இதழியல் இருந்து புலனாய்வு இதழியல் எவ்வாறு பிரித்துப் பார்க்க வேண்டியது என்பதே புலனாய்வு இதழியலிற்கான வாய்ப்பினை வழங்குகிறது.சாதரனமான செய்தியில் ஏதோ ஒரு மக்களிற்கு அவசியமான விடயம் மறைக்கப்படுகின்றது என்று உணரும் சந்தர்ப்பங்களில் புலனாய்வு இதழியலிற்கான தேவைப்பாடு தோற்றம் பெறுகிறது. குறித்த மறைக்கப்பட்ட விடயங்களினை ஆதாரமாக,திறனாய்வுத் தளத்தில், முக்கிய மான விடயங்களினை, ஆழ்ந்த ஆய்வு தளத்தில், இது வரைக்கும் அறியப்படாத தகவல்களினை புலனாய்வு தளத்தில் வெளிக்கொண்டு வரும் இதழியல் புலனாய்வு இதழியல்(Investigate journalism )ஆகும்.ஆங்கில அகராதிகளில் ஒன்றான Cambridge dictionary "புலனாய்வு இதழியலை "A type of journalism that tries to discover information of public interest that someone is trying to hide"அதாவது, மக்களிற்கு தேவையான விடயத்தை யாரும் மறைக்க முற்படும் போது அவற்றை அம்பலப்படுத்தி எழுதும் இதழியல்(Investigate journalism)ஆகும்.இவ் இதழியல் சாதாரண செய்திகளை கடத்துவதென்றில்லாமல் புதிய உண்மையை கண்டறிவதாக அமைகிறது. புலனாய்வு இதழியலின் அறிக்கையிடும் இலட்சனம் வழமையான இதழியல் மரபில் இருந்து பின்வரும் வகையில் வேறுபட்டு நிற்கிறது.என்ன நடந்தது என்பதுடன் ஏன் நடந்தது என்பதையும், யார் தவறு செய்தார் எப்படி செய்தார் என்பதையும், ஊகமற்ற உண்மையான ஆதாரங்களுடன் வெளியிடுதல், எப்படி தவறுகள் மறைக்கப்பட்டு வருகிறது என்பதை அம்பலப்படுத்தி மக்களை விழிப்பூட்டுவதாக அமைய வேண்டும்.புலனாய்வு இதழியல் உரைபெயர்பு இதழியல் (Interpretive journalism/Interpretative Journalism)"which goes beyond the basic facts of an event or topic to provide context, analysis and possible consequences "ஆக அமையக் கூடாது.புலனாய்வு இதழியல் என்பது சொந்த முயற்சி, நீண்ட காலக்கெடு,ஆழ்ந்த ஆய்வு, நிறைவான செய்தி மூலங்கள், புதிய தளத்திலான பார்வை,அழுத்தங்கள் என்பவற்றை கடந்தே வெற்றி பெறும். புலனாய்வு இதழியலின் சாதகமான அம்சங்களாக(positive aspects)சனநாயகத்தை வலிமைப்படுத்தும்,ஊழல்களினை வெளிக்கொணர உதவும்,சமூக பொறுப்பு வாய்ந்ததாக அமையும், மக்களிற்கு அதிகாரத்தை பெற்று தரும், உண்மையை அம்பலப்படுத்தும்,அநீதிக்கு எதிரானதாகும்,போலி அற்ற அசலாக அமையும் தன்மை போன்றவற்றை குறிப்பிடலாம்.புலனாய்வு இதழியல் மரபு இதழியல் பண்புகளில் இருந்து வேறுபட்ட தொன்றாகும். புலனாய்வு இதழியல் மக்களுக்கு பிடித்த ஒரு விடயத்தை ஆழமாக அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தல்,புதிய பாணியில் தகவல்களை ஒண்றினைத்து வழங்குதல்,என்ன நடந்தது என்பதற்கான விளக்கத்தை மாத்திரம் வழங்காமல் ஏன் நடந்தது என்பதற்குரிய காரணத்தை பல சாட்சியங்கள் மற்றும் தடயங்கள் ஊடாக விளக்குவதாக அமைய வேண்டும்.இலகுவாக கூறினால்,இரகசியத்தை வெளிக்கொணரும் இதழியல் எனலாம்.புலனாய்வு இதழியல் என்பதற்காக வரைவிலக்கனத்தை UNESCO நிறுவனம் "Investigate Journalism involves exposing to the  public matters which are concealed either deliberately by someone in a position of power or accidentally behind a chaotic mass of facts and circumstances which obscure understanding. It requires using both secret and open sources and documents "அதாவது,  மக்களிற்கு அவசியமான விஷயம் அதிகாரத்தில் உள்ளவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும் சமயத்தில் அதனை வெளிக்கொண்டு வரும் இதழியல் என இலகுவாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.மேலும், புலனாய்வு இதழியல் என்பது ஊழல்களை அம்பலப்படுத்தும் இதழியல் என்ற தவறான மனப்பாங்கு எங்களிடையே உண்டு. இவ் இதழியல் அதிகார துஷ்பிரயோகம், பொது மக்கள் நிதி தவறான முறையில் செலவிடப்படல்,சுற்றுச்சூழல் அழிப்பு திட்டங்கள், மருத்துவத்துறை,அபிவிருத்தி,அநீதி,சுகாதாரம்,நன்கொடை போன்றவற்றில் புலனாய்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.புலனாய்வு இதழியல் என்பது கருதுகோள்களை உருவாக்கி அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க முனையும் முடியாத சமயங்களில் புலனாய்வு இதழியல் தோல்வியில் முடியும்.Investigate என்பதை ஆங்கில அகராதிகள் 'Systematic inquiry'அதாவது, ஒழுங்கு படுத்தப்பட்ட விசாரணையே புலனாய்வு(Investigation ) என்று வரைவிலக்கனம் வகுக்கின்றன. மேலும், புலனாய்வு இதழியல் புதிய பாதைகள் மற்றும் புதிய இராஜதந்திர சிந்தனைக்கு வழிவகுக்கின்றன. புலனாய்வு இதழியலிற்கான அறம் சார்ந்த விடயங்களை சிந்திக்கும் போது, அறம் சார் குழப்பங்கள்(Ethical dilemma)தோன்றினாலும் சட்டவரம்புகளிற்குட்பட்டே புலனாய்வு இதழியலை முன்னெடுப்பது எதிர்காலத்தில் சட்டச்சிக்கலை தவிர்க்க முடியும்.புலனாய்வு இதழியலில் இதழியலாளன் எதிர்கொள்ளும் சவால்களாக;புலனாய்வு இதழியல் தொடர்பான தெளிவான அறிவின்மை,அதிகரித்த பணம் முதலீடு, உயிர் அச்சுறுத்தல்,நிர்வாக சிக்கல் போன்றன முதன்மையான காரணங்கள் ஆகும். புலனாய்வு இதழியலாளன் ஒருவருக்கு அறிதலார்வம்,ஈடுபாடு,தர்கரீதியான ஒழுங்கு படுத்தும் சிந்தனை, நெகிழ்வத்தன்மை,சிறந்த முறையில் அறிக்கையிடும் ஆற்றல், பொது அறிவு மற்றும் ஆய்வு மனப்பாங்கு, பொறுமை,பங்கு பற்றல் ஆய்வு,தைரியம், சட்டப் புலமை,தியாகம்,அர்ப்பணிப்பு,குற்ற உளவியல் தொடர்பான அறிவு,ஆதாரங்களை தேடல்,சோரம் போகாமை,விலைபோகாமை, சாவாலை வெற்றி கொள்ளும் ஆற்றல் போன்றவை புலனாய்வு இதழியலாளனிற்குரிய  அடிப்படைப் பண்புகள் ஆகும்.எமது நாட்டை பொறுத்தவரை சாதாரணமாக ஊடகவியளனாக வேலை செய்வதே மிகச்சவாலானதொன்று.இந்த நிலையில் நவீன ஊடகங்களின் ஆதிக்கம்,ஊடகநிறுவனங்களின் பணம் மீதான பேராசை, கடந்தகாலத்தில் ஊடகவியளார்கள் கண்ட துயரம் நிறைந்த அனுபவங்கள் புலனாய்வு இதழியல் என்பதற்கான சந்தர்ப்பத்தை காலம்கடத்தவே செய்யும். எனினும் தகவல் அறியும் சட்டமூலத்தின் வருகை ஓரளவுக்கு புலனாய்வு இதழியலிற்கான சந்தர்ப்பத்தை அதிகம் வழங்கினாலும் புலனாய்வு இதழியலிற்கான இருப்பு மற்றும் நிலைப்பு என்பது கேள்விக்குறியே ஆகும்.இ.தனஞ்சயன் ஊடகத்துறை

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஆங்கில மொழி என்பது அறிவல்ல;மேலதிக அறிவை பெறுவதற்கான ஓர் ஊடகமே?

பாடசாலை மாணவர்களிடையே ஆங்கிலக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அடுத்த வருடம் முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு ஆங்கில பாடப்புத்தகத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.தற்போதைய நிலையில் தரம் மூன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே ஆங்கில பாடப்புத்தகம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அந்த வகையில்,குறித்த புதிய மாற்றத்துடன் ஆங்கில மொழியின் தற்கால அவசியம் தொடர்பாக சிந்திக்கப்போவதாகவே குறித்த பதிவு அமையப்போகின்றது.தகவல்கள் மற்றும் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள மொழி ஊடகமாக பயன்படுத்தப்படுகின்றது.மொழி என்பது சிந்திக்க அவசியம் அல்ல மாறாக சிந்தனையை எளிமைப்படுத்துவதாக அமைவதாக மொழியியல் வல்லுநர்கள்(Linguistic experts)கூறுகிறார்கள். மேலும் சில சீர்திருத்த சிந்தனையாளர்கள் மொழி தொடர்பாக தமது கருத்தியல்களை பதிவு செய்கிறார்கள்.R.C.Trench என்பவர் "Language is the closest fitting dress of thought " மொழிபெயர்ப்பு சிந்தனையின் மிக நெருக்கமான ஆடையே மொழி என்கிறார்.அதேபோன்று, Ahmed Deedat என்பவர் "Language is the key to the heart of people "மொழிபெயர்ப்பு மக்களின் இதயவாசலின் திறவுகோல் என்பது மொழி என்று கூறுகிறார்.இதேவேளை,பிற மொழிகளை கற்றல் தொடர்பாக Ray leobond குறிப்பிடும் போது,"A different language is a different vision of life " அதாவது, வேறுபட்ட மொழியினை கற்பது வேறுபட்ட சிந்தனை மனப்பான்மையை விருத்தி செய்துகொள்ள உதவும் என்று கூறுகிறார். அதேபோல், Haruki Murakami "Learning another language is like becoming another person "அதாவது இன்னுமோர் மொழியினை கற்றுக் கொள்வது இன்னும் ஒரு மனிதன் என்ற நிலைக்கு சமமானது என்று கூறுகிறார்.அத்துடன், மொழி என்பது சிந்தனையில் செல்வாக்கு செலுத்துகிறது. மொழியினை கற்பது என்பது செவிமடுத்தல் வாயிலாக இலகுபடுத்தப்படும்.ஒரு மொழி அறிவின் எல்லையே உலகத்தின் எல்லையாக கருதிக்கொள்ள முடியும்.எமது நாட்டில் மூன்று தசாப்த காலமாக இனப்பிரச்சினை தீர்கபடாமல் காணப்படுவதற்கு மொழியே இடைவெளியை உண்டுபன்னியமையும் மறுக்க முடியாத உண்மை.நமது வாழ்க்கையில் நாம் பிறந்து வளர்கின்ற சூழலில் நிலவும் மொழிகளை நாம் கற்றுக்கொள்கின்றோம்.மாமனிதர் நெல்சன் மன்டேலா மொழி தொடர்பாக கூறும்போது,"ஒருவருடன் உரையாடும்போது இதயபூர்வமாக ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர்களுடைய தாய்மொழியில் உரையாடுவதே சாலப் பொருத்தமானது" என தாய்மொழியின் சிறப்பை குறிப்பிடுகின்றார்.குறிப்பாக, நமது தாய்மொழியை எடுத்துக்கொண்டால்,பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்ட மொழி வழக்குகள் காணப்படுகின்ற தன்மையினை அவதானிக்க முடியும்.யாழ்ப்பாணத்தில் தமிழ், மட்டக்களப்பு தமிழ், மலையகத்தமிழ்,தமிழக தமிழ் என வேறுபட்ட தமிழ் உச்சரிப்பு வேறுபாட்டை அவதானிக்கமுடியும்.தகவல்கள் மற்றும் சிந்தனைகளினை பரிமாற்றம் செய்யும் தொடர்பாடலை இலகுபடுத்துவதாக மொழி காணப்படுகின்றது.மொழியை சிறந்த முறையில் கற்றுக்கொள்ள மொழித்திறன் அவசியம். அடிப்படை மொழித்திறன்களாக பேசுதல்,எழுதுதல், வாசித்தல்,செவிமடுத்தல் காணப்படுகின்றன.எனினும், உபதிறன்களாக (sub skills ) இலக்கணம், சொல்வளம், உச்சரிப்பு, பயன்பாடு,இரட்டைச் சொல்,உரையாடல் அற்ற மொழி போன்றவை அவசியமானவை.அண்மையில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்ஜித் சிங் சந்து ஹிந்தி தினத்தை முன்னிட்டு கொழும்பில் உரையாற்றும் போது"ஹிந்தி மொழியை இலங்கையர்கள் கற்பது சுற்றுலா தொழிற்றுறை வளர்ச்சிக்கு உதவும் "என்று தெரிவித்தார். தென்பகுதியில் சிங்கள மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மத்தியில் ஹிந்தி மொழி மீதான ஆர்வம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.களனிபல்கலைக்கழகத்தில் ஹிந்தி மொழிப்பிரிவு காணப்படும் அதேவேளையில் ஹிந்தி சினிமாமீதும் தென்பகுதியில் ஆர்வம் உள்ளமை கட்டுரையாளரின் அவதாணம்.
இதேவேளை,தமிழகத்தில் ஹிந்தி மொழி திணிப்புக்கு கடுமையான எதிர்ப்புள்ளமையும் ஒப்பிடவேண்டியது.ஒருவரின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதில் கருத்துக்களினை நியாயப்படுத்தி வாதிடுவதற்கு மொழிவல்லமை  முக்கியமான பங்குவகிக்கின்றது.அத்துடன், எதிர்வரும் ஆண்டு முதல் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பு நாடி செல்பவர்களுக்கு ஆங்கில மொழி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக இலங்கை நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். உலகமயமாக்கல் சூழலில் உலகமயமாக்கலினை இலகுபடுத்தும் ஆயுதமாக ஆங்கில மொழி காணப்படுகிறது.உலகமயமாக்கல் /பூகோளமயமாக்கல்(Globalization) என்பது வணிக,வர்த்தக, பொருளாதார மற்றும் தொடர்பாடல் போன்றவற்றின் உலகம்தழுவிய நகர்வே ஆகும்(Globalization is a process by which business develop international influence or start operating on an international scale/increasing and deepening interactions between individuals and organizations across the globe /The world wide movement towards economic, financial, trade & communications integration).குறித்த உலகமயமாக்கலின் வாயிலாக பல நன்மைகள் காணப்படுகிற அதேவேளையில் சில தீமையான விளைவுகளும் காணப்படுகின்றது.முதலில் நன்மைகளை நோக்கின்;உலகத்தை ஒருங்கினைத்தல்,சமநிலை பேணுதல், தொடர்பாடல் விரிவாக்கம், தொழில்நுட்ப முன்னேற்றம், பொறுப்பு கூறல், வறுமை ஒழிப்பு, அங்கீகாரம், வேலைவாய்ப்பு, சிறந்த வாழ்க்கை தரம், புதிய பொருட்களின் வரவு,சுகாதாரம் நலம் முன்னேற்றம், புதிய சந்தைவாய்ப்பு,சுற்றுலா துறை வளர்ச்சி, பண்பாடு ஒருங்கிணைப்பு, சர்வதேச வர்த்தக வியாபாகம், அரசியல் பொருளாதார ரீதியாக நாடுகள் இடையே உறவு,சர்வதேச சட்டம்,முதலீட்டு வாய்ப்புகள்,இராஜதந்திரம்,அதிக தகவல்களை கற்றுக் கொள்ளலாம், எல்லா வகையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் காணப்படும் போன்றவற்றிற்கு உதவுவதாக உலகமயமாக்கல் விளங்குகிறது.இதேவேளை,பண்பாட்டுகலப்பு ஏற்படுத்தும், போலிகள் மலிந்து காணப்படும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்,வர்த்தக பாதுகாப்பு இன்மை,வளங்கள் சுரண்டல், குறைந்த சம்பளம் போன்றன உலகமயமாக்கலின் எதிர்மறையான தாக்கங்களாகும்.இவ்வாறான உலகமயமாக்கல் தாக்கத்திலும் தொடர்பாடலிற்கான ஊடகமொழியாக ஆங்கிலம் காணப்படுகிறது.சீனாவானது உலகளாவிய ஆங்கில மோகத்தை நன்கு உணர்ந்து ஆங்கிலத்தில் தமது படைப்புகளை வெளியிடுவதில் கரிசனை கொண்டுள்ளது. உலக மொழியாகவும் உலக இணைப்பு மொழியாகவும் ஆங்கில மொழியாகவே காணப்படுகிறது.அத்தகைய ஆங்கில மொழியின் அவசியத்தை சிந்திப்போம். அடிப்படை மென்திறனை வளர்த்து கொள்ள உதவுகிறது. தொழில் சார் கதையை மற்றும் சந்தர்ப்பத்தை வளர்க்க உதவுகிறது.ஆக்க சிந்தனைக்கும் வழிகோலுவதாகவும் அமைகிறது.53 நாடுகளில் உத்தியோகபூர்வ மொழியாகவும் 400 மில்லியனிற்கு மேற்பட்ட மக்களின் முதன்மை மொழியாகவும் உள்ளது.தொழில்நுட்பம், கணினி, இனணயம், சுற்றுலா தொழிற்றுறை, இராஜதந்திரம் போன்றவற்றின் மொழியாகவும் ஆங்கிலமே உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னெடுக்கப்போவதாக அண்மையில் காலிமுகத்திடலில் wi-Fi பனல் கருவிகளை அறிமுகம் செய்யும் விழாவில் உரையாற்றிய பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.இது எதிர்காலத்தில் ஆங்கில மொழியின் பெறுமானதினை மேலும் உயர்த்த போகிறது என்பது கணிப்பு.டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடக மொழியாக காணப்படுவது ஆங்கிலமே ஆகும்.பெரும்பாலான அறிவியல் தகவல்கள் கொட்டிக் கிடப்பதும் ஆங்கில மொழியிலேயே! உலகில் 65% மானவர்கள் ஆங்கில மொழியை பயன்படுத்துகின்றனர்.அதேபோல, ஆங்கில மொழியை கற்றுக் கொள்ளாதவர்கள் உலக அறிவியலில் அரைவாசியையே கற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறான ஆங்கில மொழியானது மேலதீக அறிவினை பெற்றுக்கொள்வதற்கான வழியாக காணப்படுகின்றதே அன்றி ஆங்கிலம் மட்டுமே அறிவு என்ற கணிப்பு தவறானது.ஆங்கில மொழியில் உள்ள நல்ல விடயங்களை மொழிபெயர்ப்பு வாயிலாக எமது மொழியில் இணைத்துக் கொள்வது எமது மொழியின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பாக அமையும்.அத்துடன்,ஒரு மொழியின் இருப்பை தக்கவைப்பதணூடாகவே இனத்தின் இருப்பையும் தக்கவைத்துக் கொள்ள முடியும். நிறைவாக,"ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம்;ஒரு சொற்கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்தல் வேண்டும்;இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்;மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் மகிமை இல்லை;திறமையான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்."என்ற பாரதியின் தமிழ் முழக்கம் செய்வீர் என்ற கவிதையை நினைவுபடுத்தி இச் சிறிய வலைப்பூப் பதிவை நிறைவுசெய்கின்றேன்.இ.தனஞ்சயன் ஊடகத்துறை

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

சாகடித்த கல்வி முறைமை வாழவைக்குமா?

"உலகை மாற்றும் மிகப்பெரிய ஆயுதம் கல்வி" என்பது மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் அற்புதமான கருத்தும் தத்துவஞானி  சோக்கிரட்டீஸின் "எனக்கு கற்பிக்க தெரியாது சிந்திக்க வைக்கவே முடியும்". குறித்த சிந்தனைகளை அடிப்படை ஆதார சிந்தனைகளாக் கொண்டு எமது கல்வியின் எதிர்காலம் குறித்து சிந்திக்க போவதாகவே இச் சிறிய பத்தி வடிவில் அமையப்போகின்றது.நீண்ட காலத்திற்கு முன்னர் திரைப்படங்களில் ஆர்வமாக இருந்த சமயத்தில் பார்த்து ரசித்த திரைப்படம்,பிரமாண்டமான இயக்குனர் என்று தற்போது சொல்லப்படுகின்ற ஷங்கரின் முதற் படம் ஜென்டில்மேன் ஆக்சன் கிங் அர்ஜுனின் அசத்தலான நடிப்பு இசைபுயலின் 90கால மெல்லிசை குறிப்பாக ஒட்டகத்தை கட்டிக்கோ......என்ற பாடல் செந்தில் கவுண்டமணி கூட்டனியிலான நகைச்சுவை மற்றும் மனோரமா, நம்பியாரின் பாத்திர வார்ப்பு பிரமாதம்.எனினும், அத்திரைப்படத்தின் திரைக்கதையானது கல்வித் துறையில் லஞ்சம் இருக்ககூடாது எனவும் குறித்த லஞ்சம் வாங்குவதால் அர்ஜுன் மற்றும் நண்பன் மருத்துவ படிப்பை இழப்பதும்,இதனால் ஏமாற்றத்தில் வலிதாங்காது அர்ஜுன் தாய் மற்றும் நண்பன் தற்கொலை செய்வதும் அதைத் தொடர்ந்து அர்ஜுன் கொள்ளை காரன் ஆவதுமாக திரைப்படத்தில் ஆழமான கருத்துக்கள் உரையாடப்படுகின்றது.இறுதியில் மருத்துவ பட்டப்படிப்புக்கு தகுதி இருந்தும் கையூட்டால் ஏமாற்றம்மடைந்த ஒருவன் குறித்த அரசியல் வாதியை தற்கொலை அங்கி தாங்கி தன்னை தானே அழித்தும் அரசியல் வாதியையும் கொல்கிறார் எதிர்கால தனது சகோதர சகோதரிகளின் உயர்ந்த லட்சியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக அத்தோடு படமும் முடிவடைகிறது.சக்கைபோடு போட்ட படம் வெளியாகி 20 வருடமாகி விட்டது. அதே தமிழகத்தில் அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார் என்ற செய்தியானது மிகவும் வேதனையும் கல்வியின் பெறுமானம் மீதான தொலைநோக்கு அற்றஅரசின் போக்கு அரசியல் வாதிகளின் பொதுஅறிவற்ற தன்மையையே காட்டி நிற்கிறது.அனிதாவின் மரணம் தொடர்பாக இரங்கல் மற்றும் அனுதாபம் தெரிவித்து அரசியல் சுயலாபம் பெறும் முயற்சியில் தமிழக வெட்கம் கெட்ட அரசியல் வாதிகள் இறங்கியிருக்கிறார்களே தவிர தீர்வு காணும் வகையில் அல்ல.எமது நாட்டில் கூட சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அரச மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பினை ஏழு மாதங்களுக்கு  மேலாக மேற்கொண்டு வருவதும் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருவது குறித்து சிந்திக்க வைக்கும் வகையில் தமிழகத்தில் மருத்துவ கல்லூரிக்கு உரிய பெறுபேறு பெற்றும் தெரிவு செய்யப்படாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரனம் கூறிவிட்டு சென்று இருக்கின்றது.மேலும், மிக அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவி மற்றும் இந்த வருடம் உயர் தரம் எழுதிய மாணவர்கள் கடலில் மூழ்கி மரனமானவை குறித்து சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. தன்னை பாதுகாத்து, தன் நம்பிக்கை அளித்து,பிரச்சனைகளிற்கு தீர்வு கண்டு,குழுவாக பணியாற்றும் ஆற்றல்,தலைமைத்துவ பண்பு விருத்தி,நுண்னறிவுத்திறன்,உலக ஓட்டத்தில் நாமும் போட்டி போட்டு வெற்றி பெற்று,தொழில் திறன்களை வளர்க்கும் வகையான கல்வி முறைமை இலங்கை பல்கலைக்கழக வரையிலான கல்வி முறையில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.இதன்காரணமாகவே,இன்று பட்டதாரிகள் போராட்டம், அரசாங்க வேலை இல்லாபிரச்சினை,அரசியல் வாதிகளை வால்பிடித்தல்,வெளிநாட்டு மோகம்,இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் நாட்டம் செலுத்தல் போன்றன அடிப்படையில்,கல்வி முறையில் காணப்படும் குறைபாடே ஆகும்.கல்வியில் காணப்படும் பரீட்சை முறை அளவீடு என்பது கடின உழைப்பை அளவிடுகிறதே தவிர புலமையை அளவீடு செய்வதில்லை.இலங்கையில் காணப்படும் பரீட்சை முறைகளான புலமைபரிசில் என்னும் மாணவர்களை உணர்ச்சியற்ற எந்திரனாக நினைக்கும் பரீட்சையை தடை செய்து கா/பொ/த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளை மாற்றி அமைத்து அபிவிருத்தி அடைந்த நாடுகளின் கல்விமுறையை சவால்களினை தகர்த்து அமுலாக்க வேண்டும்.அத்துடன் தேசிய கல்வி னைக்குழுவால் முன்மொழியப்பட்ட பாடசாலை படிக்கும் காலப்பகுதியை குறைத்து பாடசாலை காலப்பகுதியில் புத்தகம் மற்றும் பாடத்திட்டத்தை தாண்டிய உலகை எதிர்கால மானவர்கள் சமுதாயத்திற்கு காட்டும் போதே உலகை வெற்றி கொள்ளும் மாணவர் சமூகத்தை உருவாக்க முடியும் அல்லாவிடில் மேற்குலத்தை பார்த்து கைதட்ட வேண்டிய நிலையே முடிவாகும் என்பது கண்கூடு.அத்துடன், கல்வி யானது  வளமான எதிர்காலதிற்கான கடவுச்சீட்டாக அமைய வேண்டுமே தவிர,தற்கொலைக்கான கடவுச்சீட்டாக அமையக்கூடாது.இ.தனஞ்சயன்.