அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
ஆக்கத்தொடர்பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆக்கத்தொடர்பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 டிசம்பர், 2017

கருத்தின் ஆழம் குறைவுபடாமல் இருப்பதே கவிதை!

படைப்பாளியின் எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள் போன்ற மன உணர்வுகள் படைப்பாக வெளிவரும் போதே படைப்பாளி சுயதிருப்த்தி அடைகின்றான்.படைப்பாளி தனது திறமைகளை ஏதோஒரு வகையில் தனது ஆக்கப் படைப்புகளை வெளிஉலகிற்கு வெளிக்கொணர முயல்கின்றான்.சில சமயங்களில் வெற்றி பெறும் படைப்பாளி பல சமயங்களில் காணாமலே போய்விடுகின்றான்.படைப்பாளி தனது சூழலில் இருந்தே தனது ஆக்கப் படைப்புகுரிய கருப்பொருளை பெற்று கொள்கின்றான். சூழல்கள் மாறும் போது படைப்பின் தன்மைகளும் மாறுபடுகிறது.அந்தவகையில், இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாகக் கூறப்படுகிறது. இலக்கிய வகையில் முக்கியமானதாக கவிதை விளங்குகிறது. இது சிறுகதை,நாவல், கட்டுரை போன்றவற்றின் சுபாவங்களில் இருந்து மாறுபட்ட இயல்பு கொண்டது.கவிதையானது ஒருவரின் உளக்குமுறல்கள் மொழி வடிவம் பெறும் போது தோற்றம் பெறுவதாகும்.கவிஞர் பிறைசூடன் கவிதை தொடர்பாக கூறும் போது பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றவர்கள் தமிழ் கவிதை உலகில் அனைத்தையும் தொட்டுவிட்டார்கள்.நாம் வரிவடிவம் மற்றும் வார்த்தைகளில் மாத்திரமே மாற்றம் செய்து வருகின்றோம் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது. கவிதையானது எந்த அடக்குமுறை சூழலில் இருந்தாலும், ஏதோஒரு குமுறலாக வெளிவந்துவிடுவது அதன் சிறப்புத்தன்மையாகும்.அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் கல்வி பயிலும் கவிஞர் முகமது அஸ்கரின் கன்னி கவிதைத் தொகுப்பான"விரியும் போராடும் அரும்புகள்" ஒக்ரோபர் மாதம் 11ம் தி கதி கைலாசபதி கலையரங்கில் வெளியீடு தெரிவுசெய்யப்பட்டு இருந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.கவிதை வெளியீடு விழாவுக்கு அழைப்பு வந்தும் அண்றைய வெளியிட்டு விழாவில் தவிர்க்க முடியாத சில தனிப்பட்ட காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லை.ஆயினும், கவிஞரினை பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாகசந்தித்து கவிதைபுத்தகத்தை பெற்று வாசித்த அனுபவித்த உணர்வுகளை திறனாய்வுத்தளத்தில் வலைப்பூபதிவாக்கலாம் என எண்ணுகிறேன்.கவிதை என்பது சமூகத்தின் உணர்வு பிரவாகம் எனலாம்.கவிஞர் அஸ்கர் தனது உணர்வுகளை விரியும் போராடும் அரும்புகள் என்று கவிப்புத்தகத்திற்கு பெயரிட்டுள்ளார் என எடுத்துக் கொள்ளலாம். காரணம், உணர்வுகள் ஓர் ஒழுங்கு முறையில் வார்த்தைகளாகி வரியாகி கவிதையாகின்றது எனலாம்."விரும்பிகள் கொடுத்த காலம் திருடித்தின்னும் காலமே இச் சீர் வரிசை"என்று சீதனம் கொடுமையை சீர் வரிசை எனும் சீதனம் எனும் கவிதையில் கூறுகிறார்.விழுந்தாலும் விதையாகிடு எனும் கவிதையில் "துச்சமும் அச்சமும் உன் இதயங்கள் எனக்கும்வேண்டும் தோழா வீரநடை போட்டதால் நீ மண்ணிலே இன்றும் மணம் வீசுகின்றாய் "என்ற கவிவரிகளில் சோசலிச சித்தாந்ததை வலியுறுத்தியுள்ளார்.

முன் பக்க அட்டைப்படத்திலேயே கவிஞன் கவியின் கருப்பொருளின் ஆழத்தை உணர்த்தியுள்ளதோடு மலையகமக்களின் எதிர்பார்ப்புகளை அரும்புகளாக உவமைபடுத்தியுள்ளமை சிறப்பு.இதே சமயம் ஒரு இளம் கவிஞராக அஸ்கர் கூட ஒரு வகையில் விரியப்போராடும் அரும்பு என்று அர்தப்படுத்திக் கொள்ளலாம்.
இதேவேளை,உழைப்பே உயர்வு என்ற ஒரு கவிதையின் ஆரம்பம் இவ்வாறு அமைகிறது "மூடநம்பிக்கைகளை முடக்கிவிட்டு முடியும் என்ற முடிவோடு வா தோழனே" என்ற கவி வரியானது தன்னம்பிக்கையூட்டும் வரிகளாக அமைகிறது.மேலும், மற்றொரு கவிதையில்
"காலம் காலமாய்
மீட்சி இல்லாப் போராட்டத்தில்
தூளாய் போகின்றது....."மலையகமக்களின் அரசியல் ரீதியாக ஏமாற்றப்படுவதை சலித்து கவிதை வாயிலாகசொல்கிறார்.காணாமல் போன கணவுகள் எனும் கவிதையில்"காலமெல்லாம் காணாமல் போய் கனவுகள் கூட கஞ்சத்தனம் காட்டுகின்றன "எவ்வளவு சோகம் ஏமாற்றம் கணவுகள் கான்பதற்கே நம்பிக்கை அற்ற தன்மை. ஆழ்ந்த சிந்தனை மிக்க வரிகள்.உன்மை நட்பு எனும் கவிதையில் "பாலினம் தடையில்லை உணர்வுகள் ஒன்றானால் தோழன் துனைநிற்பான்"ஆன் பென் நட்பின் புனிதமான தன்மையை குறிப்பிடுகிறார்.பெண்ணின் கொடுமை எனும் கவிதையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டு இறுதி வரிகளில்"தடுத்து எதிர் நிற்க தூக்குதண்டனையை வரச்சொல்லங்களே"என பெண்களின் விடுதலைக்கான அவசியத்தையும் அதற்கு தீர்வாக தூக்குத்தண்டனையும் தனது கவிதையில் வலியுறுத்தியுள்ளார்.தோட்ட தொழிலாளிகள் எனும் கவிதையில் "கட்டைகள் காற்சட்டை வெள்ளையனின் அடி மட்டம் போனபின்னும் போகவில்லை "என்று மலையக மக்கள் தொடர்ந்தும் அடிமைத்தனம் நிறைந்த வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார். நிதியும் நீதியும் எனும் கவிதையில் "நிதி தான் நீதியா இது தான் நியதியா"என நீதி நிதிக்கு பின்னால் என்ற தற்கால நிலமையை கவிதையில் சொல்கிறார்.

"புயலோடு போராடும்
தூக்கணாம் குருவி கூட்டைப் பார்
உழைப்பால் உயர்ந்து போய்
உயரத்திலேயே வாழ்கிறது
மகுடிக்கு வளைந்தாடும்
பாம்பாக ஆகாதே
முடிவின் ஆரம்பத்திலும்
முதுகெலும்போடு உழைத்து வாழ்"
என்று உழைப்பின் அவசியத்தை உழைப்பே உயர்வு எனும் கவிதையில் உணர்த்துகின்றார்.உழவனின் உழுத மனம் எனும் கவிதையில் "உழவன் மனம் ஓயந்து விட்டால் உண்பதற்கு சோறிறின்றி நாற்றோடு சேற்றில் இறங்குவதே மனிதனின் விதி ஆகிவிடும் "விவசாயத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும்கவிஞரின் தொலைநோக்கு பாராட்டுக்குரியது.வடுக்கள் எனும் இன்னொரு கவிதையில்"இறுதி சடங்கு செய்து கொள்ளி வைக்கப் பெற்றெடுத்த மகளைத் தொலைத்து துடிக்கும் பெற்றவரின் கதறல்கள்"என்று போர்காரணமாக இறந்த இளைஞர்களின் பெற்றோரின் மனவருத்தத்தை கவிஞர் அழகாக பதிவு செய்கிறார்.நாகரீகம் உட்புகுந்த மானிடம் எனும் கவிதையில் "சுகங்களை சுத்தமாக காணோம் சூனியமாய் ஆனது உலகே"என்று உலகமயமாக்கலின் தாக்கத்தை கூறும் கவிஞர் குறித்த கவிதையின் இறுதி வரியில் நமக்கெல்லாம் ஆகுமா நாகரீகம்? என்று முடிக்கிறார். இது உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல்என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனி என்பதாகவே கருத்து கொள்ளவேண்டியுள்ளது.

"கல்வி உன் உயர்வெனவும்
ஒழுக்கம் உன் சிறப்பெனவும்
இவையோடு மலர்தலே
உன் புகழ் எனவும் உரைத்திட வேண்டும்"
என்று விளையும் பயிர் எனும் கவிதையில் கல்வியின் அவசியம் பற்றி குறிப்பிடுகின்றார்.அத்துடன், செல்லாக்காசு எனும் கவிதையின் இறுதியில் "புரிதல் வேண்டும் உலகே-காசு புதிதாய் இனிக்கும் நஞ்சே"என்று காசின் தன்னம பற்றி சிந்திக்க வைக்கின்றார்.

நான்,தமிழோடுவிளையாடுமனமே,உழைப்பே உயர்வு,கருகிய மலர் சிரிக்கிறது, சிறகொடிந்தபறவை,
விளையும் பயிர்,தூரத்து நிலா,விளையும் பயிர்,
யார் குற்றம்,தேம்பியழும் சுவர்கள்,
விரிய போராடும் அரும்புகள்,ஒரு மயிலிறகால்,
பாலஸ்தீனக் குரல்,குருவிக்கூடு,
காணி நிலம் வேண்டும்,
கடல்வாழ் காகித ஓடம்,முகிலின் துளிகள், சீர்வரிசை எனும் சீதனம்,
என் உயிர் தங்கை,கடல்வாழ் காகித ஓடம்,கடைசி முத்தம்,உயிருள்ள மரணம்,வறுமை விலகாதோ,
புறப்படு புதுமைப் பெண்ணே,
வடுக்கள்,காணாமல் போன கனவுகள்,உண்மைநட்பு,தோட்டத்தொழிலாளிகள்,பெண்ணினக் கொடுமை
வட்டியில்லா கடன்,
மீளாத மியன்மார்ப் படகுகள்,உழவனின் உழுத மனம்,மொட்டின் மொழி ,வறுமை விலகாதோ,அவசரக் கல்யாணம்
சதுரங்க வேட்டை,இறுதி நாழிகை என்று சமூககவிதைகள்,பொருளாதார,அரசியல் மற்றும் காதல் கவிதைகள் என அனைத்தும் தற்காலத்தின் நிலைமையை உரையாடும் பாங்கில் கவிதை அமைந்துள்ளது.கவிஞன் எனும் கவிதையில் அஸ்கர் கவிதைக்கு பின்வருமாறு வரைவிலக்கனம் கொடுக்கின்றார்"கவிஞ்ஞனின் கற்பனையை இலக்கனம் கற்பிக்க முடியாது இது தான் அதுவென்றாலும் அது கவிதான்"என்று கூறுகிறார். கவிதையின் வரிகள் அற்புதமானது.கன்னி படைப்பினை இவ்வளவு சிறப்பாக செய்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. கவிஞர் முகமது அஸ்கரின் முக நூல்களில் பார்த்து ரசித்த கவிதைகள்
இன்று நூல் வடிவில் உருவாகி இருப்பது மிகவும் பொக்கிஷமான விஷயமாகும். முகப்புத்தகத்துக்குள் தனது கவிதையை சிக்கவிடாமல் அச்சு வடிவில் வெளி உலகிற்கு கொண்டு வந்தமை சிறப்பானது.அச்சு வடிவில் கவிதை வாசிப்பு அனுபவம் அலாதியானது.விரியப் போராடும் கவிதைகள் என்ற கவிஞர் முகமது அஸ்கரின் கவிப்புத்தகம் கவிஉலகிற்கு அமையும் என்பதில் எந்த சந்தேகமும்இல்லை. இறுதியாக மொட்டின் மொழி எனும் கவிதையில் கவிஞர் குறிப்பிட்ட "உலகம் இன்று இருட்டறையில் இனி நீயாவது விழித்துக்கொள்"என்ற வரிகளை சிந்தித்துக்கொண்டு எனது இச் சிறு வலைப்பூப்பதிவினை நிறைவு செய்து மற்றும் ஓர் வலைப்பூப்பதிவில் விரைவில் சந்திக்கின்றேன். இ.தனஞ்சயன்.ஊடகத்துறை

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஆங்கில மொழி என்பது அறிவல்ல;மேலதிக அறிவை பெறுவதற்கான ஓர் ஊடகமே?

பாடசாலை மாணவர்களிடையே ஆங்கிலக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அடுத்த வருடம் முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு ஆங்கில பாடப்புத்தகத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.தற்போதைய நிலையில் தரம் மூன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே ஆங்கில பாடப்புத்தகம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அந்த வகையில்,குறித்த புதிய மாற்றத்துடன் ஆங்கில மொழியின் தற்கால அவசியம் தொடர்பாக சிந்திக்கப்போவதாகவே குறித்த பதிவு அமையப்போகின்றது.தகவல்கள் மற்றும் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள மொழி ஊடகமாக பயன்படுத்தப்படுகின்றது.மொழி என்பது சிந்திக்க அவசியம் அல்ல மாறாக சிந்தனையை எளிமைப்படுத்துவதாக அமைவதாக மொழியியல் வல்லுநர்கள்(Linguistic experts)கூறுகிறார்கள். மேலும் சில சீர்திருத்த சிந்தனையாளர்கள் மொழி தொடர்பாக தமது கருத்தியல்களை பதிவு செய்கிறார்கள்.R.C.Trench என்பவர் "Language is the closest fitting dress of thought " மொழிபெயர்ப்பு சிந்தனையின் மிக நெருக்கமான ஆடையே மொழி என்கிறார்.அதேபோன்று, Ahmed Deedat என்பவர் "Language is the key to the heart of people "மொழிபெயர்ப்பு மக்களின் இதயவாசலின் திறவுகோல் என்பது மொழி என்று கூறுகிறார்.இதேவேளை,பிற மொழிகளை கற்றல் தொடர்பாக Ray leobond குறிப்பிடும் போது,"A different language is a different vision of life " அதாவது, வேறுபட்ட மொழியினை கற்பது வேறுபட்ட சிந்தனை மனப்பான்மையை விருத்தி செய்துகொள்ள உதவும் என்று கூறுகிறார். அதேபோல், Haruki Murakami "Learning another language is like becoming another person "அதாவது இன்னுமோர் மொழியினை கற்றுக் கொள்வது இன்னும் ஒரு மனிதன் என்ற நிலைக்கு சமமானது என்று கூறுகிறார்.அத்துடன், மொழி என்பது சிந்தனையில் செல்வாக்கு செலுத்துகிறது. மொழியினை கற்பது என்பது செவிமடுத்தல் வாயிலாக இலகுபடுத்தப்படும்.ஒரு மொழி அறிவின் எல்லையே உலகத்தின் எல்லையாக கருதிக்கொள்ள முடியும்.எமது நாட்டில் மூன்று தசாப்த காலமாக இனப்பிரச்சினை தீர்கபடாமல் காணப்படுவதற்கு மொழியே இடைவெளியை உண்டுபன்னியமையும் மறுக்க முடியாத உண்மை.நமது வாழ்க்கையில் நாம் பிறந்து வளர்கின்ற சூழலில் நிலவும் மொழிகளை நாம் கற்றுக்கொள்கின்றோம்.மாமனிதர் நெல்சன் மன்டேலா மொழி தொடர்பாக கூறும்போது,"ஒருவருடன் உரையாடும்போது இதயபூர்வமாக ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர்களுடைய தாய்மொழியில் உரையாடுவதே சாலப் பொருத்தமானது" என தாய்மொழியின் சிறப்பை குறிப்பிடுகின்றார்.குறிப்பாக, நமது தாய்மொழியை எடுத்துக்கொண்டால்,பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்ட மொழி வழக்குகள் காணப்படுகின்ற தன்மையினை அவதானிக்க முடியும்.யாழ்ப்பாணத்தில் தமிழ், மட்டக்களப்பு தமிழ், மலையகத்தமிழ்,தமிழக தமிழ் என வேறுபட்ட தமிழ் உச்சரிப்பு வேறுபாட்டை அவதானிக்கமுடியும்.தகவல்கள் மற்றும் சிந்தனைகளினை பரிமாற்றம் செய்யும் தொடர்பாடலை இலகுபடுத்துவதாக மொழி காணப்படுகின்றது.மொழியை சிறந்த முறையில் கற்றுக்கொள்ள மொழித்திறன் அவசியம். அடிப்படை மொழித்திறன்களாக பேசுதல்,எழுதுதல், வாசித்தல்,செவிமடுத்தல் காணப்படுகின்றன.எனினும், உபதிறன்களாக (sub skills ) இலக்கணம், சொல்வளம், உச்சரிப்பு, பயன்பாடு,இரட்டைச் சொல்,உரையாடல் அற்ற மொழி போன்றவை அவசியமானவை.அண்மையில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்ஜித் சிங் சந்து ஹிந்தி தினத்தை முன்னிட்டு கொழும்பில் உரையாற்றும் போது"ஹிந்தி மொழியை இலங்கையர்கள் கற்பது சுற்றுலா தொழிற்றுறை வளர்ச்சிக்கு உதவும் "என்று தெரிவித்தார். தென்பகுதியில் சிங்கள மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மத்தியில் ஹிந்தி மொழி மீதான ஆர்வம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.களனிபல்கலைக்கழகத்தில் ஹிந்தி மொழிப்பிரிவு காணப்படும் அதேவேளையில் ஹிந்தி சினிமாமீதும் தென்பகுதியில் ஆர்வம் உள்ளமை கட்டுரையாளரின் அவதாணம்.
இதேவேளை,தமிழகத்தில் ஹிந்தி மொழி திணிப்புக்கு கடுமையான எதிர்ப்புள்ளமையும் ஒப்பிடவேண்டியது.ஒருவரின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதில் கருத்துக்களினை நியாயப்படுத்தி வாதிடுவதற்கு மொழிவல்லமை  முக்கியமான பங்குவகிக்கின்றது.அத்துடன், எதிர்வரும் ஆண்டு முதல் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பு நாடி செல்பவர்களுக்கு ஆங்கில மொழி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக இலங்கை நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். உலகமயமாக்கல் சூழலில் உலகமயமாக்கலினை இலகுபடுத்தும் ஆயுதமாக ஆங்கில மொழி காணப்படுகிறது.உலகமயமாக்கல் /பூகோளமயமாக்கல்(Globalization) என்பது வணிக,வர்த்தக, பொருளாதார மற்றும் தொடர்பாடல் போன்றவற்றின் உலகம்தழுவிய நகர்வே ஆகும்(Globalization is a process by which business develop international influence or start operating on an international scale/increasing and deepening interactions between individuals and organizations across the globe /The world wide movement towards economic, financial, trade & communications integration).குறித்த உலகமயமாக்கலின் வாயிலாக பல நன்மைகள் காணப்படுகிற அதேவேளையில் சில தீமையான விளைவுகளும் காணப்படுகின்றது.முதலில் நன்மைகளை நோக்கின்;உலகத்தை ஒருங்கினைத்தல்,சமநிலை பேணுதல், தொடர்பாடல் விரிவாக்கம், தொழில்நுட்ப முன்னேற்றம், பொறுப்பு கூறல், வறுமை ஒழிப்பு, அங்கீகாரம், வேலைவாய்ப்பு, சிறந்த வாழ்க்கை தரம், புதிய பொருட்களின் வரவு,சுகாதாரம் நலம் முன்னேற்றம், புதிய சந்தைவாய்ப்பு,சுற்றுலா துறை வளர்ச்சி, பண்பாடு ஒருங்கிணைப்பு, சர்வதேச வர்த்தக வியாபாகம், அரசியல் பொருளாதார ரீதியாக நாடுகள் இடையே உறவு,சர்வதேச சட்டம்,முதலீட்டு வாய்ப்புகள்,இராஜதந்திரம்,அதிக தகவல்களை கற்றுக் கொள்ளலாம், எல்லா வகையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் காணப்படும் போன்றவற்றிற்கு உதவுவதாக உலகமயமாக்கல் விளங்குகிறது.இதேவேளை,பண்பாட்டுகலப்பு ஏற்படுத்தும், போலிகள் மலிந்து காணப்படும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்,வர்த்தக பாதுகாப்பு இன்மை,வளங்கள் சுரண்டல், குறைந்த சம்பளம் போன்றன உலகமயமாக்கலின் எதிர்மறையான தாக்கங்களாகும்.இவ்வாறான உலகமயமாக்கல் தாக்கத்திலும் தொடர்பாடலிற்கான ஊடகமொழியாக ஆங்கிலம் காணப்படுகிறது.சீனாவானது உலகளாவிய ஆங்கில மோகத்தை நன்கு உணர்ந்து ஆங்கிலத்தில் தமது படைப்புகளை வெளியிடுவதில் கரிசனை கொண்டுள்ளது. உலக மொழியாகவும் உலக இணைப்பு மொழியாகவும் ஆங்கில மொழியாகவே காணப்படுகிறது.அத்தகைய ஆங்கில மொழியின் அவசியத்தை சிந்திப்போம். அடிப்படை மென்திறனை வளர்த்து கொள்ள உதவுகிறது. தொழில் சார் கதையை மற்றும் சந்தர்ப்பத்தை வளர்க்க உதவுகிறது.ஆக்க சிந்தனைக்கும் வழிகோலுவதாகவும் அமைகிறது.53 நாடுகளில் உத்தியோகபூர்வ மொழியாகவும் 400 மில்லியனிற்கு மேற்பட்ட மக்களின் முதன்மை மொழியாகவும் உள்ளது.தொழில்நுட்பம், கணினி, இனணயம், சுற்றுலா தொழிற்றுறை, இராஜதந்திரம் போன்றவற்றின் மொழியாகவும் ஆங்கிலமே உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னெடுக்கப்போவதாக அண்மையில் காலிமுகத்திடலில் wi-Fi பனல் கருவிகளை அறிமுகம் செய்யும் விழாவில் உரையாற்றிய பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.இது எதிர்காலத்தில் ஆங்கில மொழியின் பெறுமானதினை மேலும் உயர்த்த போகிறது என்பது கணிப்பு.டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடக மொழியாக காணப்படுவது ஆங்கிலமே ஆகும்.பெரும்பாலான அறிவியல் தகவல்கள் கொட்டிக் கிடப்பதும் ஆங்கில மொழியிலேயே! உலகில் 65% மானவர்கள் ஆங்கில மொழியை பயன்படுத்துகின்றனர்.அதேபோல, ஆங்கில மொழியை கற்றுக் கொள்ளாதவர்கள் உலக அறிவியலில் அரைவாசியையே கற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறான ஆங்கில மொழியானது மேலதீக அறிவினை பெற்றுக்கொள்வதற்கான வழியாக காணப்படுகின்றதே அன்றி ஆங்கிலம் மட்டுமே அறிவு என்ற கணிப்பு தவறானது.ஆங்கில மொழியில் உள்ள நல்ல விடயங்களை மொழிபெயர்ப்பு வாயிலாக எமது மொழியில் இணைத்துக் கொள்வது எமது மொழியின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பாக அமையும்.அத்துடன்,ஒரு மொழியின் இருப்பை தக்கவைப்பதணூடாகவே இனத்தின் இருப்பையும் தக்கவைத்துக் கொள்ள முடியும். நிறைவாக,"ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம்;ஒரு சொற்கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்தல் வேண்டும்;இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்;மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் மகிமை இல்லை;திறமையான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்."என்ற பாரதியின் தமிழ் முழக்கம் செய்வீர் என்ற கவிதையை நினைவுபடுத்தி இச் சிறிய வலைப்பூப் பதிவை நிறைவுசெய்கின்றேன்.இ.தனஞ்சயன் ஊடகத்துறை

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

கோட்பாடு சார்ந்த சினிமா ரசனை புதுமையானது!

இலத்திரனியல் ஊடகங்களின் தற்கால எழுச்சி மக்களின் அகங்களை ஊடுருவி மதிமயக்கச் செய்து ஊடக நுகர்வோரினை செயலற்றவர்களாக்குவதே ஆகும். இதற்கான ஆதாரங்கள் ஆக அண்மையில் விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Big boss மற்றும் விவேகம் திரைப்பட வெளியீட்டுக்காக நம்மவர்கள் செய்த விளம்பரம் மற்றும் மெர்சல் இசை வெளியீடு விழா போன்றவற்றை குறிப்பிடலாம். இத்தகைய ஊடகங்கள் பார்வையாளர்களின் நிலைமையினை நன்கு அறிந்து தமது நிகழ்ச்சியை திட்டமிட்டு தமது வணிக இலக்கை அடைகிறது.தொலைக்காட்சி மற்றும் சினிமா இன்று பாரிய ஊடுருவலை மக்களின் மனதில் ஏற்படுத்தி விட்டது. அந்த வகையில், திரைப்பட ரசனை என்ற எண்னகருவானது யாதெனில் திரைப்படம் ஒன்றை கோட்பாடு ரீதியில் அணுகுதல் என்ற  ரசனை முன்மாதிரியானது.திரைப்படத்தை பார்த்தல்,திரைப்படத்தை விளங்கிகொள்ளுதல்,கலை,பண்பாடு, பயனுள்ள பொழுதுபோக்கு மற்றும் பிரச்சாரமாக திரைப்படம் காணப்படுகின்றது.சினிமாவை ரசிக்கும் போது,சினிமா மொழியான frame,shot,scene,transition, sequence and camera movement & angles,sound போன்றவற்றை கூர்ந்து அவதானிக்க வேண்டும்.அத்துடன் கோட்பாட்டு ரீதியான திரைப்பட விமர்சனம் மற்றும் திறனாய்வு புதிய திரைப்பட அனுபவம் மற்றும் ரசனையை ஏற்படுத்தும்.பெரும்பாலான நம்மில் பலர் பொழுதுபோக்கு மற்றும் மன ஆறுதல் நோக்கி திரைப்படம் மற்றும் ஏனைய ஊடகங்களினை அனுகுவதால் ஊடகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கவேண்டிய துரதிர்ஷ்டமான சூழ்நிலை.சினிமாவின் ஆதிக்கம் இன்று அனைத்து ஊடகங்களினையும் ஆக்கிரமித்துவிட்டது. இது தற்போதைய நிலையில் தவிர்க்க முடியாத. வாழ்க்கையில் ஒன்றோடொன்று கலந்துவிட்டது.பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் என எங்கும் சினிமாவின் செல்வாக்கு தான்.இதில் அரசியலில் வேறு.சினிமாவினை பார்க்க வேண்டாம். ரசிக்க வேண்டாம். என்று கூறுவது பொது அறிவுக்கு விரோதமானது. ஒரு சினிமாவினை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதே சாதகமான முற்போக்கான சிந்தனை. கோட்பாட்டு ரீதியான ரசனை,தொழில் நுட்பம் சார்ந்த ரசனை, படைபாளிகள் சார்ந்த ரசனை, குறியீடு சார்ந்த ரசனை என வேறுபடும். ரசனை என்பது வயது,இனம், பால்,பண்பாடு, அறிவு, மனப்பான்மை, அனுபவம் மற்றும் தனிநபர் வேற்றுமை என்ற தன்மையில் வேறுபடும்.சினிமாவின் மூலமாக பல்வேறு நல்ல நேர்த்தியான விஷயங்கள் கூறபட்டாலும்,அதனை உய்தறியும் தன்மை கோட்பாட்டு ரீதியான அணுகுமுறை ஊடகவே சாத்தியமாகும்.அந்த வகையில் சினிமாவிற்கான கற்கை நெறியில் பல கோட்பாடுகள் காணபட்டாலும் முக்கிய மான கோட்பாடாக படைப்பாளி கோட்பாடு(Auteur theory)காணப்படுகிறது.படைப்பாளி கோட்பாடு என்பது இயக்குனரின் சுயாதீன சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு ஆகும். இயக்குனர் பார்வையாளனின் கலாரசனையே முன்வைத்து படைப்பை உருவாக்குகின்றார்.Andrew Brazin என்பவர் படைப்பாளி என்பவர் தனது சிந்தனை படைப்பினை தனது அகச்சூழலிற்கு ஏற்ப உருவாக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.படைப்பாளிகளின் தன்மையை பொறுத்து சினிமாவின் நாயகத்தன்மை வேறுபட்ட தன்மையினை கொண்டு இருப்பதை காணலாம். பாரதிராஜா, பாலச்சந்தர், முத்துராமன், ஏ.பி.நாகராஜன், மணிரத்னம், மணிவண்ணன், ரவிக்குமார்,பாலா,அமீர், முருகதாஸ், ஷங்கர் போன்றோரின் திரைபடங்கள் ஒன்றோடொன்று  ஒப்பிட முடியாது.மாறாக ஒப்பிடும் போது அது ஒப்புவமை போலியாவே அமையும்.சமூகத்தில் உடனடியாக தாக்கத்தை உண்டு பண்னும் ஊடகமாக சினிமாவே காணப்படுகிறது. சினிமாவில் பேசும் வசனம், உடலுக்கும் ஆடைகள், புதிய   செல்நெறிகள் என்பன மிக இலகுவாக சமூகத்துடன் ஒட்டி கொள்கின்றது இதனை ஊடக கோட்பாடான அறுவடை கோட்பாட்டுடன் ஒப்பிட்டு சிந்திக்க முடியும். இதேவேளை,சினிமா நாயகர்கள் சினிமாப் பார்வையாளர்களால் ஆதாரிக்கப்படுவது எமது யாழ்ப்பாண தமிழ்ச்சமூகத்தில் ஏற்க இயலாத ஒன்று.யாழ்ப்பாண திரைப்பட ரசனை என்பது தியாகராஜ பாகவதரின் காலம் தொட்டு தற் காலம் வரை உள்ளது.வரலாற்று அடிப்படையில் அணுகும் போது,சில பிற்போக்கான ரசனை ஆரம்பம் முதலே இருந்து வந்தது.சினிமா....சினிமா. ..என்று தமது வளமான எதிர்காலத்தை மண்னாக்கியவர்களும் உள்ளார்கள். ஆரம்ப கால கொட்டகை சினிமாக்கள் திரையரங்குகளிற்கு முன்னேறிய போது ரசனை மற்றும் வணிக லாபமும் அதிகரித்தது.உலகமயமாக்கல் சூழலில் உலகம் மாயமாகிக் கொண்டே இருக்கும். ஆரம்ப சூழல் தற்போது காணப்படமாட்டாது.இதுவே யதார்த்தம்! தற்காலத்தில் திரையரங்குகள் வெகுஜன கதாநாயகர்களின் திரை படங்களையே திரையிடுகின்றன.இதனால் இளைஞர் வட்டமும் அவற்றுக்குகே முண்டியடிக்கின்றனர்.இலங்கையை பொறுத்தவரை, சிங்கள சினிமா நல்ல தரமான இடத்தை அடைந்துள்ளது. ஆயினும், தமிழ் சினிமாவிற்கான அடையாளமாக தென்னிந்திய சினிமாவே காணப்படுகிற அதேவேளையில் தற்போதைய எமது கலைஞர்களின் தியாகம் நிறைந்த முயற்சிகள் புறக்கணிக்கபடுகின்றது.இதற்கு முக்கிய காரணமாக காணப்படுவது வணிக லாபம் அற்ற தன்மையே ஆகும். Industry இல்லாத நிலையில் நிறைந்த போராட்டத்தை சந்தித்தே வெற்றி பெற முடியும்.சகோதர மொழியில் 1000 ற்கு மேல் திரைப்படங்கள் வெளியான நிலையில் ஈழத் தமிழர் தென்னிந்தியாவில் சார்ந்து இருப்பது பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாகவும் பலமற்ற தன்மையையே ஏற்படுத்தும்.இ.தனஞ்சயன்.