அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
ஜனநாயகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனநாயகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!

சர்வதேச ஊடக சுதந்திரம் தொடர்பான சுட்டெண்ணுக்கு அமைய 2017 ஆம் ஆண்டிலும் பார்க்க 2018 ஆம் ஆண்டில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

ஊடக சுதந்திர சுட்டெண் என்பது ஒரு நாட்டில் ஊடகங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக இயங்குகின்றது என்பது பற்றிய ஒரு அளவீடு ஆகும்.

இது உலகெங்கும் இயங்கும் 14 அமைப்புகள், 130  ஊடகவியாளர்கள், ஊடக ஆய்வாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்தாகும்.

இந்த மதிப்பீட்டை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு  வெளியிடுகிறது. இந்த அறிக்கையில் மிகச் சிறிய நாடுகள் தவிர்த்து 180 நாடுகளிலுள்ள ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சுயாதீனத் தன்மை பற்றி ஆழ்ந்த ஆய்வினை மேற்கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.

மிகச் சிறந்த ஊடக சுதந்திரம் நிலவும்  நாடுகளாக இம்முறை (2019) நோர்வே, பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் இடம்பெறுகின்றன. மிகவும் மேசமான நாடுகளாக ஈரான், வட கொரியா, சீனா, எதிர்ரேரியா, துர்க்மெனிஸ்தான்  ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.

2017 ஆம் இலங்கை இந்த சுட்டெண் பட்டியலில் 141 வது இடத்தில் இடம் பெற்றிருந்தது. எனினும் 2018 இல் இலங்கை  131 இடத்தில் இடத்திற்கு முன்னேற்றம்  பெற்றதோடு இம் முறை 5 இடங்கள் முன்னேற்றமடைந்து 126 ம் இடத்திற்கு முன்னோக்கி இடம்பெற்றமை  விசேட அம்சமாகும்.

இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் நோர்வேயும் இரண்டாம் இடத்தில் பின்லாந்தும் இடம் பெற்றுள்ளது.

அந்தந்த நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரநிலைமைக்கு அமைய நாடுகள் வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கறுப்பு என்ற 5 பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன.

சிறந்த ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வெள்ளை நிற வலையத்திற்கு உள்ளவாக்கப்படுகின்து. இதில் 8% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடக சுதந்திரம் ஓரளவுக்கு சிறப்பாகவுள்ள நாடுகள் மஞ்சள் நிற வலையத்திற்குள் உள்ளவாக்கப்படுகின்து. இம்முறை இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 16% மான   நாடுகள் இந்த வலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

செம்மஞ்சள் நிறத்திற்குட்பட்ட வலையத்தில் இடம் பெற்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் தொடர்பான பிரச்சனை நிலவுகின்றதாகும். இதில் ஜப்பான், பிறேசில், இஸ்ரேல், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட 37% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.

சிவப்பு வலையத்திற்குட்பட்ட நாடுகள் என்பது ஊடக சுதந்திரம் மிக சிறப்பாக இல்லை என்பதாகும். ரஷ்யா, இந்தியா, மாலைத்தீவு உள்ளிட்ட 29% மான நாடுகள்  இடம் பெற்றுள்ளன.

ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகள் கறுப்பு வலையத்திற்குட்பட்டதாகும். ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகளில் வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற 11% மான நாடுகள்  இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்லையற்ற ஊடகவியலாளர்கள் என்ற சர்வதேச அமைப்பினால் இந்த சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்கா 48 ஆவது இடத்திலும் அரசியல் குழப்பம் காணப்படும் வெனிசுலா 148 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்க இந்த பட்டியலை நிராகரித்துள்ளமையும் கவனிக்க வேண்டிய விடயமாகும். தேர்தல் மற்றும் இந்து தத்துவ வாதத்தை கக்கி வரும் இந்தியா 40 ஆவது இடத்திலுள்ளது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்காலத்தில்  ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனலாம். வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இந்த நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்க கூடாது.ஊடக ஒடுக்குமுறை குறைப்பட்டுள்ளதோடு வெள்ளை வான் கலாசாரம், ஊடகவியலாளர் படுகொலை மற்றும் காணாமல் போதலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது .

எமது நாட்டு ஊடகத்துறையினை பொறுத்தவரை, ஊடகசுதந்திரம் என்பது அந்த சுதந்திரத்தை மீறும் வகையில் தான் தற்போது பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றது. இது ஊடக சுதந்திரத்திற்கு ஒரு ஆரோக்கியமான நிலைமை அல்ல.

 இனவாத சாயத்தை பூசும் ஊடகங்களே காணப்படுகிறது. தமது விற்பனை செய்தி பண்டமாக இனத்துவேச செய்திகளே ஊடகங்களினால் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த நிலைமை  இந்நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் தள்ளி விட ஊடகங்கள் விரும்புகின்றனவா என்று கூட மக்கள் கேட்கும் அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.

ஊடகங்கள் எப்போதும் பொறுப்புணர்வுடன் செயற்படத் தவறக் கூடாது. இவ்விடயத்தைக் கருத்தில் கொள்ளாது செயற்படும் பட்சத்தில் மீண்டும் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் குறித்து கண்ணீர் சிந்தும் நிலைமைக்கு உள்ளாக நேரிடும். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டிராமல் செயற்பட வேண்டியது சகல ஊடகங்களதும் முன்பாக இருக்கும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும்.

ஆக்கம்
இ.தனஞ்சயன் 

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

சமாதான உருவாக்கத்தில் ஊடகங்களின் வகிபாகம்!

           
           சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை வெளிக்கொண்டுவருவதற்கு துணிவற்ற  செய்தி ஊடகம் இருக்கும் வரை, சமாதானம்,நல்லிணக்கம்  மற்றும் இன ஒற்றுமை தொடர்பாக உரையாடுவது சற்று கடினமானதே. பொதுவாக,  ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்ற போது, பெரும்பாலும் பரபரப்பான  மற்றும் சந்தைவாய்புக்களுகேற்பவே, செய்திகளை வெளியிடுகின்றது. 

            யுத்தத்திற்கு பின்னர்  அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் எமது அரசாங்கம் பாரிய அளவில் முயற்சித்தாலும் இன்றளவிலும் அதன் முயற்சி தோல்வியே. காரணம், சமாதானம் மற்றும் நல்லிணக்க கருத்துக்களினை மக்களிடம் கொண்டு சேர்கும்  ஊடகத்தின் பங்கு திருப்திகரமாக இல்லை. ஊடகங்கள் பிரபலமடைய வேண்டுமானால் இனவாதத்தை தமக்கு சாதகமாக்கவேண்டும்,நாட்டின் அபிவிருத்திக்கு அமைதி மற்றும் நல்லினக்கம் அவசியம்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக,எமது நாட்டில்  ஊடகங்கள் அதை நாசப்படுத்துகின்றன. 

                இன்றைய தினம் மின்னணு ஊடகங்கள் மற்றும் ஏனைய  ஊடகங்கள்  மூலமும்  தகவல்கள் விரைவில் பரவலடைகின்றது. எகிப்து மற்றும் துன்சீனிய புரட்சிகள், இந்தியாவின் அண்ணா ஹசாரேவின் போராட்டங்கள்  பொதுவாக, இவற்றை  கட்டுப்படுத்த முடியாதவை. இவற்றின் முலமாக சில சமயங்களில் தேசியப் பிரச்சினைகள் சில தனிநபர்களின் விருப்பங்கள் மற்றும் தமது சுயலாப அரசியல் நிகழ்ச்சி நிரல் அடிப்படையில்தீர்மானிக்கப்படுகின்றது. உதாரணமாக, அண்மையில் நடைபெற்ற கண்டி இடம்பெற்ற இனவெறி தாக்குதல்களை குறிப்பிடலாம். 
           
                 இணையத்தின்   விரைவான பரவல் மற்றும் அர்ப்பணிப்பு சமூக வலைத்தளங்களின் தளங்களின் எழுச்சி ஆகியவை சமூக இணைப்புகளின் உள்கட்டமைப்பை  வியத்தகு முறையில் மாற்றியுள்ளது. இன்றைய தினம் எந்த  செய்தியாக இருந்தாலும்  விரைவாக  பரப்பப்படகூடிய திறன் கொண்டது, அதன் தொலைநோக்கு விளைவுகளைத் தெரிந்துகொள்ளாமல் பொதுமக்களின் ஆர்வம் மற்றும் சமூக மதிப்புகள் என்பவற்றை பொருட்படுத்தாமல் சில சமயங்களில் ஊடகங்கள் செயற்படுகிறது.

                நாட்டில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கி ஊக்குவிப்பதில் ஊடகங்கள் ஒரு முக்கிய பங்கை செய்ய வேண்டும் என்று ஒரு குரலில் சமூக அக்கறையாளர்கள் வாதிட்டாலும் தேசியவாதத்தின் பெயரில் உள்ள சிக்கல்களின் சிந்தனையை மதிப்பிடுவதற்கு சில ஊடக செய்தித் தளங்கள் மற்றும் செய்தித்தாள்களின் செயற்பாடுகள் பற்றி  தவறாக விமர்சிக்க வேண்டியுள்ளது. செய்தி ஊடகத்தில் சுய கட்டுப்பாடு மற்றும் வெளியில் இருந்து எந்த அழுத்தமும் சுமத்தப்படக்கூடாது என்று ஊடக ஒழுக்கவியலை  ஒப்புக் கொண்டாலும், ஊடகங்களினுள் அதன் சமூக கடமைகளையும் பொறுப்புக்களையும் கவனித்துக் கொள்கின்றதா என்பது சற்று கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். 
         
            நாட்டின் தற்போதைய நிலையில், சமாதான மற்றும் இன நல்லிணக்கத்தை பராமரிப்பதற்காக ஊடகங்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டிய கடப்பாடு  உள்ளது. ஆனால் ஊடகங்களின் ஒரு பகுதியினர் தங்களது கொள்கைகளிலிருந்து தவறாக வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்தும் முரண்பாடு இதழியல் அம்சங்களையே பயன்படுத்தி வருகின்றனர் எனினும் சமாதான இதழியல் பண்புகள் இன்னும் எமது நாட்டு ஊடகத்துறையில் பயன்படுத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

இ.தனஞ்சயன் 
                  

சனி, 1 செப்டம்பர், 2018

ஊடகங்களின் நெறிமுறை சார்ந்த வரம்பு எல்லைகளை புரிந்து கொள்வது அவசியம்!

ஹார்வர்ட் பல்கலைகழக மாணவரான மார்க் சூபேர்க் 2004ம் ஆண்டு பல்கலைக்கழக நண்பர்களிற்கு இடையில் தொடர்புகளை பேனுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது இன்று தொடர்பாடல் மற்றும் ஊடகத்துறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. இது உலகையே மிகவும் இலகுவான சமூக தொடர்பாடல் மிக்க இடமாக மாற்றியமைத்துள்ளது. இன்று , உலகளாவிய ரீதியாக எங்கும் நடைபெறு‌ம் நிகழ்வை நாம் நேரடியாக பார்வையிட முடியும்.
    இந்த நிலையில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூகுள்,Twitter மற்றும் Facebook மீது எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, குறித்த ஊடகங்கள் Conservative media களினை Google நிறுவனம் முடக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த கருத்தை கூகுள் நிறுவனம் அடியோடு மறுத்துள்ளது. இதேவேளை, தாம் எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் இயங்குவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ட்ரம்ப் அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனின் வோட்டகேட் ஊழலை புலனாய்வு இதழியல் நுட்பத்தை பயன்படுத்தி வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளரினையும் கடுமையாக சாடினார்.
     இவ்வாறாக கடந்த வாரம் ஊடகங்கள் மீது சீறிப்பாய்ந்து இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி. ட்ரம்ப் ஊடகங்கள் மீது இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பது இது முதன்முறை அல்ல. அமெரிக்க அதிபர் தேர்தல் காலங்களில் கூட CNN இனை போலி ஊடகம் என்று விமர்சித்திருந்தார். மக்களின் எதிரியாக(Enemies of people) ஊடகங்களினை ட்ரம்ப் பார்க்கிறார். இது பிரதான ஊடகங்களிற்கு ட்ரம்ப் மீது எதிர்மறையான சிந்தனையை தோற்றுவித்துள்ளது. 
    ஜனநாயகத்தை நிலைநாட்டும் முக்கிய காரணியாக ஊடகங்கள் காணப்படுகிறது. ஜனநாயகத்துக்கு விளக்கம் கெடுக்கும் அமெரிக்காவில் கூட ஊடகங்கள் பக்கசார்பு என்பது சிந்தனைக்குரியது. சட்டம், நீதி, நிர்வாகம் என்பவற்றை அடுத்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்கள் விளங்குகிறது. அமெரிக்க என்று மட்டுமல்ல உலகம் பூராகவும் ஊடகங்களின் செல்வாக்கு வியாபித்துள்ளது. மக்கள் அன்றாட வாழ்வில் இடம்பெறும் தகவல்களினை மாத்திரமல்லாது, எவ்வளவு தூரம் ஊடகங்கள் குறித்த செய்திக்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். எந்த செய்திக்கு முதன்மை அளிக்கின்றன என்பதில் இருந்து ஊடகங்களின் நிகழ்ச்சி நிரலினை கண்டுகொள்ள முடியும்.
     இணையத்தின் வருகையில் இருந்து ஊடகங்கள் முதன்மை அளிக்கின்ற தன்மைகள் மாற்றம் அடைந்துள்ளது. இதனையே பிரஜைகள் ஊடகவியல் எனும் எண்னக்கருவானது குறிப்பிடுகிறது. இன்றைய ஊடகங்கள் முற்றிலும் மாறுபட்டது. சாதாரண மக்கள் கூட இன்று உலகலாவிய ரீதியாக பூகோள தடங்கல்களினை கடந்து தமது எண்ணங்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்ய முடிகிறது. மக்களிற்கு விழிப்புணர்வு ஊட்டுவதாக ஊடகங்கள் காணப்படுகிறது.
      மேலும், சமூக ஊடகங்கள் இன்று விவாதத்திற்கு மிகவும் பரந்த வெளியை உருவாக்கியுள்ளது. அண்மையில் மகாவலி திட்டத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் வெடுக்குநாறி வழிபாட்டுக்கு ஏற்படுத்தப்பட்டு இருந்த தடைக்கு எதிரான மக்கள் கருத்துக்கள் சமூக ஊடகங்களே பிரதானப்படுத்தியிருந்தன. இதேவேளை, எகிப்தில் இணையதளத்தளங்களினை முடக்குவதற்கு புதிய சட்டத்தை அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் பத்தாம் அல் சிசி விதித்து இருந்தார். இது ஏற்கனவே 600 இனையத்தளங்கள்  எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
     இன்றைய நிலையில், சமூக ஊடகங்களினை இலகுவாக கையாளக் கூடிய நிலை இருந்தாலும் ஊடகங்களின் நெறிமுறை சார்ந்த எல்லை வரம்புகளை அறிந்து அவற்றின் எதிர்மறையான தாக்கத்தில் இருந்து விடுபட்டு ஊடகங்கள் நம்மை பெறுமதியுடையதாக்கவேண்டும்.
இ.தனஞ்சயன்

சனி, 25 ஆகஸ்ட், 2018

2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடருக்கான இலங்கை அணியின் தயார்நிலை!

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்களே நம்பிக்கை வைப்பதற்கு தயக்கமடைகின்ற தருணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாப்பிரிக்காவுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை முழுமையாக வெள்ளையடிப்பு செய்ததுடன் ஒரு நாள் தொடரில் 3 க்கு 2 என்று தொடரை இழந்து இறுதியாக இடம்பெற்ற ஒற்றை இருபது இருபது தொடரை தனதாக்கியது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையினருக்கு இது சில சமயங்களில் திருப்தி மற்றும் சந்தோசங்களை வழங்கியிருந்தாலும் குறித்த முன்னேற்றங்களை தக்கவைக்க இலங்கை கிரிக்கெட் சபை முயற்சிக்குமா என்பது சிந்தனைக்குரியது. காரணம், இலங்கை கிரிக்கெட் சபைக்குள் இடம்பெறும் கசப்பான சம்பவங்களே இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கான காரணமாகும். இதேவேளை, விளையாட்டு துறை சட்டத்தின் மூலமாக அந்த துறை சார்ந்தஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் எல்லையற்ற அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவே நியமிக்கப்போவதாகவும் கடந்த வாரம் செய்தியொன்று வெளிவந்து இருந்தது. குறித்த சட்டம், இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெறும் அழுத்தத்தை குறைக்க போதுமான சட்ட எல்லைகளை கொண்டுள்ளதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்டிலும் அமைச்சர்களின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது. இதற்கு அண்மைய உதாரணமாக, முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கவிற்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், தரவரிசையில் தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணியை விட முன்னிலையில் இருந்தாலும், இலங்கை அனி தமது சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து இந்த டெஸ்ட் போட்டியினை வெற்றி பெற்றது. எனினும், இதே அணியை கொண்டு ஏன் மேற் இந்திய மன்னில் வெற்றி பெற முடியவில்லை. அத்துடன் போட்டி விதிகளை மீறியதாக இலங்கை அணி மீது குற்றச்சாட்டு பின்னர் நிரூபித்து அணியின் தலைவர் மற்றும் பயிற்றுவிற்பாளர்களுக்கு போட்டித்தடை. இலங்கை அணியுடன் விளையாடிய மேற்கிந்திய அணி முதற்தரமான அணியும் அல்ல. கோல்டர் தலைமையிலான இரண்டாம் தர அணியே. ஆகவே, இலங்கை அணி வெளிநாட்டு மண்ணில் கடந்த பல ஆண்டுகளாக தடுமாறியே வருகிறது. இலங்கை அனி இன்னமும் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் எந்த டெஸ்ட் தொடரையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 1996 இல் இலங்கை இந்திய உபகண்டத்திலேயே உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது. எனினும், 1999 இல் இங்கிலாந்தில் நடந்த உலகக்கிண்ணத்தை கைப்பற்ற முடியவில்லை இரண்டாவது சுற்றுக்குகூட தகுதிபெறமுடியவில்லை. 1996 ல் விளையாடிய 6 வீரர்கள் குறித்த உலகக்கிண்ண போட்டியில் விளையாடி இருந்தனர். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள உலக கின்ன போட்டியானது இங்கிலாந்தில் இடம்பெறுகின்ற சமயம் இலங்கை கிரிக்கெட் சபையினாது பொறுபற்று செயற்படுமாயின் 1999 நடந்த சம்பவமே மீள இடம்பெறும். இந்நிலையில் தற்போது இலங்கையில் நடாத்தப்ட்டுவரும் உள்ளூர் இருபது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் குறித்தும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மகேல குற்றம்சாட்டியுள்ளார். 84 வீரர்களில் 44 வீரர்கள் மாத்திரமே வாய்ப்பை பெறும் அதேசமயம் ஏனைய 40 வீரர்கள் வெறும் பார்வையாளராகவே இருக்க வேண்டிய நிலை. இவ்வாறான நிலையில் இலங்கை அணியின் அடுத்து வரும் ஆசிய கிண்ன, இங்கிலாந்து,தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான தொடர்கள் உலககிண்ன போட்டிகளிற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இருக்கும் போட்டிகள் ஆகும். குறித்த போட்டிகளினை கடந்து எவ்வாறு 2019 உலக கின்ன போட்டிகளில் பங்கு பற்றி மீண்டும் ஒரு உலககிண்னத்தை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெற்று கொடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இ.தனஞ்சயன்

சனி, 18 ஆகஸ்ட், 2018

ஊடகங்களின் எல்லையை விரிவடையச் செய்யும் உலகமயமாக்கல்!

இன்றைய சமுகத்தை கட்டுமானம் செய்வதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது. ஒவ்வொரு மனிதனின் நாளாந்த வாழ்கையின் முக்கிய பகுதியாக ஊடகங்கள் காணப்படுகிறது. ஒரு விடயம் பற்றிய கருத்துகளினை உருவாக்கும் பங்கினை ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் அடிப்படையாகக் கொண்டே காணப்படுகிறது. அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் முக்கியமான தொடர்பாடல் கருவியாக ஊடகங்கள் விளங்குகிறது. ஊடகங்களின் பிரதான பணியாகக் காணப்படுவது உலகிற்கு எந்த ஒரு தகவலினதும் சரியான விடயம் எது? பிழையான விடயம் எது? என்பதேயாகும். சரியான நேரத்தில் சரியான விடயத்தை சரியான முறையில் கொண்டு சேர்கும் பாரிய பொறுப்பு ஊடகத்திற்குண்டு. ஊடகங்கள் எங்களைச் சுற்றிய அனைத்தையும் முன்னிலைப்படுத்துகின்றது. உதாரணமாக, இணையம், தொலைக்காட்சி, வானொலி,சஞ்சிகை மற்றும் பத்திரிகை போன்றவற்றை குறிப்பிடலாம். குறித்த ஊடகங்கள் வாயிலாக வரும் தகவல்கள்/செய்திகள் அடிமட்ட மக்களினை சென்றடையும் போதே ஊடகங்கள் வெற்றி அடைகின்றன. சமுக பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்கள் தொடர்புகொண்டுள்ளனர். இவ்வாறான விடயங்களை ஊடகங்கள் வாயிலாகவே வெளிக்கொணரமுடியும். இதன்காரணமாக, மக்கள் ஊடகங்களில் தங்கியுள்ளனர். ஊடகங்கள் மக்களில் தங்கியுள்ளது. தற்போதைய நிலையில், ஊடகங்களினை மக்கள் தவிர்க்க முடியாது. மக்களிற்கு தகவல்களினை வழங்கி அவர்களிற்கு பல்வேறு செய்திகள், நிகழ்வுகள், சமூக நடவடிக்கைகள், வாழ்க்கை முறைமை, பொழுது போக்கு மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை தெளிவுபடுத்துவதாக ஊடகங்கள் காணப்படுகிறது. இலங்கையில் இருந்துகொண்டே, உலகின் எப்பகுதியானாலும் கனடாவோ,ஜேர்மனியோ , தென் கொரியாவோ, அவுஸ்திரேலியாவோ நடைபெறும் நிகழ்வுகளை நேரடியாக கண்டு கொள்ள முடிகிறது. அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியினை உதாரணமாக குறிப்பிடமுடியும். ஊடகங்கள் சமுகம் மற்றும் அவற்றின் கலாச்சாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனினும் உலகமயமாக்கலின் விளைவினால், ஊடகங்கள் பாரிய செல்வாக்கினை பெற்றுள்ளதுடன் மக்களிற்கு பல சாதக பாதக விடயங்களும் காணப்படுகிறது. பல்வேறு வகையான சமூகங்களின் ககலாச்சாரங்களை ஊடகங்கள் வேறு சமூகத்திற்கு சொல்லி கொடுக்க வழிஏற்படுகின்றது. உதாரணமாக, வட இந்திய நாடகங்கள் தமிழிற்கு டப்பிங் செய்தல் மற்றும் தென் இந்திய திரைப்படங்களின் அதீத தாக்கத்தை இலங்கை தமிழ் சமூகத்தை குறிப்பிடலாம். இதன்காரணமாக, ஊடகங்களினை மக்கள் சாட்சியாக பார்கின்றனர். ஊடகங்களே உலக நிகழ்வுகள் தொடர்பாக அறிவூட்டலை வழங்குகிறது. இத்தகைய ஊடகங்கள் அரசியலில் முக்கிய பிரச்சார ஊடக கருவியாகப் பயன்படுத்துகின்றது. நாட்டின் தலைவர்களினை மக்கள் தெரிவுசெய்வதற்கு மக்களினை குறித்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களினை நியாயப்படுத்தும் கருவியாக ஊடகங்களே காணப்படுகிறது. ஊடகங்களினை பொறுத்தவரை சாதக பாதக அம்சங்கள் காணப்பட்டாலும் மக்களின் சுபாவம் மற்றும் மனநிலையிலேயே அதன் சாதக பாதகங்களை தீர்மானிக்க முடியும். ஊடகங்களின் தாக்கத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளும் போது, அதனை எமக்கு சாதகமான முறையில் சூழலினை உருவாக்க முடியும். ஊடகங்களின் செல்வாக்கு காரணமாக, தனிநபர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளில் மாற்றங்களை உண்டாக்க முடியும். உலகமயமாக்கல் காரணமாக, இன்று எமது சாதாரண கருத்துக்கள் கூட இலகுவாக உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் எடுத்துச் செல்லப்படுகின்றது.
ஆக்கம்: இ.தனஞ்சயன்


சனி, 4 ஆகஸ்ட், 2018

அரசியல் ஆடுகளத்திலும் வெற்றி பெற்ற இம்ரான் கான்!

அண்மைக்காலங்களில் விளையாட்டு உலகில் பரபரப்பான சம்பவங்கள் இடம்பெற்றன. உலகக்கிண்ண கால்பந்து போட்டி,இலங்கை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி,இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி என போட்டிகள் நடைபெறும் அதேசமயம் போட்டிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய விடயங்களும் இடம்பிடித்து ஊடகங்களுக்கு நல்ல விருந்தாக அமையும். அதிலும் குறிப்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர், திலங்க சுமதி பால அர்ஜுன ரணதுங்க மற்றும் அரவிந்த டீ சில்வா மீது சூதாட்டத்தில் தொடர்பு பட்டதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்ததும் அதனைத் காலாவதியான குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்களுக்கு பதிலளித்து இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான முதல் பேட்டியில் தோற்றதற்கு திலங்க சுமதி பாலா தம்புள்ள மைதானத்திற்கு விஜயம் செய்தமை சந்தேகப்படவைக்கின்றது என முன்னாள் வீரர்கள் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, இலங்கையில் விளையாட்டுத்துறை அரசியலில் மூழ்கி பரிதாபமாக காணப்படும் நிலையில் விரைவில் கிரிக்கெட் சபை தேர்தலினை நடாத்தும் படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் கவனிக்க வேண்டியது. இதேவேளை, 2020 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த சங்ககார குறித்த ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராக களமிறங்குவார் எனவும் அவர் அரசியலில் ஈடுபட வரவேண்டும் என ராஜித சேனாரத்ன அண்மையில் குறிப்பிட்டு இருந்தமை கவனிக்க வேண்டியது. இந்த நிலையில், எமது அயல் நாட்டின் பரம எதிரியான நாடான பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் மற்றும் 1992 உலகக்கிண்ணத்தை பாகிஸ்தானிற்கு பெற்று கெடுத்த அணித்தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தானிய பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணியின் ஆதரவுடன் பிரதமராகின்றார்.65 வயதான இம்ரான் கான் 1996 ஆம் ஆண்டு அரசியலிற்கு நுழைந்தாலும் அரசியலில் 22 வருடங்களாக போராடியே தனது பிரதான இலக்கை (Main Goal) அடைகின்றார். இவருடைய பிரதான கொள்கையாக பாகிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்தல் மற்றும் ஊழல் மோசடிகளை இல்லாது ஒழித்தல் போன்றன காணப்பட்டாலும் பிரதமராக பதவியேற்ற பின்னர், குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சவால்கள் காணப்படும் என்பது மறுப்பதற்கில்லை. பாகிஸ்தானில் இராணுவத்திடம் அதிகாரம் காணப்படுகின்ற நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தின் செல்லப்பிள்ளையாகவே இருக்க வேண்டிய நிலை இருக்கும். அத்துடன் இம்ரான் கானின் வெற்றிக்கு பின்னால் இராணுவத்தின் உழைப்புள்ளது என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இதேவேளை, பூகோள அரசியல்ரீதியில் பாகிஸ்தான் அமைவிடம் இந்திய, சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் அரசியலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட நாடுகளுடன் எவ்வாறான அரசியல் இராஜதந்திர தொடர்புகளை கையாழப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறான சூழலில்,"இந்தியா ஒரு அடி எடுத்தால் நான் இரண்டு அடி எடுப்பேன்" என்று கூறியுள்ளார். இதேவேளை, தான் பதவியேற்கவுள்ள ஆவணி மாதம் 15 ம் திகதி நடைபெறும் நிகழ்வில் இந்திய பிரதமர் மற்றும் தன்னுடைய காலத்தில் இந்திய அணியில் விளையாடிய கபில்தேவ் மற்றும் சுனில் கவாஸ்கருக்கும் அழைப்பு விடுக்க இருக்கின்றமை மேற் சொன்ன கருத்தை உயிரோட்டமிக்க தாக்குகின்றன. சர்வதேச அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்காவுடன் முரண்பட்ட கருத்துக்களினை கொண்டுள்ள இம்ரான் எப்படி பாகிஸ்தானினை மாற்றி அமைத்து கொள்வதுடன் சர்வதேச அளவில் வருகின்ற சவால்களை வெற்றி கொள்ள போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதேநேரம், குறித்த வெற்றி தொடர்பாக, இம்ரான் கானின் முதல் மனைவி Ms Gold smith குறிப்பிடும் போது 22 வருட தியாகம்,தடைகளை வெற்றி கொள்ளுதல் மற்றும் நிராகரிப்புக்களை தாண்டி பாகிஸ்தானின் புதிய பிரதமரான எனது மகன்களின் தந்தைக்கு வாழ்துக்கள் என்று கூறினார்."22 years later, After humiliation, hurdles and sacrifice, My son's father is Pakistan's new prime minister". நிட்சயமாக, கிரிக்கெட் ஆடுகளத்தில் எதிர்கொண்ட சவால்களை விட பாரிய அளவில் சவாலுக்கு முகம்கொடுக்க நேரிடும். எது எப்படியோ, எமது நாட்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அரசியலிற்கு வந்து பாராளுமன்றம் சென்ற வீரர்களை காணமுடியும். ஆயினும், இம்ரான் தனது போராட்ட குணம் மற்றும் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி நகர்ந்து வெற்றி பெற்ற விதத்தில் இருந்து ஓர் முன்மாதிரியாக விளங்குகின்றார். ஆக்கம்: இ.தனஞ்சயன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் மாணவன் மற்றும் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சி பிரிவின் உதவி தயாரிப்பாளர்)

சனி, 28 ஜூலை, 2018

குறைந்த கணத்தில் பெரும் திரளான மக்களை சென்றடையும் தொலைக்காட்சி சமூக மயமாக்கலிற்கான வரப்பிரசாதமே!

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் வெகுஜன ஊடகங்களில் இரண்டாவது மிகப்பெரிய ஊடகமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. அதன் வளர்ச்சி நாளுக்கு நாள் உலகம் பூராகவும் அதிகரித்து செல்வதனை காணமுடிகிறது. அதனுடைய காட்சி வடிவில் கதைகூறும் பானியானது மக்களிடையே பெரும் செல்வாக்கு மிகுந்ததாக இருக்கிறது. சமூகத்தில் இடம்பெறும் வழமைக்கு மாறான சம்பவங்களை மக்களிற்கு கொண்டு செல்லும் ஓர் சாதனமாகும்.  

ஊடகவியலாளர்கள் மக்களின் தகவல் தாகத்தை தீர்த்து வைக்கும் வகையில் செய்தியாக்கம் செய்வார்கள். செய்தி மாத்திரம் அல்ல மக்களிற்கு சிறந்த பொழுது போக்கு அம்சங்களை வழங்கும் ஊடக மாகவும் தொலைக்காட்சி காணப்படுகிறது. பொதுமக்களிற்கு அரசியல், சமுக,கலாச்சார மற்றும் பொருளாதார நிலைமாற்ற அவசியம் தொடர்பாக அறிவூட்டும் ஓர் அதிகாரம் மிக்க சாதனம் தொலைக்காட்சி ஆகும். அரசியல், சமூக, கலாசார,அறிவியல், விளையாட்டு,பொழுது போக்கு, கலை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் தற்போதைய உலகில் மத்திய கூறாக விளங்குவது தொலைக்காட்சி யாகும்.தொலைக்காட்சியின் ஆங்கில சொல்லான  Television லத்தீன் மற்றும் கிரேக்க சொல்லின் கலவையாகும். Tele என்பது கிரேக்க செல்லாகும் 'Far' என்று ஆங்கிலத்தில் அர்த்தமாகும். Visio என்பது லத்தீன் சொல் ஆங்கிலத்தில் sight என்று அர்தப்படுத்தி பின்னர் அதுவே Television எனும் தொலைக்காட்சி யானது. காட்சி தற்கால சமூகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

      இன்றைய போட்டி மிக்க சூழலில் காட்சி வடிவில் தகவல்களினை வழங்கி பார்வையாளர்களினை விமர்சன கண்னோட்டத்தில் சிந்திக்க செய்வதில் பெரும் பங்கு தொலைக்காட்சிக்குஉள்ளது. செய்திகளை தொலைக்காட்சி யில் அறிக்கையிடும் பானியானது இன்று விமர்சனத்துக்குரியதாகக் காணப்படுகிறது. இலங்கையில் காணப்படுகின்ற தொலைக்காட்சிகளை பொறுத்தவரை தமது தனிப்பட்ட சுயலாப அரசியலினை முன்னெடுக்கும் பிரச்சார ஊடகங்களாகவே விளங்குகிறது. வானொலியின் ஆதிக்கத்தில் இருந்து முன்னணியினை தொலைக்காட்சி வகித்தாலும் வானொலிக்கான தனித்துவமான நேயர்கள் காணப்படுகின்றமை புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் வானொலிகளின் எண்ணிக்கைகளை கொண்டு அறிய முடிகிறது. அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் தொலைக்காட்சியினை மக்கள் உயிரோட்டமிக்க ஓர் இடமாக கருதுகின்றனர் என்று ஆய்வு முடிவு பெறப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஆய்வில், வருடத்தில் ஓர் சராசரி மனிதன் 3000 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி அல்லது தொலைபேசியுடன் செலவு செய்கின்றான். 

     மேலும், தொலைக்காட்சி யானது அதனுடைய செல்வாக்கு மற்றும் தாக்கம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகிறது. குறிப்பாக, சிறுவர்களின் மனப்போக்கில் தவறான மாதிரிகாட்சி உருக்களை ஏற்படுத்துகிறது. தற்போதைய காலகட்டத்திலதற 75 வீதமான சிறுவர்கள் தமது பொழுதுபோக்கிக்காக தொலைக்காட்சியினையே தெரிவு செய்கின்றனர். பெற்றோரும் சிறுவர்கள் தமக்கு தொல்லைஇல்லாமல் இருப்பதற்காக தொலைக்காட்சியினை தமது குழந்தைகள் பார்பதற்கு அனுமதிக்கின்றனர். குழந்தைகள் தொலைக்காட்சி யில் எவ்விதமான நிகழ்சிகளை எவ்வளவு தூரம் பார்கின்றார்கள் என்பது தொடர்பாக பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும். தொலைக்காட்சியினை எதிர்மறையான தாக்கத்தில் இருந்து விடுபட தொலைக்காட்சி எவ்வித தாக்கத்தை உண்டுபண்னுகின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நாளைய எதிர்கால சந்ததியான குழந்தைகளை பாதுகாத்து நேர் சிந்தனைமிக்க சமூகத்தை உருவாக்க வேண்டும். அரசியல் ரீதியாக கருத்துருவாக்கங்களை இலகுவாக மேற்கொண்டு தமது இலக்கு பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல தொலைக்காட்சி மிக சிறந்த சாதனமாகும். அண்மையில் விஜயகலா மற்றும் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை தொடர்பாக இலங்கை தொலைக்காட்சி களில் அதிகம் இடம்பிடித்து இருந்தது. அத்துடன் இன்றைய நிலையில், தொலைக்காட்சி பற்றிய அதிகமான விமர்சனங்கள் காணப்பட்டாலும் நவீன காலத்தில் மனித வாழ்க்கையின் முக்கிய பகுதியாக அரசியல், சமுக, பொருளாதார, காலநிலை, விளையாட்டு மற்றும் விளம்பரம் என்று ஒவ்வொரு பகுதியிலும் தொலைக்காட்சியின் செல்வாக்கு அளப்பரியது. தற்போதைய உலகமயமாக்கல் சூழலில் நவீன ஊடகங்களின் வரவு மற்றும் ஊடக ஒருங்கிணைப்பு காரணமாக தொலைக்காட்சியின் நிகழ்ச்சி உள்ளடக்கம் உலகலாவிய ரீதியாக வியாபித்துள்ளது. இதன்காரணமாக, அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகள் காணபட்டாலும் பெற்றோர்கள் நேர்சிந்தனை மற்றும் பயனுள்ள விடயதானங்களை கொண்ட நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் னை தமது குழந்தைகளினை பார்பதற்கு வழிகாட்டுவதோடு இயலுமானவரை குடும்பமாகவும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும். அதிகமான வணிக நிறுவனங்கள் தமது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த தெரிவு செய்யும் ஊடகமாக தொலைக்காட்சியே காணப்படுகிறது. 

   மேலும், தொலைக்காட்சி வழங்கும் நன்மையான விடயங்களாக இளைஞர்களினை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி மற்றும் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி,உலக நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகள்,சமய அற நெறிமுறைகள் தொடர்பான கருத்துக்கள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் போன்றன தொலைக்காட்சியின் நன்மைகள் ஆகும். தொலைக்காட்சி செய்திகள் மற்றும் தொலைக்காட்சி ஆவணப்படங்கள் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு அறிவினை வழங்கும் சிறப்பான படைப்புகள் ஆகும். பொழுது போக்கு மற்றும் பண்பாட்டுத் தளத்தில் 21ம் நூற்றாண்டில் சிறந்த தாக்கத்தை உண்டுபன்னுகின்ற தொலைக்காட்சி தற்கால சமூகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

ஆக்கம் : இ.தனஞ்சயன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் மாணவன் மற்றும் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சி பிரிவின் உதவி தயாரிப்பாளர்)

செவ்வாய், 12 டிசம்பர், 2017

கருத்தின் ஆழம் குறைவுபடாமல் இருப்பதே கவிதை!

படைப்பாளியின் எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள் போன்ற மன உணர்வுகள் படைப்பாக வெளிவரும் போதே படைப்பாளி சுயதிருப்த்தி அடைகின்றான்.படைப்பாளி தனது திறமைகளை ஏதோஒரு வகையில் தனது ஆக்கப் படைப்புகளை வெளிஉலகிற்கு வெளிக்கொணர முயல்கின்றான்.சில சமயங்களில் வெற்றி பெறும் படைப்பாளி பல சமயங்களில் காணாமலே போய்விடுகின்றான்.படைப்பாளி தனது சூழலில் இருந்தே தனது ஆக்கப் படைப்புகுரிய கருப்பொருளை பெற்று கொள்கின்றான். சூழல்கள் மாறும் போது படைப்பின் தன்மைகளும் மாறுபடுகிறது.அந்தவகையில், இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாகக் கூறப்படுகிறது. இலக்கிய வகையில் முக்கியமானதாக கவிதை விளங்குகிறது. இது சிறுகதை,நாவல், கட்டுரை போன்றவற்றின் சுபாவங்களில் இருந்து மாறுபட்ட இயல்பு கொண்டது.கவிதையானது ஒருவரின் உளக்குமுறல்கள் மொழி வடிவம் பெறும் போது தோற்றம் பெறுவதாகும்.கவிஞர் பிறைசூடன் கவிதை தொடர்பாக கூறும் போது பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றவர்கள் தமிழ் கவிதை உலகில் அனைத்தையும் தொட்டுவிட்டார்கள்.நாம் வரிவடிவம் மற்றும் வார்த்தைகளில் மாத்திரமே மாற்றம் செய்து வருகின்றோம் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது. கவிதையானது எந்த அடக்குமுறை சூழலில் இருந்தாலும், ஏதோஒரு குமுறலாக வெளிவந்துவிடுவது அதன் சிறப்புத்தன்மையாகும்.அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் கல்வி பயிலும் கவிஞர் முகமது அஸ்கரின் கன்னி கவிதைத் தொகுப்பான"விரியும் போராடும் அரும்புகள்" ஒக்ரோபர் மாதம் 11ம் தி கதி கைலாசபதி கலையரங்கில் வெளியீடு தெரிவுசெய்யப்பட்டு இருந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.கவிதை வெளியீடு விழாவுக்கு அழைப்பு வந்தும் அண்றைய வெளியிட்டு விழாவில் தவிர்க்க முடியாத சில தனிப்பட்ட காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லை.ஆயினும், கவிஞரினை பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாகசந்தித்து கவிதைபுத்தகத்தை பெற்று வாசித்த அனுபவித்த உணர்வுகளை திறனாய்வுத்தளத்தில் வலைப்பூபதிவாக்கலாம் என எண்ணுகிறேன்.கவிதை என்பது சமூகத்தின் உணர்வு பிரவாகம் எனலாம்.கவிஞர் அஸ்கர் தனது உணர்வுகளை விரியும் போராடும் அரும்புகள் என்று கவிப்புத்தகத்திற்கு பெயரிட்டுள்ளார் என எடுத்துக் கொள்ளலாம். காரணம், உணர்வுகள் ஓர் ஒழுங்கு முறையில் வார்த்தைகளாகி வரியாகி கவிதையாகின்றது எனலாம்."விரும்பிகள் கொடுத்த காலம் திருடித்தின்னும் காலமே இச் சீர் வரிசை"என்று சீதனம் கொடுமையை சீர் வரிசை எனும் சீதனம் எனும் கவிதையில் கூறுகிறார்.விழுந்தாலும் விதையாகிடு எனும் கவிதையில் "துச்சமும் அச்சமும் உன் இதயங்கள் எனக்கும்வேண்டும் தோழா வீரநடை போட்டதால் நீ மண்ணிலே இன்றும் மணம் வீசுகின்றாய் "என்ற கவிவரிகளில் சோசலிச சித்தாந்ததை வலியுறுத்தியுள்ளார்.

முன் பக்க அட்டைப்படத்திலேயே கவிஞன் கவியின் கருப்பொருளின் ஆழத்தை உணர்த்தியுள்ளதோடு மலையகமக்களின் எதிர்பார்ப்புகளை அரும்புகளாக உவமைபடுத்தியுள்ளமை சிறப்பு.இதே சமயம் ஒரு இளம் கவிஞராக அஸ்கர் கூட ஒரு வகையில் விரியப்போராடும் அரும்பு என்று அர்தப்படுத்திக் கொள்ளலாம்.
இதேவேளை,உழைப்பே உயர்வு என்ற ஒரு கவிதையின் ஆரம்பம் இவ்வாறு அமைகிறது "மூடநம்பிக்கைகளை முடக்கிவிட்டு முடியும் என்ற முடிவோடு வா தோழனே" என்ற கவி வரியானது தன்னம்பிக்கையூட்டும் வரிகளாக அமைகிறது.மேலும், மற்றொரு கவிதையில்
"காலம் காலமாய்
மீட்சி இல்லாப் போராட்டத்தில்
தூளாய் போகின்றது....."மலையகமக்களின் அரசியல் ரீதியாக ஏமாற்றப்படுவதை சலித்து கவிதை வாயிலாகசொல்கிறார்.காணாமல் போன கணவுகள் எனும் கவிதையில்"காலமெல்லாம் காணாமல் போய் கனவுகள் கூட கஞ்சத்தனம் காட்டுகின்றன "எவ்வளவு சோகம் ஏமாற்றம் கணவுகள் கான்பதற்கே நம்பிக்கை அற்ற தன்மை. ஆழ்ந்த சிந்தனை மிக்க வரிகள்.உன்மை நட்பு எனும் கவிதையில் "பாலினம் தடையில்லை உணர்வுகள் ஒன்றானால் தோழன் துனைநிற்பான்"ஆன் பென் நட்பின் புனிதமான தன்மையை குறிப்பிடுகிறார்.பெண்ணின் கொடுமை எனும் கவிதையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டு இறுதி வரிகளில்"தடுத்து எதிர் நிற்க தூக்குதண்டனையை வரச்சொல்லங்களே"என பெண்களின் விடுதலைக்கான அவசியத்தையும் அதற்கு தீர்வாக தூக்குத்தண்டனையும் தனது கவிதையில் வலியுறுத்தியுள்ளார்.தோட்ட தொழிலாளிகள் எனும் கவிதையில் "கட்டைகள் காற்சட்டை வெள்ளையனின் அடி மட்டம் போனபின்னும் போகவில்லை "என்று மலையக மக்கள் தொடர்ந்தும் அடிமைத்தனம் நிறைந்த வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார். நிதியும் நீதியும் எனும் கவிதையில் "நிதி தான் நீதியா இது தான் நியதியா"என நீதி நிதிக்கு பின்னால் என்ற தற்கால நிலமையை கவிதையில் சொல்கிறார்.

"புயலோடு போராடும்
தூக்கணாம் குருவி கூட்டைப் பார்
உழைப்பால் உயர்ந்து போய்
உயரத்திலேயே வாழ்கிறது
மகுடிக்கு வளைந்தாடும்
பாம்பாக ஆகாதே
முடிவின் ஆரம்பத்திலும்
முதுகெலும்போடு உழைத்து வாழ்"
என்று உழைப்பின் அவசியத்தை உழைப்பே உயர்வு எனும் கவிதையில் உணர்த்துகின்றார்.உழவனின் உழுத மனம் எனும் கவிதையில் "உழவன் மனம் ஓயந்து விட்டால் உண்பதற்கு சோறிறின்றி நாற்றோடு சேற்றில் இறங்குவதே மனிதனின் விதி ஆகிவிடும் "விவசாயத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும்கவிஞரின் தொலைநோக்கு பாராட்டுக்குரியது.வடுக்கள் எனும் இன்னொரு கவிதையில்"இறுதி சடங்கு செய்து கொள்ளி வைக்கப் பெற்றெடுத்த மகளைத் தொலைத்து துடிக்கும் பெற்றவரின் கதறல்கள்"என்று போர்காரணமாக இறந்த இளைஞர்களின் பெற்றோரின் மனவருத்தத்தை கவிஞர் அழகாக பதிவு செய்கிறார்.நாகரீகம் உட்புகுந்த மானிடம் எனும் கவிதையில் "சுகங்களை சுத்தமாக காணோம் சூனியமாய் ஆனது உலகே"என்று உலகமயமாக்கலின் தாக்கத்தை கூறும் கவிஞர் குறித்த கவிதையின் இறுதி வரியில் நமக்கெல்லாம் ஆகுமா நாகரீகம்? என்று முடிக்கிறார். இது உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல்என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனி என்பதாகவே கருத்து கொள்ளவேண்டியுள்ளது.

"கல்வி உன் உயர்வெனவும்
ஒழுக்கம் உன் சிறப்பெனவும்
இவையோடு மலர்தலே
உன் புகழ் எனவும் உரைத்திட வேண்டும்"
என்று விளையும் பயிர் எனும் கவிதையில் கல்வியின் அவசியம் பற்றி குறிப்பிடுகின்றார்.அத்துடன், செல்லாக்காசு எனும் கவிதையின் இறுதியில் "புரிதல் வேண்டும் உலகே-காசு புதிதாய் இனிக்கும் நஞ்சே"என்று காசின் தன்னம பற்றி சிந்திக்க வைக்கின்றார்.

நான்,தமிழோடுவிளையாடுமனமே,உழைப்பே உயர்வு,கருகிய மலர் சிரிக்கிறது, சிறகொடிந்தபறவை,
விளையும் பயிர்,தூரத்து நிலா,விளையும் பயிர்,
யார் குற்றம்,தேம்பியழும் சுவர்கள்,
விரிய போராடும் அரும்புகள்,ஒரு மயிலிறகால்,
பாலஸ்தீனக் குரல்,குருவிக்கூடு,
காணி நிலம் வேண்டும்,
கடல்வாழ் காகித ஓடம்,முகிலின் துளிகள், சீர்வரிசை எனும் சீதனம்,
என் உயிர் தங்கை,கடல்வாழ் காகித ஓடம்,கடைசி முத்தம்,உயிருள்ள மரணம்,வறுமை விலகாதோ,
புறப்படு புதுமைப் பெண்ணே,
வடுக்கள்,காணாமல் போன கனவுகள்,உண்மைநட்பு,தோட்டத்தொழிலாளிகள்,பெண்ணினக் கொடுமை
வட்டியில்லா கடன்,
மீளாத மியன்மார்ப் படகுகள்,உழவனின் உழுத மனம்,மொட்டின் மொழி ,வறுமை விலகாதோ,அவசரக் கல்யாணம்
சதுரங்க வேட்டை,இறுதி நாழிகை என்று சமூககவிதைகள்,பொருளாதார,அரசியல் மற்றும் காதல் கவிதைகள் என அனைத்தும் தற்காலத்தின் நிலைமையை உரையாடும் பாங்கில் கவிதை அமைந்துள்ளது.கவிஞன் எனும் கவிதையில் அஸ்கர் கவிதைக்கு பின்வருமாறு வரைவிலக்கனம் கொடுக்கின்றார்"கவிஞ்ஞனின் கற்பனையை இலக்கனம் கற்பிக்க முடியாது இது தான் அதுவென்றாலும் அது கவிதான்"என்று கூறுகிறார். கவிதையின் வரிகள் அற்புதமானது.கன்னி படைப்பினை இவ்வளவு சிறப்பாக செய்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. கவிஞர் முகமது அஸ்கரின் முக நூல்களில் பார்த்து ரசித்த கவிதைகள்
இன்று நூல் வடிவில் உருவாகி இருப்பது மிகவும் பொக்கிஷமான விஷயமாகும். முகப்புத்தகத்துக்குள் தனது கவிதையை சிக்கவிடாமல் அச்சு வடிவில் வெளி உலகிற்கு கொண்டு வந்தமை சிறப்பானது.அச்சு வடிவில் கவிதை வாசிப்பு அனுபவம் அலாதியானது.விரியப் போராடும் கவிதைகள் என்ற கவிஞர் முகமது அஸ்கரின் கவிப்புத்தகம் கவிஉலகிற்கு அமையும் என்பதில் எந்த சந்தேகமும்இல்லை. இறுதியாக மொட்டின் மொழி எனும் கவிதையில் கவிஞர் குறிப்பிட்ட "உலகம் இன்று இருட்டறையில் இனி நீயாவது விழித்துக்கொள்"என்ற வரிகளை சிந்தித்துக்கொண்டு எனது இச் சிறு வலைப்பூப்பதிவினை நிறைவு செய்து மற்றும் ஓர் வலைப்பூப்பதிவில் விரைவில் சந்திக்கின்றேன். இ.தனஞ்சயன்.ஊடகத்துறை

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

விசாரணையை முறைமைப்படுத்தும் புலனாய்வு இதழியலின் சாத்தியக்கூறுகள்?

ஊடகத்துறையானது நாளுக்கு நாள் புதிய மாற்றங்களுடன் வேகமாக மாற்றங்களை உள்வாங்கி தம்மை தகவமைத்துக் கொள்கின்றது. இவ்வாறான மாற்றங்களை உண்டுபண்னியதன் மிகப் பிரதான காரணம் புதிய ஊடகங்களின்(Online media)வருகையே பிரதானமாகும்.அந்த வகையில் ஊடகங்களிற்கான இதழியல் என்பது செய்திகளை இலகுவாக அறிந்து, தெளிந்து, புரிந்து கொள்ள உதவுகிறது.இதழியல்  (Journalism) என்பது இன்று விளையாட்டு இதழியல்,வணிக இதழியல்,கலை இதழியல்,புகைப்பட இதழியல்,விபசாய இதழியல், கல்வி இதழியல், நவீன இதழியல்(fashion journalism),பொருளாதார இதழியல்(Economic journalism),மஞ்சள் இதழியல்,பிரஜைகள் இதழியல்,தீர்வுகாணும்இதழியல்,புலனாய்வு இதழியல் போன்றன ஆகும். தற்போதைய நிலையில் இறுதியாக கூறப்பட்ட இதழியலின் தேவைப்பாடு உணரப்படுகின்றது.அந்த வகையில்,புலனாய்வு இதழியலின் அவசியத்தை உணர்ந்து அது தொடர்பாக சிந்திக்கப்போவதாகவே இப் பதிவு அமையப்போகின்றது.புலனாய்வு இதழியல் என்பதை வரைவிலக்கனப்படுத்துவது சற்று கடினமானது. எனினும், சாதாரண இதழியல் மரபில் இருந்து எவ்வாறு புலனாய்வு இதழியல் வேறுபடுகிறது என்று சிந்திப்பது வரைவிலக்கணப்படுத்த சுலபமாக அமையும். குறிப்பாக, செய்திகள் அனைத்தும் புலனாய்வுத் தளத்தின் அடிப்படையிலே வழங்கப்படுகிறது. எந்த ஒரு செய்திகளும் பிரதான ஊடகங்களினை பொறுத்தவரை உறுதிப்படுத்தி ஆதாரத்துடனே வெளியிடும் பண்புகளை கொண்டு இருக்கிறது.இந்த நிலையில் புலனாய்வு இதழியல் அவசியமா?என்பது கேள்விக்குரிய விடயமாகும்.சாதாரண இதழியல் இருந்து புலனாய்வு இதழியல் எவ்வாறு பிரித்துப் பார்க்க வேண்டியது என்பதே புலனாய்வு இதழியலிற்கான வாய்ப்பினை வழங்குகிறது.சாதரனமான செய்தியில் ஏதோ ஒரு மக்களிற்கு அவசியமான விடயம் மறைக்கப்படுகின்றது என்று உணரும் சந்தர்ப்பங்களில் புலனாய்வு இதழியலிற்கான தேவைப்பாடு தோற்றம் பெறுகிறது. குறித்த மறைக்கப்பட்ட விடயங்களினை ஆதாரமாக,திறனாய்வுத் தளத்தில், முக்கிய மான விடயங்களினை, ஆழ்ந்த ஆய்வு தளத்தில், இது வரைக்கும் அறியப்படாத தகவல்களினை புலனாய்வு தளத்தில் வெளிக்கொண்டு வரும் இதழியல் புலனாய்வு இதழியல்(Investigate journalism )ஆகும்.ஆங்கில அகராதிகளில் ஒன்றான Cambridge dictionary "புலனாய்வு இதழியலை "A type of journalism that tries to discover information of public interest that someone is trying to hide"அதாவது, மக்களிற்கு தேவையான விடயத்தை யாரும் மறைக்க முற்படும் போது அவற்றை அம்பலப்படுத்தி எழுதும் இதழியல்(Investigate journalism)ஆகும்.இவ் இதழியல் சாதாரண செய்திகளை கடத்துவதென்றில்லாமல் புதிய உண்மையை கண்டறிவதாக அமைகிறது. புலனாய்வு இதழியலின் அறிக்கையிடும் இலட்சனம் வழமையான இதழியல் மரபில் இருந்து பின்வரும் வகையில் வேறுபட்டு நிற்கிறது.என்ன நடந்தது என்பதுடன் ஏன் நடந்தது என்பதையும், யார் தவறு செய்தார் எப்படி செய்தார் என்பதையும், ஊகமற்ற உண்மையான ஆதாரங்களுடன் வெளியிடுதல், எப்படி தவறுகள் மறைக்கப்பட்டு வருகிறது என்பதை அம்பலப்படுத்தி மக்களை விழிப்பூட்டுவதாக அமைய வேண்டும்.புலனாய்வு இதழியல் உரைபெயர்பு இதழியல் (Interpretive journalism/Interpretative Journalism)"which goes beyond the basic facts of an event or topic to provide context, analysis and possible consequences "ஆக அமையக் கூடாது.புலனாய்வு இதழியல் என்பது சொந்த முயற்சி, நீண்ட காலக்கெடு,ஆழ்ந்த ஆய்வு, நிறைவான செய்தி மூலங்கள், புதிய தளத்திலான பார்வை,அழுத்தங்கள் என்பவற்றை கடந்தே வெற்றி பெறும். புலனாய்வு இதழியலின் சாதகமான அம்சங்களாக(positive aspects)சனநாயகத்தை வலிமைப்படுத்தும்,ஊழல்களினை வெளிக்கொணர உதவும்,சமூக பொறுப்பு வாய்ந்ததாக அமையும், மக்களிற்கு அதிகாரத்தை பெற்று தரும், உண்மையை அம்பலப்படுத்தும்,அநீதிக்கு எதிரானதாகும்,போலி அற்ற அசலாக அமையும் தன்மை போன்றவற்றை குறிப்பிடலாம்.புலனாய்வு இதழியல் மரபு இதழியல் பண்புகளில் இருந்து வேறுபட்ட தொன்றாகும். புலனாய்வு இதழியல் மக்களுக்கு பிடித்த ஒரு விடயத்தை ஆழமாக அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தல்,புதிய பாணியில் தகவல்களை ஒண்றினைத்து வழங்குதல்,என்ன நடந்தது என்பதற்கான விளக்கத்தை மாத்திரம் வழங்காமல் ஏன் நடந்தது என்பதற்குரிய காரணத்தை பல சாட்சியங்கள் மற்றும் தடயங்கள் ஊடாக விளக்குவதாக அமைய வேண்டும்.இலகுவாக கூறினால்,இரகசியத்தை வெளிக்கொணரும் இதழியல் எனலாம்.புலனாய்வு இதழியல் என்பதற்காக வரைவிலக்கனத்தை UNESCO நிறுவனம் "Investigate Journalism involves exposing to the  public matters which are concealed either deliberately by someone in a position of power or accidentally behind a chaotic mass of facts and circumstances which obscure understanding. It requires using both secret and open sources and documents "அதாவது,  மக்களிற்கு அவசியமான விஷயம் அதிகாரத்தில் உள்ளவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும் சமயத்தில் அதனை வெளிக்கொண்டு வரும் இதழியல் என இலகுவாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.மேலும், புலனாய்வு இதழியல் என்பது ஊழல்களை அம்பலப்படுத்தும் இதழியல் என்ற தவறான மனப்பாங்கு எங்களிடையே உண்டு. இவ் இதழியல் அதிகார துஷ்பிரயோகம், பொது மக்கள் நிதி தவறான முறையில் செலவிடப்படல்,சுற்றுச்சூழல் அழிப்பு திட்டங்கள், மருத்துவத்துறை,அபிவிருத்தி,அநீதி,சுகாதாரம்,நன்கொடை போன்றவற்றில் புலனாய்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.புலனாய்வு இதழியல் என்பது கருதுகோள்களை உருவாக்கி அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க முனையும் முடியாத சமயங்களில் புலனாய்வு இதழியல் தோல்வியில் முடியும்.Investigate என்பதை ஆங்கில அகராதிகள் 'Systematic inquiry'அதாவது, ஒழுங்கு படுத்தப்பட்ட விசாரணையே புலனாய்வு(Investigation ) என்று வரைவிலக்கனம் வகுக்கின்றன. மேலும், புலனாய்வு இதழியல் புதிய பாதைகள் மற்றும் புதிய இராஜதந்திர சிந்தனைக்கு வழிவகுக்கின்றன. புலனாய்வு இதழியலிற்கான அறம் சார்ந்த விடயங்களை சிந்திக்கும் போது, அறம் சார் குழப்பங்கள்(Ethical dilemma)தோன்றினாலும் சட்டவரம்புகளிற்குட்பட்டே புலனாய்வு இதழியலை முன்னெடுப்பது எதிர்காலத்தில் சட்டச்சிக்கலை தவிர்க்க முடியும்.புலனாய்வு இதழியலில் இதழியலாளன் எதிர்கொள்ளும் சவால்களாக;புலனாய்வு இதழியல் தொடர்பான தெளிவான அறிவின்மை,அதிகரித்த பணம் முதலீடு, உயிர் அச்சுறுத்தல்,நிர்வாக சிக்கல் போன்றன முதன்மையான காரணங்கள் ஆகும். புலனாய்வு இதழியலாளன் ஒருவருக்கு அறிதலார்வம்,ஈடுபாடு,தர்கரீதியான ஒழுங்கு படுத்தும் சிந்தனை, நெகிழ்வத்தன்மை,சிறந்த முறையில் அறிக்கையிடும் ஆற்றல், பொது அறிவு மற்றும் ஆய்வு மனப்பாங்கு, பொறுமை,பங்கு பற்றல் ஆய்வு,தைரியம், சட்டப் புலமை,தியாகம்,அர்ப்பணிப்பு,குற்ற உளவியல் தொடர்பான அறிவு,ஆதாரங்களை தேடல்,சோரம் போகாமை,விலைபோகாமை, சாவாலை வெற்றி கொள்ளும் ஆற்றல் போன்றவை புலனாய்வு இதழியலாளனிற்குரிய  அடிப்படைப் பண்புகள் ஆகும்.எமது நாட்டை பொறுத்தவரை சாதாரணமாக ஊடகவியளனாக வேலை செய்வதே மிகச்சவாலானதொன்று.இந்த நிலையில் நவீன ஊடகங்களின் ஆதிக்கம்,ஊடகநிறுவனங்களின் பணம் மீதான பேராசை, கடந்தகாலத்தில் ஊடகவியளார்கள் கண்ட துயரம் நிறைந்த அனுபவங்கள் புலனாய்வு இதழியல் என்பதற்கான சந்தர்ப்பத்தை காலம்கடத்தவே செய்யும். எனினும் தகவல் அறியும் சட்டமூலத்தின் வருகை ஓரளவுக்கு புலனாய்வு இதழியலிற்கான சந்தர்ப்பத்தை அதிகம் வழங்கினாலும் புலனாய்வு இதழியலிற்கான இருப்பு மற்றும் நிலைப்பு என்பது கேள்விக்குறியே ஆகும்.இ.தனஞ்சயன் ஊடகத்துறை