அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
தணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!

சர்வதேச ஊடக சுதந்திரம் தொடர்பான சுட்டெண்ணுக்கு அமைய 2017 ஆம் ஆண்டிலும் பார்க்க 2018 ஆம் ஆண்டில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

ஊடக சுதந்திர சுட்டெண் என்பது ஒரு நாட்டில் ஊடகங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக இயங்குகின்றது என்பது பற்றிய ஒரு அளவீடு ஆகும்.

இது உலகெங்கும் இயங்கும் 14 அமைப்புகள், 130  ஊடகவியாளர்கள், ஊடக ஆய்வாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்தாகும்.

இந்த மதிப்பீட்டை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு  வெளியிடுகிறது. இந்த அறிக்கையில் மிகச் சிறிய நாடுகள் தவிர்த்து 180 நாடுகளிலுள்ள ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சுயாதீனத் தன்மை பற்றி ஆழ்ந்த ஆய்வினை மேற்கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.

மிகச் சிறந்த ஊடக சுதந்திரம் நிலவும்  நாடுகளாக இம்முறை (2019) நோர்வே, பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் இடம்பெறுகின்றன. மிகவும் மேசமான நாடுகளாக ஈரான், வட கொரியா, சீனா, எதிர்ரேரியா, துர்க்மெனிஸ்தான்  ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.

2017 ஆம் இலங்கை இந்த சுட்டெண் பட்டியலில் 141 வது இடத்தில் இடம் பெற்றிருந்தது. எனினும் 2018 இல் இலங்கை  131 இடத்தில் இடத்திற்கு முன்னேற்றம்  பெற்றதோடு இம் முறை 5 இடங்கள் முன்னேற்றமடைந்து 126 ம் இடத்திற்கு முன்னோக்கி இடம்பெற்றமை  விசேட அம்சமாகும்.

இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் நோர்வேயும் இரண்டாம் இடத்தில் பின்லாந்தும் இடம் பெற்றுள்ளது.

அந்தந்த நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரநிலைமைக்கு அமைய நாடுகள் வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கறுப்பு என்ற 5 பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன.

சிறந்த ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வெள்ளை நிற வலையத்திற்கு உள்ளவாக்கப்படுகின்து. இதில் 8% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடக சுதந்திரம் ஓரளவுக்கு சிறப்பாகவுள்ள நாடுகள் மஞ்சள் நிற வலையத்திற்குள் உள்ளவாக்கப்படுகின்து. இம்முறை இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 16% மான   நாடுகள் இந்த வலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

செம்மஞ்சள் நிறத்திற்குட்பட்ட வலையத்தில் இடம் பெற்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் தொடர்பான பிரச்சனை நிலவுகின்றதாகும். இதில் ஜப்பான், பிறேசில், இஸ்ரேல், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட 37% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.

சிவப்பு வலையத்திற்குட்பட்ட நாடுகள் என்பது ஊடக சுதந்திரம் மிக சிறப்பாக இல்லை என்பதாகும். ரஷ்யா, இந்தியா, மாலைத்தீவு உள்ளிட்ட 29% மான நாடுகள்  இடம் பெற்றுள்ளன.

ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகள் கறுப்பு வலையத்திற்குட்பட்டதாகும். ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகளில் வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற 11% மான நாடுகள்  இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்லையற்ற ஊடகவியலாளர்கள் என்ற சர்வதேச அமைப்பினால் இந்த சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்கா 48 ஆவது இடத்திலும் அரசியல் குழப்பம் காணப்படும் வெனிசுலா 148 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்க இந்த பட்டியலை நிராகரித்துள்ளமையும் கவனிக்க வேண்டிய விடயமாகும். தேர்தல் மற்றும் இந்து தத்துவ வாதத்தை கக்கி வரும் இந்தியா 40 ஆவது இடத்திலுள்ளது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்காலத்தில்  ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனலாம். வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இந்த நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்க கூடாது.ஊடக ஒடுக்குமுறை குறைப்பட்டுள்ளதோடு வெள்ளை வான் கலாசாரம், ஊடகவியலாளர் படுகொலை மற்றும் காணாமல் போதலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது .

எமது நாட்டு ஊடகத்துறையினை பொறுத்தவரை, ஊடகசுதந்திரம் என்பது அந்த சுதந்திரத்தை மீறும் வகையில் தான் தற்போது பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றது. இது ஊடக சுதந்திரத்திற்கு ஒரு ஆரோக்கியமான நிலைமை அல்ல.

 இனவாத சாயத்தை பூசும் ஊடகங்களே காணப்படுகிறது. தமது விற்பனை செய்தி பண்டமாக இனத்துவேச செய்திகளே ஊடகங்களினால் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த நிலைமை  இந்நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் தள்ளி விட ஊடகங்கள் விரும்புகின்றனவா என்று கூட மக்கள் கேட்கும் அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.

ஊடகங்கள் எப்போதும் பொறுப்புணர்வுடன் செயற்படத் தவறக் கூடாது. இவ்விடயத்தைக் கருத்தில் கொள்ளாது செயற்படும் பட்சத்தில் மீண்டும் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் குறித்து கண்ணீர் சிந்தும் நிலைமைக்கு உள்ளாக நேரிடும். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டிராமல் செயற்பட வேண்டியது சகல ஊடகங்களதும் முன்பாக இருக்கும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும்.

ஆக்கம்
இ.தனஞ்சயன் 

வெள்ளி, 21 டிசம்பர், 2018

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மறைமுகமான முகவரே ஊடகங்கள்!

"சட்டம் ஒருவனை நேசிக்க வற்புறுத்தா விட்டாலும் ஒருவனை தாக்கிகொலைசெய்வதில் இருந்ததாவது பாதுகாக்கும்" என்பது சட்டம் தொடர்பான நம்பிக்கையை ஆழப்படுத்தும் எண்னக்கருவாகும். சமூகம் மற்றும் மக்களின் உரிமைகள் செம்மையான முறையில் பேணப்படுவதற்கு சட்டம் உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும். ஒருவனோ அல்லது குழுவோ தனக்குரிய/தமக்குரிய  உரிமை சார்ந்த விடயங்களை நாட்டின்  சட்டத்தின் அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும்.
   சட்டம் என்பது சமுகத்தின் ஒருங்கிசைவு சமூக மேம்பாடு போன்றவற்றை பாதுகாப்பதாக அமைய வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலையும் போது நாடு அதாள  பாலத்திற்குள் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக செல்லக் கூடும். சட்டம் என்பது சமூகத்தின் ஒழுங்குகளை பேணிப்பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். அதனை உரிய முறையில் அமுல்படுத்தும் போதே அது வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்கதாக அமையும்.
      சட்டபுத்தகத்தில் உள்ளதனை நடைமுறைப்படுத்தும் போதும் அதனை பின்பற்றுவதும் கடினமானதாகவே தோன்றும். எனினும் காலப்போக்கில் அது நடைமுறைக்கு வந்துவிடும். நீதி மற்றும் ஊடகம் என்பவை சுயாதீனமானதாகும். நீதிக்காக போராடும் முதலாவதும் இறுதியானதுமான சட்ட இராஜ்சியத்தின் தலைநகரம் நீதிமன்றம் எனலாம். குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்/சட்டத்தை பாதுகாத்து நீதியை பேணுவதில் மறைமுகமாக பங்காற்றும் முகவர் ஊடகங்களே ஆகும். சட்டங்களை நடைமுறைப்படுத்தி சமுகத்தின் கண்ணாடியாக விளங்குவது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக அழைக்கப்படும் ஊடகங்களே ஆகும். அது மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.
      கடந்த காலங்களில் இலங்கையின் ஊடகத்துறையில் மிகவும் ஆபத்தான துறையாகவே பார்க்கப்பட்டது. ஊடகத்துறையினர் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், கொலை முயற்சிகள் மற்றும் கொலை அச்சுறுத்தல் போன்றன கருத்து மற்றும் ஊடக சுதந்திரம் எதிர்மறையான சிந்தனைப்போக்கே காணப்பட்டது. எனினும், தற்போதைய நிலையில் ஊடக துறை தொடர்பாக சற்று ஆரோக்கியமான மனநிலையே காணப்படுகிறது. அதற்கு பிரதான காரணம் இனைய மற்றும் சமூக ஊடகங்களின் அபரிமிதமான அபிவிருத்தி என்றே எண்ணத் தோன்றுகின்றது. இலங்கை சட்டத்தின் கருத்து சுதந்திரம் 14 ம் சரத்தின் அடிப்படையில் தெளிவான சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும் எந்த அளவு தூரம் சட்டம் பிரயோகப்படுத்தப்படுகின்றது என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
    ஊடகங்கள் என்பது வெகுஜன பார்வையாளர்களினை கொண்டுள்ளது. அக் குறித்த ஊடகங்களின் வாயிலாக மக்கள் மத்தியில் கருத்ருவாக்கம், விம்பகட்டமைப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தல், செய்தி அறிக்கையிடல், தகவல்களினை வழங்குதல், பகுப்பாய்வு செய்தல், புலனாய்வு தளத்தில் செய்தியை வழங்குதல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். ஊடகங்கள் என்பது தனித்து களிப்பூட்டுவனவாக மாத்திரமல்லாது மக்களிற்கு அறிவூட்டுவதாக அமைய வேண்டும். அதாவது, ஊடகங்கள் சம்பவங்களை நன்றாக ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து என்ன? எங்கே? ஏன்? எப்படி நடந்தது? யார் பங்கு தாரர்கள் போன்ற கேள்விக்குரிய பதில்களை  மக்களிற்கு வழங்குவதாக இருக்க வேண்டும்.
      ஊடகங்கள் மக்களினை நடப்பு விவகாரங்கள் தொடர்பாக இற்றைப்படுத்தி வைப்பதற்கு பயன்படும் இலகுவான சாதனமாகும். இன்றைய உலகில் எப்பகுதியானாலும் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, சிரியா, ஜேர்மனி என எங்கு என்ன நிகழ்வு நடந்தாலும் இலகுவாகஇலகுவாக தகவல்களினை பெற்று கொள்ள முடிகிறது. உதாரணமாக, பிரான்ஸில் நடைபெறும் மஞ்சள் அங்கி போராட்டத்தை குறிப்பிடலாம். இன்று மக்களினை ஒளியூட்டும் இரு விசைகளாக சூரியன் மற்றும் ஊடகங்களினை குறிப்பிடமுடியும்.
       ஊடகங்கள் தற்காலத்தில் நிகழும் மனித உரிமை மீறல்கள், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள், ஜனநாயக பிறழ்வு நடவடிக்கைகள் போன்றவை தொடர்பில் விழிப்பூட்டும் செயற்பாட்டில் பிரதான பங்கு வகிக்கிறது. உதாரணமாக சிரியா மற்றும் ஜேமன் போன்ற நாடுகளில் இடம்பெறும் உள்நாட்டு மோதல்களினால் ஏற்படும் மனித மீறல்கள் சர்வதேச ஊடகங்களில் பிரதானப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசியல் சாசனத்திற்கு விரோதமாக இடம்பெறும் சம்பவங்களை ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் அது தொடர்பாக சட்ட ஏற்பாடுகளினை மக்களிற்கு தெளிவுபடுத்துகின்றன. காரணம் யாதெனில் மக்கள் இன்று சட்டம் தொடர்பான போதிய இன்மையுடனே காணப்படுகின்றனர். 
           ஊடகங்கள் குறித்த ஒரு குற்றச்செயல்களை வெளிப்படுத்தி பிரதானப்படுத்துவதோடு அதிகாரத்தில் உள்ளவர்களினை கேள்வி கேட்கின்றது. இதன்காரணமாக, அதிகார வர்க்கம் சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்தை உட்பட்டு நகர்த்துகின்றது. இதனூடாக சட்ட சிக்கல்களில் உள்ள மக்களிற்கு நீதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதிலிருந்து ஊடகங்கள் என்பது சட்டத்தை  நடைமுறைப்படுத்தும் முகவராக கொள்ள முடியும் என்பது உறுதிப்படுத்துகிறது. இதனாலேயே ஊடகங்கள்காவல் நாய்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஊடகங்கள் குற்ற செயல்கள், ஊழல்கள், சட்ட மற்றும் ஜனநாயக விழுமிய மீறல்கள் போன்றவற்றை பிரதானப்படுத்தி ஊடகங்களில் வெளியிடுவதுடன் அதனை உரியவர்களுக்கு அறிமுகப்படுத்தி குறித்த சட்ட மீறல்களில் ஈடுபட்டோருக்கு உரிய தண்டனையை பெற்று கொடுக்க உதவுகிறது. பிரச்சினைகள் மற்றும் அதற்குரிய தீர்வுகள் தொடர்பாக உரையாடுவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் சிறந்த அடித்தளமாக ஊடகங்களே அமைகின்றன. ஊடகங்களில் சிபாரிசு செய்யப்படும் தீர்வுகள் மக்களின் தீர்வுகளிற்கு இனையானவை எனவே சட்டத்தின் சார்பும் ஊடகங்களிற்கு சார்பானதாகவே அமையும். இது நடுநிலை சார்ந்த ஊடகங்களிற்கே பொருந்தும். இங்கு நடுநிலை என்பதே சிந்தனை மற்றும்  கேள்விக்குரிய விடயமாகும்.
            ஊடகங்கள் என்பது நீதி மீது நம்பிக்கை அற்று இருப்பவர்களுக்கும் புதிய நம்பிக்கை அளித்து நீதி மீது நம்பிக்கை வேண்டுமளவிற்கு ஊடகங்கள் செயற்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அமையவேண்டுமே தவிர மேட்டுக்குடியின் கூப்பாடாக ஊடகங்கள் அமையக்கூடாது. தண்டனைகள் அநீதியாக இருந்தால் அதனை சுட்டிக்காட்டுவதோடு சட்டத்திற்குட்பட்ட தண்டனைகளை அமுல்படுத்துவதில் உள்ள தாமதங்களினை எடுத்தியம்பி அதனை நடைமுறைப்படுத்த உதவ வேண்டும். அண்மையில் பாராளுமன்றத்தில் நடந்த குழப்பம், எரிபொருள் விலைமாற்றங்கள், இரு பிரதமர்,இரு எதிர் கட்சி தலைவர்கள், பினை முறி மோசடி போண்ற பிரச்சினைகள் ஊடகங்களில் அண்மையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளாக கூறமுடியும். மேலும், புங்குடுதீவு வித்தியாவின் கூட்டு பாலியல் பலாத்காரம் தொடர்பாக ஊடகங்கள் Follow up அறிக்கையிடலினை மேற்கொண்டு இறுதி தீர்ப்பு வரும் வரைக்கும் அவதானித்து வந்தமை அது தொடர்பாக மக்களிற்கும் தெளிவுபடுத்தியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.
     இன்றைய சமூகத்தில் ஊடகங்கள் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இருளை அகற்றி ஒளியேற்றும் சூரியன் போன்றே மக்களின் அறியாமையை போக்கி அறிவூட்டுவதாக ஊடகங்கள் விளங்குகிறது. அரசாங்கத்தை பதில் சொல்ல வைக்கும் அதிகாரம் ஊடகங்களிற்குண்டு . ஊடகங்களினை உதாசீனப்படுத்துவது மக்களினை உதாசீனபடுத்துவதற்கு சமமானது. இதுவே ஜனநாயக நாட்டில் ஊடகங்களிற்கு உள்ள பலமாகும். இது நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை உணர்த்துகிறது.
        சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரின் உரிமையையும் அதிகரித்துள்ளதுடன் மக்கள் தமது உரிமைக்காக போராடமுடியும். இது உள்ளூர்,வெளியூர் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டதாகும். இன்று பல போராட்டங்கள் சமூக ஊடகங்கள் ஊடாகவே ஒருங்கினைக்கப்படுகின்றன. உதாரணமாக, பிரான்ஸில் நடைபெறும் மஞ்சள் அங்கி போராட்டத்தை குறிப்பிடலாம். தகவல்கள் மற்றும் விவாதங்கள் ஊடகவே தெளிவு மற்றும் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காகவே ஊடகங்கள் சிறந்த தொடர்பாடல் கருவிகளான உரையாடல், கருத்து கணிப்புகள், விவாதங்கள், கருத்தாடல்கள் போன்றவற்றை மேற்கொள்கின்றன . ஊழல் மற்றும் சுரண்டல்களுக்கு எதிராக போராடுவதில் ஊடகங்களிற்கு பிரதான பங்குண்டு. ஊடகங்கள் தனித்து அறிக்கையிடுவது மாத்திரமல்லாது வெளிப்படையான நிர்வாகத்திறனை பேணுவதற்கு சிறந்த கண்காணிப்பாளராக ஊடகங்கள் இருக்க வேண்டும்.
    நிறைவாக, ஊடகங்கள் தனித்து அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடாது அதாவது அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்கத்தை குற்றம்சாட்டமால் மக்கள் எவ்வளவு தூரம் தமது வாழ்வியல் முறைகளினை சட்டம், விழுமியங்கள், நீதி மற்றும் அறத்திற்கு உட்பட்டு மேற்கொள்கின்றார்கள் என்பதனை தெளிவுபடுத்தி மக்களினை சட்டம் மற்றும் ஒழுங்குகளை பின்பற்ற செய்ய விழிப்புணர்வூட்டுவது ஊடகங்களின் பிரதான பொறுப்பு மற்றும் கடமையாகும். அவ்வாறு பின்பற்றும் போதே நிலையான நிம்மதியான சூழலை உடைய சமூகத்தை உருவாக்க முடியும்.

ஆக்கம்
இ.தனஞ்சயன்

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

சமாதான உருவாக்கத்தில் ஊடகங்களின் வகிபாகம்!

           
           சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை வெளிக்கொண்டுவருவதற்கு துணிவற்ற  செய்தி ஊடகம் இருக்கும் வரை, சமாதானம்,நல்லிணக்கம்  மற்றும் இன ஒற்றுமை தொடர்பாக உரையாடுவது சற்று கடினமானதே. பொதுவாக,  ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்ற போது, பெரும்பாலும் பரபரப்பான  மற்றும் சந்தைவாய்புக்களுகேற்பவே, செய்திகளை வெளியிடுகின்றது. 

            யுத்தத்திற்கு பின்னர்  அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் எமது அரசாங்கம் பாரிய அளவில் முயற்சித்தாலும் இன்றளவிலும் அதன் முயற்சி தோல்வியே. காரணம், சமாதானம் மற்றும் நல்லிணக்க கருத்துக்களினை மக்களிடம் கொண்டு சேர்கும்  ஊடகத்தின் பங்கு திருப்திகரமாக இல்லை. ஊடகங்கள் பிரபலமடைய வேண்டுமானால் இனவாதத்தை தமக்கு சாதகமாக்கவேண்டும்,நாட்டின் அபிவிருத்திக்கு அமைதி மற்றும் நல்லினக்கம் அவசியம்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக,எமது நாட்டில்  ஊடகங்கள் அதை நாசப்படுத்துகின்றன. 

                இன்றைய தினம் மின்னணு ஊடகங்கள் மற்றும் ஏனைய  ஊடகங்கள்  மூலமும்  தகவல்கள் விரைவில் பரவலடைகின்றது. எகிப்து மற்றும் துன்சீனிய புரட்சிகள், இந்தியாவின் அண்ணா ஹசாரேவின் போராட்டங்கள்  பொதுவாக, இவற்றை  கட்டுப்படுத்த முடியாதவை. இவற்றின் முலமாக சில சமயங்களில் தேசியப் பிரச்சினைகள் சில தனிநபர்களின் விருப்பங்கள் மற்றும் தமது சுயலாப அரசியல் நிகழ்ச்சி நிரல் அடிப்படையில்தீர்மானிக்கப்படுகின்றது. உதாரணமாக, அண்மையில் நடைபெற்ற கண்டி இடம்பெற்ற இனவெறி தாக்குதல்களை குறிப்பிடலாம். 
           
                 இணையத்தின்   விரைவான பரவல் மற்றும் அர்ப்பணிப்பு சமூக வலைத்தளங்களின் தளங்களின் எழுச்சி ஆகியவை சமூக இணைப்புகளின் உள்கட்டமைப்பை  வியத்தகு முறையில் மாற்றியுள்ளது. இன்றைய தினம் எந்த  செய்தியாக இருந்தாலும்  விரைவாக  பரப்பப்படகூடிய திறன் கொண்டது, அதன் தொலைநோக்கு விளைவுகளைத் தெரிந்துகொள்ளாமல் பொதுமக்களின் ஆர்வம் மற்றும் சமூக மதிப்புகள் என்பவற்றை பொருட்படுத்தாமல் சில சமயங்களில் ஊடகங்கள் செயற்படுகிறது.

                நாட்டில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கி ஊக்குவிப்பதில் ஊடகங்கள் ஒரு முக்கிய பங்கை செய்ய வேண்டும் என்று ஒரு குரலில் சமூக அக்கறையாளர்கள் வாதிட்டாலும் தேசியவாதத்தின் பெயரில் உள்ள சிக்கல்களின் சிந்தனையை மதிப்பிடுவதற்கு சில ஊடக செய்தித் தளங்கள் மற்றும் செய்தித்தாள்களின் செயற்பாடுகள் பற்றி  தவறாக விமர்சிக்க வேண்டியுள்ளது. செய்தி ஊடகத்தில் சுய கட்டுப்பாடு மற்றும் வெளியில் இருந்து எந்த அழுத்தமும் சுமத்தப்படக்கூடாது என்று ஊடக ஒழுக்கவியலை  ஒப்புக் கொண்டாலும், ஊடகங்களினுள் அதன் சமூக கடமைகளையும் பொறுப்புக்களையும் கவனித்துக் கொள்கின்றதா என்பது சற்று கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். 
         
            நாட்டின் தற்போதைய நிலையில், சமாதான மற்றும் இன நல்லிணக்கத்தை பராமரிப்பதற்காக ஊடகங்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டிய கடப்பாடு  உள்ளது. ஆனால் ஊடகங்களின் ஒரு பகுதியினர் தங்களது கொள்கைகளிலிருந்து தவறாக வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்தும் முரண்பாடு இதழியல் அம்சங்களையே பயன்படுத்தி வருகின்றனர் எனினும் சமாதான இதழியல் பண்புகள் இன்னும் எமது நாட்டு ஊடகத்துறையில் பயன்படுத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

இ.தனஞ்சயன் 
                  

சனி, 8 செப்டம்பர், 2018

மனக் கவலை தீர்த்தருளி, தான் நினைத்த எல்லாம் தரும் நல்லூரானின் தேர் பவனி .......

"அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்! வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்! முருகா என்று ஓதுவார் முன்" வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அலங்கார கந்தன் என்று வர்ணிக்கப்படுகின்ற யாழ்ப்பாண நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழாவின் தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்றைய தினம் 08/09/2018 அதிகாலை 7.30 அளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில், நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் அடியார்கள் வருகைதந்ததுடன் தேர்த்திருவிழா சம்பிரதாயப் பூர்வமாக இடம்பெற்றது. இதன்படி, நல்லூரில் ஊடக நிறுவனங்கள்,வியாபார நிறுவனங்கள் என நல்லூரை மையப்படுத்தி நிறுவன மேம்படுத்தல் செயற்பாடுகளும் இடம்பெற்றன. இந்நிலையில், யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய அடையாளமாக விளங்குகின்ற வரலாற்று சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா வழமைபோன்று சிறப்பாக இடம்பெற்றதுடன் இம்முறை ஆலயத்திற்கு பொற்கூரை இடப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 'என்னே விதியின் பயன் இங்கு இதுவோ. . . . பொன்னே மணியே பொருளே அருளே...... மன்னே மயிலேறியவனே. .....' கந்தனுபூதி இ.தனஞ்சயன்

சனி, 1 செப்டம்பர், 2018

ஊடகங்களின் நெறிமுறை சார்ந்த வரம்பு எல்லைகளை புரிந்து கொள்வது அவசியம்!

ஹார்வர்ட் பல்கலைகழக மாணவரான மார்க் சூபேர்க் 2004ம் ஆண்டு பல்கலைக்கழக நண்பர்களிற்கு இடையில் தொடர்புகளை பேனுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது இன்று தொடர்பாடல் மற்றும் ஊடகத்துறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. இது உலகையே மிகவும் இலகுவான சமூக தொடர்பாடல் மிக்க இடமாக மாற்றியமைத்துள்ளது. இன்று , உலகளாவிய ரீதியாக எங்கும் நடைபெறு‌ம் நிகழ்வை நாம் நேரடியாக பார்வையிட முடியும்.
    இந்த நிலையில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூகுள்,Twitter மற்றும் Facebook மீது எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, குறித்த ஊடகங்கள் Conservative media களினை Google நிறுவனம் முடக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த கருத்தை கூகுள் நிறுவனம் அடியோடு மறுத்துள்ளது. இதேவேளை, தாம் எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் இயங்குவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ட்ரம்ப் அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனின் வோட்டகேட் ஊழலை புலனாய்வு இதழியல் நுட்பத்தை பயன்படுத்தி வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளரினையும் கடுமையாக சாடினார்.
     இவ்வாறாக கடந்த வாரம் ஊடகங்கள் மீது சீறிப்பாய்ந்து இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி. ட்ரம்ப் ஊடகங்கள் மீது இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பது இது முதன்முறை அல்ல. அமெரிக்க அதிபர் தேர்தல் காலங்களில் கூட CNN இனை போலி ஊடகம் என்று விமர்சித்திருந்தார். மக்களின் எதிரியாக(Enemies of people) ஊடகங்களினை ட்ரம்ப் பார்க்கிறார். இது பிரதான ஊடகங்களிற்கு ட்ரம்ப் மீது எதிர்மறையான சிந்தனையை தோற்றுவித்துள்ளது. 
    ஜனநாயகத்தை நிலைநாட்டும் முக்கிய காரணியாக ஊடகங்கள் காணப்படுகிறது. ஜனநாயகத்துக்கு விளக்கம் கெடுக்கும் அமெரிக்காவில் கூட ஊடகங்கள் பக்கசார்பு என்பது சிந்தனைக்குரியது. சட்டம், நீதி, நிர்வாகம் என்பவற்றை அடுத்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்கள் விளங்குகிறது. அமெரிக்க என்று மட்டுமல்ல உலகம் பூராகவும் ஊடகங்களின் செல்வாக்கு வியாபித்துள்ளது. மக்கள் அன்றாட வாழ்வில் இடம்பெறும் தகவல்களினை மாத்திரமல்லாது, எவ்வளவு தூரம் ஊடகங்கள் குறித்த செய்திக்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். எந்த செய்திக்கு முதன்மை அளிக்கின்றன என்பதில் இருந்து ஊடகங்களின் நிகழ்ச்சி நிரலினை கண்டுகொள்ள முடியும்.
     இணையத்தின் வருகையில் இருந்து ஊடகங்கள் முதன்மை அளிக்கின்ற தன்மைகள் மாற்றம் அடைந்துள்ளது. இதனையே பிரஜைகள் ஊடகவியல் எனும் எண்னக்கருவானது குறிப்பிடுகிறது. இன்றைய ஊடகங்கள் முற்றிலும் மாறுபட்டது. சாதாரண மக்கள் கூட இன்று உலகலாவிய ரீதியாக பூகோள தடங்கல்களினை கடந்து தமது எண்ணங்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்ய முடிகிறது. மக்களிற்கு விழிப்புணர்வு ஊட்டுவதாக ஊடகங்கள் காணப்படுகிறது.
      மேலும், சமூக ஊடகங்கள் இன்று விவாதத்திற்கு மிகவும் பரந்த வெளியை உருவாக்கியுள்ளது. அண்மையில் மகாவலி திட்டத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் வெடுக்குநாறி வழிபாட்டுக்கு ஏற்படுத்தப்பட்டு இருந்த தடைக்கு எதிரான மக்கள் கருத்துக்கள் சமூக ஊடகங்களே பிரதானப்படுத்தியிருந்தன. இதேவேளை, எகிப்தில் இணையதளத்தளங்களினை முடக்குவதற்கு புதிய சட்டத்தை அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் பத்தாம் அல் சிசி விதித்து இருந்தார். இது ஏற்கனவே 600 இனையத்தளங்கள்  எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
     இன்றைய நிலையில், சமூக ஊடகங்களினை இலகுவாக கையாளக் கூடிய நிலை இருந்தாலும் ஊடகங்களின் நெறிமுறை சார்ந்த எல்லை வரம்புகளை அறிந்து அவற்றின் எதிர்மறையான தாக்கத்தில் இருந்து விடுபட்டு ஊடகங்கள் நம்மை பெறுமதியுடையதாக்கவேண்டும்.
இ.தனஞ்சயன்

சனி, 25 ஆகஸ்ட், 2018

2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடருக்கான இலங்கை அணியின் தயார்நிலை!

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்களே நம்பிக்கை வைப்பதற்கு தயக்கமடைகின்ற தருணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாப்பிரிக்காவுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை முழுமையாக வெள்ளையடிப்பு செய்ததுடன் ஒரு நாள் தொடரில் 3 க்கு 2 என்று தொடரை இழந்து இறுதியாக இடம்பெற்ற ஒற்றை இருபது இருபது தொடரை தனதாக்கியது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையினருக்கு இது சில சமயங்களில் திருப்தி மற்றும் சந்தோசங்களை வழங்கியிருந்தாலும் குறித்த முன்னேற்றங்களை தக்கவைக்க இலங்கை கிரிக்கெட் சபை முயற்சிக்குமா என்பது சிந்தனைக்குரியது. காரணம், இலங்கை கிரிக்கெட் சபைக்குள் இடம்பெறும் கசப்பான சம்பவங்களே இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கான காரணமாகும். இதேவேளை, விளையாட்டு துறை சட்டத்தின் மூலமாக அந்த துறை சார்ந்தஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் எல்லையற்ற அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவே நியமிக்கப்போவதாகவும் கடந்த வாரம் செய்தியொன்று வெளிவந்து இருந்தது. குறித்த சட்டம், இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெறும் அழுத்தத்தை குறைக்க போதுமான சட்ட எல்லைகளை கொண்டுள்ளதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்டிலும் அமைச்சர்களின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது. இதற்கு அண்மைய உதாரணமாக, முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கவிற்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், தரவரிசையில் தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணியை விட முன்னிலையில் இருந்தாலும், இலங்கை அனி தமது சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து இந்த டெஸ்ட் போட்டியினை வெற்றி பெற்றது. எனினும், இதே அணியை கொண்டு ஏன் மேற் இந்திய மன்னில் வெற்றி பெற முடியவில்லை. அத்துடன் போட்டி விதிகளை மீறியதாக இலங்கை அணி மீது குற்றச்சாட்டு பின்னர் நிரூபித்து அணியின் தலைவர் மற்றும் பயிற்றுவிற்பாளர்களுக்கு போட்டித்தடை. இலங்கை அணியுடன் விளையாடிய மேற்கிந்திய அணி முதற்தரமான அணியும் அல்ல. கோல்டர் தலைமையிலான இரண்டாம் தர அணியே. ஆகவே, இலங்கை அணி வெளிநாட்டு மண்ணில் கடந்த பல ஆண்டுகளாக தடுமாறியே வருகிறது. இலங்கை அனி இன்னமும் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் எந்த டெஸ்ட் தொடரையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 1996 இல் இலங்கை இந்திய உபகண்டத்திலேயே உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது. எனினும், 1999 இல் இங்கிலாந்தில் நடந்த உலகக்கிண்ணத்தை கைப்பற்ற முடியவில்லை இரண்டாவது சுற்றுக்குகூட தகுதிபெறமுடியவில்லை. 1996 ல் விளையாடிய 6 வீரர்கள் குறித்த உலகக்கிண்ண போட்டியில் விளையாடி இருந்தனர். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள உலக கின்ன போட்டியானது இங்கிலாந்தில் இடம்பெறுகின்ற சமயம் இலங்கை கிரிக்கெட் சபையினாது பொறுபற்று செயற்படுமாயின் 1999 நடந்த சம்பவமே மீள இடம்பெறும். இந்நிலையில் தற்போது இலங்கையில் நடாத்தப்ட்டுவரும் உள்ளூர் இருபது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் குறித்தும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மகேல குற்றம்சாட்டியுள்ளார். 84 வீரர்களில் 44 வீரர்கள் மாத்திரமே வாய்ப்பை பெறும் அதேசமயம் ஏனைய 40 வீரர்கள் வெறும் பார்வையாளராகவே இருக்க வேண்டிய நிலை. இவ்வாறான நிலையில் இலங்கை அணியின் அடுத்து வரும் ஆசிய கிண்ன, இங்கிலாந்து,தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான தொடர்கள் உலககிண்ன போட்டிகளிற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இருக்கும் போட்டிகள் ஆகும். குறித்த போட்டிகளினை கடந்து எவ்வாறு 2019 உலக கின்ன போட்டிகளில் பங்கு பற்றி மீண்டும் ஒரு உலககிண்னத்தை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெற்று கொடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இ.தனஞ்சயன்

சனி, 18 ஆகஸ்ட், 2018

ஊடகங்களின் எல்லையை விரிவடையச் செய்யும் உலகமயமாக்கல்!

இன்றைய சமுகத்தை கட்டுமானம் செய்வதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது. ஒவ்வொரு மனிதனின் நாளாந்த வாழ்கையின் முக்கிய பகுதியாக ஊடகங்கள் காணப்படுகிறது. ஒரு விடயம் பற்றிய கருத்துகளினை உருவாக்கும் பங்கினை ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் அடிப்படையாகக் கொண்டே காணப்படுகிறது. அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் முக்கியமான தொடர்பாடல் கருவியாக ஊடகங்கள் விளங்குகிறது. ஊடகங்களின் பிரதான பணியாகக் காணப்படுவது உலகிற்கு எந்த ஒரு தகவலினதும் சரியான விடயம் எது? பிழையான விடயம் எது? என்பதேயாகும். சரியான நேரத்தில் சரியான விடயத்தை சரியான முறையில் கொண்டு சேர்கும் பாரிய பொறுப்பு ஊடகத்திற்குண்டு. ஊடகங்கள் எங்களைச் சுற்றிய அனைத்தையும் முன்னிலைப்படுத்துகின்றது. உதாரணமாக, இணையம், தொலைக்காட்சி, வானொலி,சஞ்சிகை மற்றும் பத்திரிகை போன்றவற்றை குறிப்பிடலாம். குறித்த ஊடகங்கள் வாயிலாக வரும் தகவல்கள்/செய்திகள் அடிமட்ட மக்களினை சென்றடையும் போதே ஊடகங்கள் வெற்றி அடைகின்றன. சமுக பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்கள் தொடர்புகொண்டுள்ளனர். இவ்வாறான விடயங்களை ஊடகங்கள் வாயிலாகவே வெளிக்கொணரமுடியும். இதன்காரணமாக, மக்கள் ஊடகங்களில் தங்கியுள்ளனர். ஊடகங்கள் மக்களில் தங்கியுள்ளது. தற்போதைய நிலையில், ஊடகங்களினை மக்கள் தவிர்க்க முடியாது. மக்களிற்கு தகவல்களினை வழங்கி அவர்களிற்கு பல்வேறு செய்திகள், நிகழ்வுகள், சமூக நடவடிக்கைகள், வாழ்க்கை முறைமை, பொழுது போக்கு மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை தெளிவுபடுத்துவதாக ஊடகங்கள் காணப்படுகிறது. இலங்கையில் இருந்துகொண்டே, உலகின் எப்பகுதியானாலும் கனடாவோ,ஜேர்மனியோ , தென் கொரியாவோ, அவுஸ்திரேலியாவோ நடைபெறும் நிகழ்வுகளை நேரடியாக கண்டு கொள்ள முடிகிறது. அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியினை உதாரணமாக குறிப்பிடமுடியும். ஊடகங்கள் சமுகம் மற்றும் அவற்றின் கலாச்சாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனினும் உலகமயமாக்கலின் விளைவினால், ஊடகங்கள் பாரிய செல்வாக்கினை பெற்றுள்ளதுடன் மக்களிற்கு பல சாதக பாதக விடயங்களும் காணப்படுகிறது. பல்வேறு வகையான சமூகங்களின் ககலாச்சாரங்களை ஊடகங்கள் வேறு சமூகத்திற்கு சொல்லி கொடுக்க வழிஏற்படுகின்றது. உதாரணமாக, வட இந்திய நாடகங்கள் தமிழிற்கு டப்பிங் செய்தல் மற்றும் தென் இந்திய திரைப்படங்களின் அதீத தாக்கத்தை இலங்கை தமிழ் சமூகத்தை குறிப்பிடலாம். இதன்காரணமாக, ஊடகங்களினை மக்கள் சாட்சியாக பார்கின்றனர். ஊடகங்களே உலக நிகழ்வுகள் தொடர்பாக அறிவூட்டலை வழங்குகிறது. இத்தகைய ஊடகங்கள் அரசியலில் முக்கிய பிரச்சார ஊடக கருவியாகப் பயன்படுத்துகின்றது. நாட்டின் தலைவர்களினை மக்கள் தெரிவுசெய்வதற்கு மக்களினை குறித்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களினை நியாயப்படுத்தும் கருவியாக ஊடகங்களே காணப்படுகிறது. ஊடகங்களினை பொறுத்தவரை சாதக பாதக அம்சங்கள் காணப்பட்டாலும் மக்களின் சுபாவம் மற்றும் மனநிலையிலேயே அதன் சாதக பாதகங்களை தீர்மானிக்க முடியும். ஊடகங்களின் தாக்கத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளும் போது, அதனை எமக்கு சாதகமான முறையில் சூழலினை உருவாக்க முடியும். ஊடகங்களின் செல்வாக்கு காரணமாக, தனிநபர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளில் மாற்றங்களை உண்டாக்க முடியும். உலகமயமாக்கல் காரணமாக, இன்று எமது சாதாரண கருத்துக்கள் கூட இலகுவாக உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் எடுத்துச் செல்லப்படுகின்றது.
ஆக்கம்: இ.தனஞ்சயன்


சனி, 4 ஆகஸ்ட், 2018

அரசியல் ஆடுகளத்திலும் வெற்றி பெற்ற இம்ரான் கான்!

அண்மைக்காலங்களில் விளையாட்டு உலகில் பரபரப்பான சம்பவங்கள் இடம்பெற்றன. உலகக்கிண்ண கால்பந்து போட்டி,இலங்கை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி,இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி என போட்டிகள் நடைபெறும் அதேசமயம் போட்டிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய விடயங்களும் இடம்பிடித்து ஊடகங்களுக்கு நல்ல விருந்தாக அமையும். அதிலும் குறிப்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர், திலங்க சுமதி பால அர்ஜுன ரணதுங்க மற்றும் அரவிந்த டீ சில்வா மீது சூதாட்டத்தில் தொடர்பு பட்டதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்ததும் அதனைத் காலாவதியான குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்களுக்கு பதிலளித்து இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான முதல் பேட்டியில் தோற்றதற்கு திலங்க சுமதி பாலா தம்புள்ள மைதானத்திற்கு விஜயம் செய்தமை சந்தேகப்படவைக்கின்றது என முன்னாள் வீரர்கள் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, இலங்கையில் விளையாட்டுத்துறை அரசியலில் மூழ்கி பரிதாபமாக காணப்படும் நிலையில் விரைவில் கிரிக்கெட் சபை தேர்தலினை நடாத்தும் படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் கவனிக்க வேண்டியது. இதேவேளை, 2020 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த சங்ககார குறித்த ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராக களமிறங்குவார் எனவும் அவர் அரசியலில் ஈடுபட வரவேண்டும் என ராஜித சேனாரத்ன அண்மையில் குறிப்பிட்டு இருந்தமை கவனிக்க வேண்டியது. இந்த நிலையில், எமது அயல் நாட்டின் பரம எதிரியான நாடான பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் மற்றும் 1992 உலகக்கிண்ணத்தை பாகிஸ்தானிற்கு பெற்று கெடுத்த அணித்தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தானிய பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணியின் ஆதரவுடன் பிரதமராகின்றார்.65 வயதான இம்ரான் கான் 1996 ஆம் ஆண்டு அரசியலிற்கு நுழைந்தாலும் அரசியலில் 22 வருடங்களாக போராடியே தனது பிரதான இலக்கை (Main Goal) அடைகின்றார். இவருடைய பிரதான கொள்கையாக பாகிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்தல் மற்றும் ஊழல் மோசடிகளை இல்லாது ஒழித்தல் போன்றன காணப்பட்டாலும் பிரதமராக பதவியேற்ற பின்னர், குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சவால்கள் காணப்படும் என்பது மறுப்பதற்கில்லை. பாகிஸ்தானில் இராணுவத்திடம் அதிகாரம் காணப்படுகின்ற நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தின் செல்லப்பிள்ளையாகவே இருக்க வேண்டிய நிலை இருக்கும். அத்துடன் இம்ரான் கானின் வெற்றிக்கு பின்னால் இராணுவத்தின் உழைப்புள்ளது என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இதேவேளை, பூகோள அரசியல்ரீதியில் பாகிஸ்தான் அமைவிடம் இந்திய, சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் அரசியலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட நாடுகளுடன் எவ்வாறான அரசியல் இராஜதந்திர தொடர்புகளை கையாழப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறான சூழலில்,"இந்தியா ஒரு அடி எடுத்தால் நான் இரண்டு அடி எடுப்பேன்" என்று கூறியுள்ளார். இதேவேளை, தான் பதவியேற்கவுள்ள ஆவணி மாதம் 15 ம் திகதி நடைபெறும் நிகழ்வில் இந்திய பிரதமர் மற்றும் தன்னுடைய காலத்தில் இந்திய அணியில் விளையாடிய கபில்தேவ் மற்றும் சுனில் கவாஸ்கருக்கும் அழைப்பு விடுக்க இருக்கின்றமை மேற் சொன்ன கருத்தை உயிரோட்டமிக்க தாக்குகின்றன. சர்வதேச அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்காவுடன் முரண்பட்ட கருத்துக்களினை கொண்டுள்ள இம்ரான் எப்படி பாகிஸ்தானினை மாற்றி அமைத்து கொள்வதுடன் சர்வதேச அளவில் வருகின்ற சவால்களை வெற்றி கொள்ள போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதேநேரம், குறித்த வெற்றி தொடர்பாக, இம்ரான் கானின் முதல் மனைவி Ms Gold smith குறிப்பிடும் போது 22 வருட தியாகம்,தடைகளை வெற்றி கொள்ளுதல் மற்றும் நிராகரிப்புக்களை தாண்டி பாகிஸ்தானின் புதிய பிரதமரான எனது மகன்களின் தந்தைக்கு வாழ்துக்கள் என்று கூறினார்."22 years later, After humiliation, hurdles and sacrifice, My son's father is Pakistan's new prime minister". நிட்சயமாக, கிரிக்கெட் ஆடுகளத்தில் எதிர்கொண்ட சவால்களை விட பாரிய அளவில் சவாலுக்கு முகம்கொடுக்க நேரிடும். எது எப்படியோ, எமது நாட்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அரசியலிற்கு வந்து பாராளுமன்றம் சென்ற வீரர்களை காணமுடியும். ஆயினும், இம்ரான் தனது போராட்ட குணம் மற்றும் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி நகர்ந்து வெற்றி பெற்ற விதத்தில் இருந்து ஓர் முன்மாதிரியாக விளங்குகின்றார். ஆக்கம்: இ.தனஞ்சயன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் மாணவன் மற்றும் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சி பிரிவின் உதவி தயாரிப்பாளர்)

சனி, 28 ஜூலை, 2018

குறைந்த கணத்தில் பெரும் திரளான மக்களை சென்றடையும் தொலைக்காட்சி சமூக மயமாக்கலிற்கான வரப்பிரசாதமே!

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் வெகுஜன ஊடகங்களில் இரண்டாவது மிகப்பெரிய ஊடகமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. அதன் வளர்ச்சி நாளுக்கு நாள் உலகம் பூராகவும் அதிகரித்து செல்வதனை காணமுடிகிறது. அதனுடைய காட்சி வடிவில் கதைகூறும் பானியானது மக்களிடையே பெரும் செல்வாக்கு மிகுந்ததாக இருக்கிறது. சமூகத்தில் இடம்பெறும் வழமைக்கு மாறான சம்பவங்களை மக்களிற்கு கொண்டு செல்லும் ஓர் சாதனமாகும்.  

ஊடகவியலாளர்கள் மக்களின் தகவல் தாகத்தை தீர்த்து வைக்கும் வகையில் செய்தியாக்கம் செய்வார்கள். செய்தி மாத்திரம் அல்ல மக்களிற்கு சிறந்த பொழுது போக்கு அம்சங்களை வழங்கும் ஊடக மாகவும் தொலைக்காட்சி காணப்படுகிறது. பொதுமக்களிற்கு அரசியல், சமுக,கலாச்சார மற்றும் பொருளாதார நிலைமாற்ற அவசியம் தொடர்பாக அறிவூட்டும் ஓர் அதிகாரம் மிக்க சாதனம் தொலைக்காட்சி ஆகும். அரசியல், சமூக, கலாசார,அறிவியல், விளையாட்டு,பொழுது போக்கு, கலை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் தற்போதைய உலகில் மத்திய கூறாக விளங்குவது தொலைக்காட்சி யாகும்.தொலைக்காட்சியின் ஆங்கில சொல்லான  Television லத்தீன் மற்றும் கிரேக்க சொல்லின் கலவையாகும். Tele என்பது கிரேக்க செல்லாகும் 'Far' என்று ஆங்கிலத்தில் அர்த்தமாகும். Visio என்பது லத்தீன் சொல் ஆங்கிலத்தில் sight என்று அர்தப்படுத்தி பின்னர் அதுவே Television எனும் தொலைக்காட்சி யானது. காட்சி தற்கால சமூகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

      இன்றைய போட்டி மிக்க சூழலில் காட்சி வடிவில் தகவல்களினை வழங்கி பார்வையாளர்களினை விமர்சன கண்னோட்டத்தில் சிந்திக்க செய்வதில் பெரும் பங்கு தொலைக்காட்சிக்குஉள்ளது. செய்திகளை தொலைக்காட்சி யில் அறிக்கையிடும் பானியானது இன்று விமர்சனத்துக்குரியதாகக் காணப்படுகிறது. இலங்கையில் காணப்படுகின்ற தொலைக்காட்சிகளை பொறுத்தவரை தமது தனிப்பட்ட சுயலாப அரசியலினை முன்னெடுக்கும் பிரச்சார ஊடகங்களாகவே விளங்குகிறது. வானொலியின் ஆதிக்கத்தில் இருந்து முன்னணியினை தொலைக்காட்சி வகித்தாலும் வானொலிக்கான தனித்துவமான நேயர்கள் காணப்படுகின்றமை புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் வானொலிகளின் எண்ணிக்கைகளை கொண்டு அறிய முடிகிறது. அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் தொலைக்காட்சியினை மக்கள் உயிரோட்டமிக்க ஓர் இடமாக கருதுகின்றனர் என்று ஆய்வு முடிவு பெறப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஆய்வில், வருடத்தில் ஓர் சராசரி மனிதன் 3000 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி அல்லது தொலைபேசியுடன் செலவு செய்கின்றான். 

     மேலும், தொலைக்காட்சி யானது அதனுடைய செல்வாக்கு மற்றும் தாக்கம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகிறது. குறிப்பாக, சிறுவர்களின் மனப்போக்கில் தவறான மாதிரிகாட்சி உருக்களை ஏற்படுத்துகிறது. தற்போதைய காலகட்டத்திலதற 75 வீதமான சிறுவர்கள் தமது பொழுதுபோக்கிக்காக தொலைக்காட்சியினையே தெரிவு செய்கின்றனர். பெற்றோரும் சிறுவர்கள் தமக்கு தொல்லைஇல்லாமல் இருப்பதற்காக தொலைக்காட்சியினை தமது குழந்தைகள் பார்பதற்கு அனுமதிக்கின்றனர். குழந்தைகள் தொலைக்காட்சி யில் எவ்விதமான நிகழ்சிகளை எவ்வளவு தூரம் பார்கின்றார்கள் என்பது தொடர்பாக பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும். தொலைக்காட்சியினை எதிர்மறையான தாக்கத்தில் இருந்து விடுபட தொலைக்காட்சி எவ்வித தாக்கத்தை உண்டுபண்னுகின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நாளைய எதிர்கால சந்ததியான குழந்தைகளை பாதுகாத்து நேர் சிந்தனைமிக்க சமூகத்தை உருவாக்க வேண்டும். அரசியல் ரீதியாக கருத்துருவாக்கங்களை இலகுவாக மேற்கொண்டு தமது இலக்கு பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல தொலைக்காட்சி மிக சிறந்த சாதனமாகும். அண்மையில் விஜயகலா மற்றும் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை தொடர்பாக இலங்கை தொலைக்காட்சி களில் அதிகம் இடம்பிடித்து இருந்தது. அத்துடன் இன்றைய நிலையில், தொலைக்காட்சி பற்றிய அதிகமான விமர்சனங்கள் காணப்பட்டாலும் நவீன காலத்தில் மனித வாழ்க்கையின் முக்கிய பகுதியாக அரசியல், சமுக, பொருளாதார, காலநிலை, விளையாட்டு மற்றும் விளம்பரம் என்று ஒவ்வொரு பகுதியிலும் தொலைக்காட்சியின் செல்வாக்கு அளப்பரியது. தற்போதைய உலகமயமாக்கல் சூழலில் நவீன ஊடகங்களின் வரவு மற்றும் ஊடக ஒருங்கிணைப்பு காரணமாக தொலைக்காட்சியின் நிகழ்ச்சி உள்ளடக்கம் உலகலாவிய ரீதியாக வியாபித்துள்ளது. இதன்காரணமாக, அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகள் காணபட்டாலும் பெற்றோர்கள் நேர்சிந்தனை மற்றும் பயனுள்ள விடயதானங்களை கொண்ட நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் னை தமது குழந்தைகளினை பார்பதற்கு வழிகாட்டுவதோடு இயலுமானவரை குடும்பமாகவும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும். அதிகமான வணிக நிறுவனங்கள் தமது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த தெரிவு செய்யும் ஊடகமாக தொலைக்காட்சியே காணப்படுகிறது. 

   மேலும், தொலைக்காட்சி வழங்கும் நன்மையான விடயங்களாக இளைஞர்களினை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி மற்றும் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி,உலக நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகள்,சமய அற நெறிமுறைகள் தொடர்பான கருத்துக்கள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் போன்றன தொலைக்காட்சியின் நன்மைகள் ஆகும். தொலைக்காட்சி செய்திகள் மற்றும் தொலைக்காட்சி ஆவணப்படங்கள் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு அறிவினை வழங்கும் சிறப்பான படைப்புகள் ஆகும். பொழுது போக்கு மற்றும் பண்பாட்டுத் தளத்தில் 21ம் நூற்றாண்டில் சிறந்த தாக்கத்தை உண்டுபன்னுகின்ற தொலைக்காட்சி தற்கால சமூகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

ஆக்கம் : இ.தனஞ்சயன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் மாணவன் மற்றும் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சி பிரிவின் உதவி தயாரிப்பாளர்)

செவ்வாய், 12 டிசம்பர், 2017

கருத்தின் ஆழம் குறைவுபடாமல் இருப்பதே கவிதை!

படைப்பாளியின் எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள் போன்ற மன உணர்வுகள் படைப்பாக வெளிவரும் போதே படைப்பாளி சுயதிருப்த்தி அடைகின்றான்.படைப்பாளி தனது திறமைகளை ஏதோஒரு வகையில் தனது ஆக்கப் படைப்புகளை வெளிஉலகிற்கு வெளிக்கொணர முயல்கின்றான்.சில சமயங்களில் வெற்றி பெறும் படைப்பாளி பல சமயங்களில் காணாமலே போய்விடுகின்றான்.படைப்பாளி தனது சூழலில் இருந்தே தனது ஆக்கப் படைப்புகுரிய கருப்பொருளை பெற்று கொள்கின்றான். சூழல்கள் மாறும் போது படைப்பின் தன்மைகளும் மாறுபடுகிறது.அந்தவகையில், இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாகக் கூறப்படுகிறது. இலக்கிய வகையில் முக்கியமானதாக கவிதை விளங்குகிறது. இது சிறுகதை,நாவல், கட்டுரை போன்றவற்றின் சுபாவங்களில் இருந்து மாறுபட்ட இயல்பு கொண்டது.கவிதையானது ஒருவரின் உளக்குமுறல்கள் மொழி வடிவம் பெறும் போது தோற்றம் பெறுவதாகும்.கவிஞர் பிறைசூடன் கவிதை தொடர்பாக கூறும் போது பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றவர்கள் தமிழ் கவிதை உலகில் அனைத்தையும் தொட்டுவிட்டார்கள்.நாம் வரிவடிவம் மற்றும் வார்த்தைகளில் மாத்திரமே மாற்றம் செய்து வருகின்றோம் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது. கவிதையானது எந்த அடக்குமுறை சூழலில் இருந்தாலும், ஏதோஒரு குமுறலாக வெளிவந்துவிடுவது அதன் சிறப்புத்தன்மையாகும்.அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் கல்வி பயிலும் கவிஞர் முகமது அஸ்கரின் கன்னி கவிதைத் தொகுப்பான"விரியும் போராடும் அரும்புகள்" ஒக்ரோபர் மாதம் 11ம் தி கதி கைலாசபதி கலையரங்கில் வெளியீடு தெரிவுசெய்யப்பட்டு இருந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.கவிதை வெளியீடு விழாவுக்கு அழைப்பு வந்தும் அண்றைய வெளியிட்டு விழாவில் தவிர்க்க முடியாத சில தனிப்பட்ட காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லை.ஆயினும், கவிஞரினை பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாகசந்தித்து கவிதைபுத்தகத்தை பெற்று வாசித்த அனுபவித்த உணர்வுகளை திறனாய்வுத்தளத்தில் வலைப்பூபதிவாக்கலாம் என எண்ணுகிறேன்.கவிதை என்பது சமூகத்தின் உணர்வு பிரவாகம் எனலாம்.கவிஞர் அஸ்கர் தனது உணர்வுகளை விரியும் போராடும் அரும்புகள் என்று கவிப்புத்தகத்திற்கு பெயரிட்டுள்ளார் என எடுத்துக் கொள்ளலாம். காரணம், உணர்வுகள் ஓர் ஒழுங்கு முறையில் வார்த்தைகளாகி வரியாகி கவிதையாகின்றது எனலாம்."விரும்பிகள் கொடுத்த காலம் திருடித்தின்னும் காலமே இச் சீர் வரிசை"என்று சீதனம் கொடுமையை சீர் வரிசை எனும் சீதனம் எனும் கவிதையில் கூறுகிறார்.விழுந்தாலும் விதையாகிடு எனும் கவிதையில் "துச்சமும் அச்சமும் உன் இதயங்கள் எனக்கும்வேண்டும் தோழா வீரநடை போட்டதால் நீ மண்ணிலே இன்றும் மணம் வீசுகின்றாய் "என்ற கவிவரிகளில் சோசலிச சித்தாந்ததை வலியுறுத்தியுள்ளார்.

முன் பக்க அட்டைப்படத்திலேயே கவிஞன் கவியின் கருப்பொருளின் ஆழத்தை உணர்த்தியுள்ளதோடு மலையகமக்களின் எதிர்பார்ப்புகளை அரும்புகளாக உவமைபடுத்தியுள்ளமை சிறப்பு.இதே சமயம் ஒரு இளம் கவிஞராக அஸ்கர் கூட ஒரு வகையில் விரியப்போராடும் அரும்பு என்று அர்தப்படுத்திக் கொள்ளலாம்.
இதேவேளை,உழைப்பே உயர்வு என்ற ஒரு கவிதையின் ஆரம்பம் இவ்வாறு அமைகிறது "மூடநம்பிக்கைகளை முடக்கிவிட்டு முடியும் என்ற முடிவோடு வா தோழனே" என்ற கவி வரியானது தன்னம்பிக்கையூட்டும் வரிகளாக அமைகிறது.மேலும், மற்றொரு கவிதையில்
"காலம் காலமாய்
மீட்சி இல்லாப் போராட்டத்தில்
தூளாய் போகின்றது....."மலையகமக்களின் அரசியல் ரீதியாக ஏமாற்றப்படுவதை சலித்து கவிதை வாயிலாகசொல்கிறார்.காணாமல் போன கணவுகள் எனும் கவிதையில்"காலமெல்லாம் காணாமல் போய் கனவுகள் கூட கஞ்சத்தனம் காட்டுகின்றன "எவ்வளவு சோகம் ஏமாற்றம் கணவுகள் கான்பதற்கே நம்பிக்கை அற்ற தன்மை. ஆழ்ந்த சிந்தனை மிக்க வரிகள்.உன்மை நட்பு எனும் கவிதையில் "பாலினம் தடையில்லை உணர்வுகள் ஒன்றானால் தோழன் துனைநிற்பான்"ஆன் பென் நட்பின் புனிதமான தன்மையை குறிப்பிடுகிறார்.பெண்ணின் கொடுமை எனும் கவிதையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டு இறுதி வரிகளில்"தடுத்து எதிர் நிற்க தூக்குதண்டனையை வரச்சொல்லங்களே"என பெண்களின் விடுதலைக்கான அவசியத்தையும் அதற்கு தீர்வாக தூக்குத்தண்டனையும் தனது கவிதையில் வலியுறுத்தியுள்ளார்.தோட்ட தொழிலாளிகள் எனும் கவிதையில் "கட்டைகள் காற்சட்டை வெள்ளையனின் அடி மட்டம் போனபின்னும் போகவில்லை "என்று மலையக மக்கள் தொடர்ந்தும் அடிமைத்தனம் நிறைந்த வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார். நிதியும் நீதியும் எனும் கவிதையில் "நிதி தான் நீதியா இது தான் நியதியா"என நீதி நிதிக்கு பின்னால் என்ற தற்கால நிலமையை கவிதையில் சொல்கிறார்.

"புயலோடு போராடும்
தூக்கணாம் குருவி கூட்டைப் பார்
உழைப்பால் உயர்ந்து போய்
உயரத்திலேயே வாழ்கிறது
மகுடிக்கு வளைந்தாடும்
பாம்பாக ஆகாதே
முடிவின் ஆரம்பத்திலும்
முதுகெலும்போடு உழைத்து வாழ்"
என்று உழைப்பின் அவசியத்தை உழைப்பே உயர்வு எனும் கவிதையில் உணர்த்துகின்றார்.உழவனின் உழுத மனம் எனும் கவிதையில் "உழவன் மனம் ஓயந்து விட்டால் உண்பதற்கு சோறிறின்றி நாற்றோடு சேற்றில் இறங்குவதே மனிதனின் விதி ஆகிவிடும் "விவசாயத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும்கவிஞரின் தொலைநோக்கு பாராட்டுக்குரியது.வடுக்கள் எனும் இன்னொரு கவிதையில்"இறுதி சடங்கு செய்து கொள்ளி வைக்கப் பெற்றெடுத்த மகளைத் தொலைத்து துடிக்கும் பெற்றவரின் கதறல்கள்"என்று போர்காரணமாக இறந்த இளைஞர்களின் பெற்றோரின் மனவருத்தத்தை கவிஞர் அழகாக பதிவு செய்கிறார்.நாகரீகம் உட்புகுந்த மானிடம் எனும் கவிதையில் "சுகங்களை சுத்தமாக காணோம் சூனியமாய் ஆனது உலகே"என்று உலகமயமாக்கலின் தாக்கத்தை கூறும் கவிஞர் குறித்த கவிதையின் இறுதி வரியில் நமக்கெல்லாம் ஆகுமா நாகரீகம்? என்று முடிக்கிறார். இது உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல்என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனி என்பதாகவே கருத்து கொள்ளவேண்டியுள்ளது.

"கல்வி உன் உயர்வெனவும்
ஒழுக்கம் உன் சிறப்பெனவும்
இவையோடு மலர்தலே
உன் புகழ் எனவும் உரைத்திட வேண்டும்"
என்று விளையும் பயிர் எனும் கவிதையில் கல்வியின் அவசியம் பற்றி குறிப்பிடுகின்றார்.அத்துடன், செல்லாக்காசு எனும் கவிதையின் இறுதியில் "புரிதல் வேண்டும் உலகே-காசு புதிதாய் இனிக்கும் நஞ்சே"என்று காசின் தன்னம பற்றி சிந்திக்க வைக்கின்றார்.

நான்,தமிழோடுவிளையாடுமனமே,உழைப்பே உயர்வு,கருகிய மலர் சிரிக்கிறது, சிறகொடிந்தபறவை,
விளையும் பயிர்,தூரத்து நிலா,விளையும் பயிர்,
யார் குற்றம்,தேம்பியழும் சுவர்கள்,
விரிய போராடும் அரும்புகள்,ஒரு மயிலிறகால்,
பாலஸ்தீனக் குரல்,குருவிக்கூடு,
காணி நிலம் வேண்டும்,
கடல்வாழ் காகித ஓடம்,முகிலின் துளிகள், சீர்வரிசை எனும் சீதனம்,
என் உயிர் தங்கை,கடல்வாழ் காகித ஓடம்,கடைசி முத்தம்,உயிருள்ள மரணம்,வறுமை விலகாதோ,
புறப்படு புதுமைப் பெண்ணே,
வடுக்கள்,காணாமல் போன கனவுகள்,உண்மைநட்பு,தோட்டத்தொழிலாளிகள்,பெண்ணினக் கொடுமை
வட்டியில்லா கடன்,
மீளாத மியன்மார்ப் படகுகள்,உழவனின் உழுத மனம்,மொட்டின் மொழி ,வறுமை விலகாதோ,அவசரக் கல்யாணம்
சதுரங்க வேட்டை,இறுதி நாழிகை என்று சமூககவிதைகள்,பொருளாதார,அரசியல் மற்றும் காதல் கவிதைகள் என அனைத்தும் தற்காலத்தின் நிலைமையை உரையாடும் பாங்கில் கவிதை அமைந்துள்ளது.கவிஞன் எனும் கவிதையில் அஸ்கர் கவிதைக்கு பின்வருமாறு வரைவிலக்கனம் கொடுக்கின்றார்"கவிஞ்ஞனின் கற்பனையை இலக்கனம் கற்பிக்க முடியாது இது தான் அதுவென்றாலும் அது கவிதான்"என்று கூறுகிறார். கவிதையின் வரிகள் அற்புதமானது.கன்னி படைப்பினை இவ்வளவு சிறப்பாக செய்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. கவிஞர் முகமது அஸ்கரின் முக நூல்களில் பார்த்து ரசித்த கவிதைகள்
இன்று நூல் வடிவில் உருவாகி இருப்பது மிகவும் பொக்கிஷமான விஷயமாகும். முகப்புத்தகத்துக்குள் தனது கவிதையை சிக்கவிடாமல் அச்சு வடிவில் வெளி உலகிற்கு கொண்டு வந்தமை சிறப்பானது.அச்சு வடிவில் கவிதை வாசிப்பு அனுபவம் அலாதியானது.விரியப் போராடும் கவிதைகள் என்ற கவிஞர் முகமது அஸ்கரின் கவிப்புத்தகம் கவிஉலகிற்கு அமையும் என்பதில் எந்த சந்தேகமும்இல்லை. இறுதியாக மொட்டின் மொழி எனும் கவிதையில் கவிஞர் குறிப்பிட்ட "உலகம் இன்று இருட்டறையில் இனி நீயாவது விழித்துக்கொள்"என்ற வரிகளை சிந்தித்துக்கொண்டு எனது இச் சிறு வலைப்பூப்பதிவினை நிறைவு செய்து மற்றும் ஓர் வலைப்பூப்பதிவில் விரைவில் சந்திக்கின்றேன். இ.தனஞ்சயன்.ஊடகத்துறை

வியாழன், 16 நவம்பர், 2017

சுற்றுலா தொழிற்துறையின் சுபாவங்களிற்கு ஊடகங்கள் புத்துயிர் அளிக்குமா?

நடப்பாண்டில்  (2017)  ஒக்ரோபர் வரையில் இலங்கைக்கு 2 லட்சம் சீன சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.கடந்த மாதத்தில் மாத்திரம் 18,000 சீனர்கள் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், இலங்கைக்கு இந்த ஆண்டில் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக குறித்த அமைச்சு செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இந்த வருட இறுதிக்குள் ஏற்கனவே உத்தேசித்துள்ள இலக்கான 2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் என்ற இலக்கை அடைய முடியும் என்று அமைச்சு தனது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது.இவ்வாறாக தற்போதைய பூகோளமயமாக்கல் சூழலில் சுற்றுலாத்துறையின் அவசியமானது உணரப்படுகின்றது.சுற்றுலா(Tourism )எண்பதாவது மகிழ்ச்சி, பொழுதுபோக்கு மற்றும் வணிக நோக்கங்களிற்காக ஏதேனும் ஓர் இடத்தை தெரிவு செய்து அங்கு பயணம் மேற்கொண்டு சிறிது காலம் தங்கியிருந்து அச்சூழலை அனுபவிப்தை குறிப்பிடலாம்.(Travel to and stay in places out sides their usual environment for not more than one consecutive year for leisure, business and other purposes ).அதேசமயம்,சுற்றுலா தொழிற்துறையானது மூன்று வகைகளில் பிரதானமாகக் காணப்படும்.இதன்காரணமாகவே,வடமாகாணத்தில் சுற்றுலாத் துறையில் மனித மூலதனத்தை விருத்தி செய்யும் நோக்கோடு மத்திய சுற்றுலாத் துறை அபிவிருத்தி அமைச்சால் தொழில்களை திறம்பட ஆற்றுவதற்கான செயலாற்றல் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு தனியாருக்கு முதற்கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கின் முதல்வர் கூறியுள்ளதை கவனிக்கத்தக்கது.இதேபோல், 2018 ம் ஆண்டுக்கான நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கெளரவ மங்களசமரவீரவினால் சமர்பிக்கப்பட்ட பாதீட்டில் கூட சுற்றுலாத்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மூன்று வகையான சுற்றுலா துறையாக உள்ளுர்,தேசியம் மற்றும் வெளியூர் போன்றவற்றை குறிப்பிடலாம்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பிரஜை ஒருவர் புத்தரின் படத்தை பச்சை குத்தி வைத்து இருந்ததன் காரணமாக கைது செய்யப்பட்டமையும் அதனைத் தொடர்ந்து வழக்கு தொடரப்பட்ட வழக்கில் வெளிநாட்டு பிரஜை வெற்றி கொண்டதும் குறித்த பிரஜைக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டமையும் மிக அண்மையில் சுற்றுலாத்துறையில் இடம்பெற்ற சுவாரிசியமான அனுபவம் ஆகும்.இலங்கையானது சுற்றுலாத்துறையின் முக்கியமான இடமாக அமைவதற்கு அதனுடைய கேந்திர அமைவிடம் பிரதானமானது. இலங்கை வரலாற்றை அவதானிக்கும் போது,பாரசீகர்,எகிப்தியர்,சீனர்கள், ஜப்பானியர்கள், அரேபியர்கள், பர்மா நாட்டினர் மாத்திரமன்றி கிரேக்கர் மற்றும் உரோமர் ஆகியோரின் வர்த்தக கப்பல்கள் வாணிப நோக்கத்திற்காக இலங்கை வருகை தந்தனர். இது சுற்றுலாத் துறையின் ஆரம்பமாக அமைந்துள்ளது.இதைவிட,இலங்கைக்கு சர்வதேசத்தின் மத்தியில் காணப்படுகின்ற அடையாளம் (Brand) அதிகளவு சுற்றுலா பயணிகள் இலங்கையின் மீது கரிசனை கொள்ள காரணமாக அமைந்துள்ளது.சர்வதேசத்தின் பார்வையில் Ceylon tea க்கு தனித்துவமான புகழ் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.Tea time என்ற சொல்லாடல் கூட இலங்கை தேயிலையின் பிரபலத்தன்மையினால் ஏற்பட்டதொன்றாகும்.இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் செய்தபோது இதனைக் குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது.மேலும்,நாண்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தன்மையும் இலங்கையின் தொல்லியல் மரபுரிமை மற்றும் இயற்கை அழகிடங்கள் என்பன சுற்றுலாத்துறையை அதிகம் வலுப்படுத்துகின்றது.கடந்த தசாப்த கால கொடுமைகள் நிறைந்த யுத்தம் காரணமாக சுற்றுலாத்துறை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மிகச் சொற்ப அளவிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை வந்தடைந்த அதேவேளையில் தமது எல்லையை தென்இலங்கைகுள்ளே குறுக்கிக் கொண்டனர்.போர் நிறைவுற்ற பின்னரும் கூட வடக்கிற்கான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு இல்லை என்பது ஆய்விற்குரிய ஒரு பிரச்சனை ஆகும்.இத்தருணத்தில் 2018 ஆண்டுக்கான பட்ஜெட் சமர்பிக்கபட்டு இருக்கிறது. அந்த பட்ஜெட்டில் சுற்றுலாத் துறையின் அபிவிருத்திக்கு கணிசமான முக்கியத்துவம் வழங்கியுள்ளமை கவனிக்கத்தக்கது. குறித்த பட்யெட்டில் குறிப்பிடப்பட்ட சுற்றுலாத்துறைக்கான சுபாவங்களை நோக்கும் போது;♡சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக Home stay வாய்பினை உருவாக்குதல்♡சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடனும் இனைந்து சுற்றுலாத் துறைக்கு சில மையத்தளங்களை உருவாக்குதல். ♡தனியார் துறையினதும் தொல்லியல் தினைக்களத்தினதும் ஆதரவுடன் சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தினால் மாத்தறை,ஹேம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோனமலை, மன்னார் கோட்டை,கற்பிட்டி கோட்டை முதலான 6 கோட்டைகள் அபிவிருத்தி.♡நானுஓயா,காலி,எல்ல மற்றும் கொழும்பு புறக்கோட்டை ஆகிய புகையிரத நிலையங்கள் தொல்லியல் முக்கியம் வாய்ந்த இடமாக பிரகடனம் செய்தல்.♡சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிப்பதற்காக அரச,தனியார் பங்கேற்புடன் சிகிரியா,மட்டக்களப்பு,சீனக்குடா மற்றும் கொக்காவில் உள்ள விமான நிலைய அபிவிருத்தி.♡உயர் நிலை சவாரிக்கு பயன்படக்கூடிய வகையில் மாதுறுஓயா மற்றும் கல்ஓயா தேவி வட்ட பூங்காக்கள் அபிவிருத்தி செய்யப்படும்.♡சுற்றுலாவுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தகூடியவாறு வனப்பிராந்திய அலுவலகர்களின் இயலளவு விருத்தி செய்யப்படும்.♡சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக சுற்றுலா காவற்துறை அலகுகளை வலுப்படுத்துவதற்கு இலங்கை பொலிஸ் தினைக்களத்துடன் ஒன்றிணைந்து செயற்படல்.♡சுற்றுலாப்பயணிகள் விரும்பும் ஆகாய விளையாட்டுகளான Dirigibles,Hang gliding, Paragilders,Ballooning மற்றும் kite surfing equipment போன்ற விளையாட்டுகளிற்கான உபகரணங்கள் மீதான துறைமுக மற்றும் தேசக்கட்டுமான வரி குறைப்பு.♡1.3 மில்லியன் முச்சக்கர வண்டி சாதிகள் பயனடையும் வகையில் வகையில் மின்சக்தியில் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டி வழங்குதல். போன்றன சுற்றுலாத் துறையின் அபிவிருத்திக்கு பட்ஜெட்டில் முன்மொழியபட்ட விடயங்கள் ஆகும்.இத்தகைய பெறுமதி வாய்ந்த சுற்றுலாத்துறையினை அசிங்கப்படுத்தும் விதமாக சில ஊடகங்கள் எமது நாட்டின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் செய்தியை பரிமாறிக் கொள்வது சர்வதேச சுற்றுலாப்பயணிகளின் வருகையை குறைந்து விடும். இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்சியை உண்டாக்கிவிடும்.இதன்காரணமாகே, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன போலி மற்றும் அவதூறு செய்திகளைப் பரப்பும் ஊடகங்களை தடைசெய்ய வேண்டும் என்று நேரடியாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.ஊடகங்கள் சுற்றுலாத் துறைக்கு ஊக்குவிப்பு வழங்க வேண்டும். எமது நாட்டில் உள்ள பெறுமதியான விடயங்கள் ஆவனப்படுத்தல் மூலமாக சர்வதேச அரங்கிற்கு தெரியப்படுத்த வேண்டும். மாறாக நம் மத்தியில் காணப்படுகின்ற கலாச்சார சீரழிவு மிக்க விடயங்கள் ஊடகங்களில் முன்னிலை படுத்தும் சமயத்தில் சுற்றுலாத்தொழிற்துறைக்கு பேராபத்தாகவே அமையும்.இதேவேளையில்,சுற்றுலா(Tourism) மற்றும் விருந்தோம்பல்(Hotel management )பாடங்கள் தற்போது உயர்கல்விக் கூடங்களில்  பாடமாக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரியது.தற்போதைய தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் சூழலில் பொருளாதாரத்தை முன்னெடுக்க உலகத்துடன் ஒத்தோடவேண்டிய நிர்பந்தாக்கிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதேவேளை,இலங்கையின் வடபகுதியில் கூட சுற்றுலாத்துறையினை தொழிற்துறையாக(Industry)மேம்படுத்திக் கொண்டு எமது பண்பாட்டு தொண்மங்களையும் பாதுகாக்க வேண்டியது எமது தார்மீக பொறுப்பாகும். இ.தனஞ்சயன் ஊடகத்துறை.