அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

சனி, 1 செப்டம்பர், 2018

ஊடகங்களின் நெறிமுறை சார்ந்த வரம்பு எல்லைகளை புரிந்து கொள்வது அவசியம்!

ஹார்வர்ட் பல்கலைகழக மாணவரான மார்க் சூபேர்க் 2004ம் ஆண்டு பல்கலைக்கழக நண்பர்களிற்கு இடையில் தொடர்புகளை பேனுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது இன்று தொடர்பாடல் மற்றும் ஊடகத்துறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. இது உலகையே மிகவும் இலகுவான சமூக தொடர்பாடல் மிக்க இடமாக மாற்றியமைத்துள்ளது. இன்று , உலகளாவிய ரீதியாக எங்கும் நடைபெறு‌ம் நிகழ்வை நாம் நேரடியாக பார்வையிட முடியும்.
    இந்த நிலையில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூகுள்,Twitter மற்றும் Facebook மீது எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, குறித்த ஊடகங்கள் Conservative media களினை Google நிறுவனம் முடக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த கருத்தை கூகுள் நிறுவனம் அடியோடு மறுத்துள்ளது. இதேவேளை, தாம் எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் இயங்குவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ட்ரம்ப் அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனின் வோட்டகேட் ஊழலை புலனாய்வு இதழியல் நுட்பத்தை பயன்படுத்தி வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளரினையும் கடுமையாக சாடினார்.
     இவ்வாறாக கடந்த வாரம் ஊடகங்கள் மீது சீறிப்பாய்ந்து இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி. ட்ரம்ப் ஊடகங்கள் மீது இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பது இது முதன்முறை அல்ல. அமெரிக்க அதிபர் தேர்தல் காலங்களில் கூட CNN இனை போலி ஊடகம் என்று விமர்சித்திருந்தார். மக்களின் எதிரியாக(Enemies of people) ஊடகங்களினை ட்ரம்ப் பார்க்கிறார். இது பிரதான ஊடகங்களிற்கு ட்ரம்ப் மீது எதிர்மறையான சிந்தனையை தோற்றுவித்துள்ளது. 
    ஜனநாயகத்தை நிலைநாட்டும் முக்கிய காரணியாக ஊடகங்கள் காணப்படுகிறது. ஜனநாயகத்துக்கு விளக்கம் கெடுக்கும் அமெரிக்காவில் கூட ஊடகங்கள் பக்கசார்பு என்பது சிந்தனைக்குரியது. சட்டம், நீதி, நிர்வாகம் என்பவற்றை அடுத்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்கள் விளங்குகிறது. அமெரிக்க என்று மட்டுமல்ல உலகம் பூராகவும் ஊடகங்களின் செல்வாக்கு வியாபித்துள்ளது. மக்கள் அன்றாட வாழ்வில் இடம்பெறும் தகவல்களினை மாத்திரமல்லாது, எவ்வளவு தூரம் ஊடகங்கள் குறித்த செய்திக்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். எந்த செய்திக்கு முதன்மை அளிக்கின்றன என்பதில் இருந்து ஊடகங்களின் நிகழ்ச்சி நிரலினை கண்டுகொள்ள முடியும்.
     இணையத்தின் வருகையில் இருந்து ஊடகங்கள் முதன்மை அளிக்கின்ற தன்மைகள் மாற்றம் அடைந்துள்ளது. இதனையே பிரஜைகள் ஊடகவியல் எனும் எண்னக்கருவானது குறிப்பிடுகிறது. இன்றைய ஊடகங்கள் முற்றிலும் மாறுபட்டது. சாதாரண மக்கள் கூட இன்று உலகலாவிய ரீதியாக பூகோள தடங்கல்களினை கடந்து தமது எண்ணங்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்ய முடிகிறது. மக்களிற்கு விழிப்புணர்வு ஊட்டுவதாக ஊடகங்கள் காணப்படுகிறது.
      மேலும், சமூக ஊடகங்கள் இன்று விவாதத்திற்கு மிகவும் பரந்த வெளியை உருவாக்கியுள்ளது. அண்மையில் மகாவலி திட்டத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் வெடுக்குநாறி வழிபாட்டுக்கு ஏற்படுத்தப்பட்டு இருந்த தடைக்கு எதிரான மக்கள் கருத்துக்கள் சமூக ஊடகங்களே பிரதானப்படுத்தியிருந்தன. இதேவேளை, எகிப்தில் இணையதளத்தளங்களினை முடக்குவதற்கு புதிய சட்டத்தை அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் பத்தாம் அல் சிசி விதித்து இருந்தார். இது ஏற்கனவே 600 இனையத்தளங்கள்  எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
     இன்றைய நிலையில், சமூக ஊடகங்களினை இலகுவாக கையாளக் கூடிய நிலை இருந்தாலும் ஊடகங்களின் நெறிமுறை சார்ந்த எல்லை வரம்புகளை அறிந்து அவற்றின் எதிர்மறையான தாக்கத்தில் இருந்து விடுபட்டு ஊடகங்கள் நம்மை பெறுமதியுடையதாக்கவேண்டும்.
இ.தனஞ்சயன்

சனி, 25 ஆகஸ்ட், 2018

2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடருக்கான இலங்கை அணியின் தயார்நிலை!

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்களே நம்பிக்கை வைப்பதற்கு தயக்கமடைகின்ற தருணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாப்பிரிக்காவுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை முழுமையாக வெள்ளையடிப்பு செய்ததுடன் ஒரு நாள் தொடரில் 3 க்கு 2 என்று தொடரை இழந்து இறுதியாக இடம்பெற்ற ஒற்றை இருபது இருபது தொடரை தனதாக்கியது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையினருக்கு இது சில சமயங்களில் திருப்தி மற்றும் சந்தோசங்களை வழங்கியிருந்தாலும் குறித்த முன்னேற்றங்களை தக்கவைக்க இலங்கை கிரிக்கெட் சபை முயற்சிக்குமா என்பது சிந்தனைக்குரியது. காரணம், இலங்கை கிரிக்கெட் சபைக்குள் இடம்பெறும் கசப்பான சம்பவங்களே இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கான காரணமாகும். இதேவேளை, விளையாட்டு துறை சட்டத்தின் மூலமாக அந்த துறை சார்ந்தஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் எல்லையற்ற அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவே நியமிக்கப்போவதாகவும் கடந்த வாரம் செய்தியொன்று வெளிவந்து இருந்தது. குறித்த சட்டம், இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெறும் அழுத்தத்தை குறைக்க போதுமான சட்ட எல்லைகளை கொண்டுள்ளதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்டிலும் அமைச்சர்களின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது. இதற்கு அண்மைய உதாரணமாக, முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கவிற்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், தரவரிசையில் தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணியை விட முன்னிலையில் இருந்தாலும், இலங்கை அனி தமது சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து இந்த டெஸ்ட் போட்டியினை வெற்றி பெற்றது. எனினும், இதே அணியை கொண்டு ஏன் மேற் இந்திய மன்னில் வெற்றி பெற முடியவில்லை. அத்துடன் போட்டி விதிகளை மீறியதாக இலங்கை அணி மீது குற்றச்சாட்டு பின்னர் நிரூபித்து அணியின் தலைவர் மற்றும் பயிற்றுவிற்பாளர்களுக்கு போட்டித்தடை. இலங்கை அணியுடன் விளையாடிய மேற்கிந்திய அணி முதற்தரமான அணியும் அல்ல. கோல்டர் தலைமையிலான இரண்டாம் தர அணியே. ஆகவே, இலங்கை அணி வெளிநாட்டு மண்ணில் கடந்த பல ஆண்டுகளாக தடுமாறியே வருகிறது. இலங்கை அனி இன்னமும் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் எந்த டெஸ்ட் தொடரையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 1996 இல் இலங்கை இந்திய உபகண்டத்திலேயே உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது. எனினும், 1999 இல் இங்கிலாந்தில் நடந்த உலகக்கிண்ணத்தை கைப்பற்ற முடியவில்லை இரண்டாவது சுற்றுக்குகூட தகுதிபெறமுடியவில்லை. 1996 ல் விளையாடிய 6 வீரர்கள் குறித்த உலகக்கிண்ண போட்டியில் விளையாடி இருந்தனர். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள உலக கின்ன போட்டியானது இங்கிலாந்தில் இடம்பெறுகின்ற சமயம் இலங்கை கிரிக்கெட் சபையினாது பொறுபற்று செயற்படுமாயின் 1999 நடந்த சம்பவமே மீள இடம்பெறும். இந்நிலையில் தற்போது இலங்கையில் நடாத்தப்ட்டுவரும் உள்ளூர் இருபது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் குறித்தும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மகேல குற்றம்சாட்டியுள்ளார். 84 வீரர்களில் 44 வீரர்கள் மாத்திரமே வாய்ப்பை பெறும் அதேசமயம் ஏனைய 40 வீரர்கள் வெறும் பார்வையாளராகவே இருக்க வேண்டிய நிலை. இவ்வாறான நிலையில் இலங்கை அணியின் அடுத்து வரும் ஆசிய கிண்ன, இங்கிலாந்து,தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான தொடர்கள் உலககிண்ன போட்டிகளிற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இருக்கும் போட்டிகள் ஆகும். குறித்த போட்டிகளினை கடந்து எவ்வாறு 2019 உலக கின்ன போட்டிகளில் பங்கு பற்றி மீண்டும் ஒரு உலககிண்னத்தை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெற்று கொடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இ.தனஞ்சயன்

சனி, 18 ஆகஸ்ட், 2018

ஊடகங்களின் எல்லையை விரிவடையச் செய்யும் உலகமயமாக்கல்!

இன்றைய சமுகத்தை கட்டுமானம் செய்வதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது. ஒவ்வொரு மனிதனின் நாளாந்த வாழ்கையின் முக்கிய பகுதியாக ஊடகங்கள் காணப்படுகிறது. ஒரு விடயம் பற்றிய கருத்துகளினை உருவாக்கும் பங்கினை ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் அடிப்படையாகக் கொண்டே காணப்படுகிறது. அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் முக்கியமான தொடர்பாடல் கருவியாக ஊடகங்கள் விளங்குகிறது. ஊடகங்களின் பிரதான பணியாகக் காணப்படுவது உலகிற்கு எந்த ஒரு தகவலினதும் சரியான விடயம் எது? பிழையான விடயம் எது? என்பதேயாகும். சரியான நேரத்தில் சரியான விடயத்தை சரியான முறையில் கொண்டு சேர்கும் பாரிய பொறுப்பு ஊடகத்திற்குண்டு. ஊடகங்கள் எங்களைச் சுற்றிய அனைத்தையும் முன்னிலைப்படுத்துகின்றது. உதாரணமாக, இணையம், தொலைக்காட்சி, வானொலி,சஞ்சிகை மற்றும் பத்திரிகை போன்றவற்றை குறிப்பிடலாம். குறித்த ஊடகங்கள் வாயிலாக வரும் தகவல்கள்/செய்திகள் அடிமட்ட மக்களினை சென்றடையும் போதே ஊடகங்கள் வெற்றி அடைகின்றன. சமுக பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்கள் தொடர்புகொண்டுள்ளனர். இவ்வாறான விடயங்களை ஊடகங்கள் வாயிலாகவே வெளிக்கொணரமுடியும். இதன்காரணமாக, மக்கள் ஊடகங்களில் தங்கியுள்ளனர். ஊடகங்கள் மக்களில் தங்கியுள்ளது. தற்போதைய நிலையில், ஊடகங்களினை மக்கள் தவிர்க்க முடியாது. மக்களிற்கு தகவல்களினை வழங்கி அவர்களிற்கு பல்வேறு செய்திகள், நிகழ்வுகள், சமூக நடவடிக்கைகள், வாழ்க்கை முறைமை, பொழுது போக்கு மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை தெளிவுபடுத்துவதாக ஊடகங்கள் காணப்படுகிறது. இலங்கையில் இருந்துகொண்டே, உலகின் எப்பகுதியானாலும் கனடாவோ,ஜேர்மனியோ , தென் கொரியாவோ, அவுஸ்திரேலியாவோ நடைபெறும் நிகழ்வுகளை நேரடியாக கண்டு கொள்ள முடிகிறது. அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியினை உதாரணமாக குறிப்பிடமுடியும். ஊடகங்கள் சமுகம் மற்றும் அவற்றின் கலாச்சாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனினும் உலகமயமாக்கலின் விளைவினால், ஊடகங்கள் பாரிய செல்வாக்கினை பெற்றுள்ளதுடன் மக்களிற்கு பல சாதக பாதக விடயங்களும் காணப்படுகிறது. பல்வேறு வகையான சமூகங்களின் ககலாச்சாரங்களை ஊடகங்கள் வேறு சமூகத்திற்கு சொல்லி கொடுக்க வழிஏற்படுகின்றது. உதாரணமாக, வட இந்திய நாடகங்கள் தமிழிற்கு டப்பிங் செய்தல் மற்றும் தென் இந்திய திரைப்படங்களின் அதீத தாக்கத்தை இலங்கை தமிழ் சமூகத்தை குறிப்பிடலாம். இதன்காரணமாக, ஊடகங்களினை மக்கள் சாட்சியாக பார்கின்றனர். ஊடகங்களே உலக நிகழ்வுகள் தொடர்பாக அறிவூட்டலை வழங்குகிறது. இத்தகைய ஊடகங்கள் அரசியலில் முக்கிய பிரச்சார ஊடக கருவியாகப் பயன்படுத்துகின்றது. நாட்டின் தலைவர்களினை மக்கள் தெரிவுசெய்வதற்கு மக்களினை குறித்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களினை நியாயப்படுத்தும் கருவியாக ஊடகங்களே காணப்படுகிறது. ஊடகங்களினை பொறுத்தவரை சாதக பாதக அம்சங்கள் காணப்பட்டாலும் மக்களின் சுபாவம் மற்றும் மனநிலையிலேயே அதன் சாதக பாதகங்களை தீர்மானிக்க முடியும். ஊடகங்களின் தாக்கத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளும் போது, அதனை எமக்கு சாதகமான முறையில் சூழலினை உருவாக்க முடியும். ஊடகங்களின் செல்வாக்கு காரணமாக, தனிநபர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளில் மாற்றங்களை உண்டாக்க முடியும். உலகமயமாக்கல் காரணமாக, இன்று எமது சாதாரண கருத்துக்கள் கூட இலகுவாக உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் எடுத்துச் செல்லப்படுகின்றது.
ஆக்கம்: இ.தனஞ்சயன்


சனி, 11 ஆகஸ்ட், 2018

அரசாங்கத்திற்கும் மக்களிற்குமான உறவுப்பாலமாக விளங்குவது ஊடகங்களே!

             மக்களின் வரியில் செயற்படும் அரச ஊடகங்கள் மற்றவர் மீது சேறு பூசும் விதத்தில் செயற்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அபே கம வளாகத்தில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
சுயாதீனத் தொலைக்காட்சி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் என்பன அரச நிறுவனங்கள் ஆகும். இது நடுநிலையாக செயற்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்துக்கு வால் பிடித்து, மற்றவர்கள் மீது பொய்யான செய்திகளை ஒளிபரப்பி வருவதை அனுமதிக்க முடியாது.
தனியார் ஊடகமொன்றில் யாராவது ஒருவர் மற்றொருவர் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடுவதாயின், அதனை எதிர்க்க முடியாது. ஆனால், நாட்டின் வரிப் பணத்தில் இயங்கும் ஒரு ஊடகம் இவ்வாறு செயற்பட முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். குறித்த செய்தியானது இணையதளத்தில் வெளியாகியிருந்தது. இந்த செய்தியின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதாகவே இந்த பத்தி எழுத்து அமையவிருக்கின்றது.
      ஊடகங்கள் என்பது தகவல்கள் மற்றும் கருத்துகளை பரிமாற்றம் செய்கின்ற சாதனங்களே ஆகும். ஜனநாயகத்தை நிலைநாட்டும் முக்கிய காரணியாக ஊடகங்கள் விளங்குகிறது. எனினும், ஊடகங்கள் பெரும்பாலும் அடக்குமுறையை எதிர்கொள்வதாகவே காணப்படுகிறது. எமது நாட்டை பொறுத்தவரை பாரிய யுத்தமொன்றை எதிர்கொண்ட காரணத்தால் ஊடக சுதந்திரம் பற்றி வாயே திறக்காத சூழ்நிலையே காணப்பட்டது. இதேவேளை யுத்த சூழலில் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். சில ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு தப்பியோடினர். இவ்வாறான ஊடகவியலாளர்களில் பலர் தமிழர்கள்  என்பது கவனிக்கத்தக்கது. மேலும் லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலி கொட போன்றவர்களிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக கேள்வி எழுப்பும் செய்தி ஊடகங்களே காணப்படுகிறதே அன்றி தமிழ் ஊடகவியலாளர் பற்றி ஊடகங்கள் அலட்டிக் கொள்வதில்லை. குறிப்பாக இத்தகைய ஊடகவியலாளர்களிற்கான அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியாக மகிந்த ராஜபக்சவின் காலமே இருந்தது. நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படுகின்ற அரசாங்கத்தின் காலப்பகுதியில் முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் பாரிய ஊடக சுதந்திரத்திற்கான களமுன்டு எனலாம். பொதுவாக அரச ஊடகங்கள்  நடப்பு அரசாங்கத்தின் பிரச்சாரபீரங்கிகளாகவே காணப்படும். காரணம், குறித்த அரச நிறுவனங்களின் தலைவர் குறிப்பிட்ட அரசாங்கத்தினால் நியமிக்கப்படுவார். எனவே, அரச ஊடகங்களினை கட்டுபடுத்தும் அதிகாரம் முழுமையாக அவரிடம் ஒப்படைக்கப்படும். முன்னாள் ஜனாதிபதி குறித்த விடயத்தை அறியாதவர் அல்ல. கடந்த தனது ஆட்சியில் அரச ஊடகங்களினை மிகவும் தனக்கு உடன்பாடுமிக்கதாக பயன்படுத்தியவர்களில் முன்னோடியானவர். போரை வெற்றி பெற்றுக்கொடுத்தவர் மற்றும் சரத்பொன்சேகாவினை ஹிட்லருக்கு ஒப்பிட்டமை போன்றன சில உதாரணங்கள் மேலும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சியினை பிரச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு மஹிந்த ராஜபக்ஷ மீது காணப்படுகிறது. எது எப்படியோ குறித்த கருத்து அரசியல் நோக்கத்தில் வெளியிட்டகருத்தாகவே உட்பொருள் கொள்ள முடிகிறது.
          
           இதேவேளை, அன்மையில் உலக நாடுகள் இடையே ஊடக சுதந்திரம் பற்றி ஆய்வு மேற்கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட 180 நாடுகளை உள்ளடக்கிய அட்டவணையில் இலங்கை பத்து இடங்கள் முன்னேற்றமடைந்து 131 இடத்தை பிடித்துள்ளது. இதற்கான முக்கிய காரணமாக தகவல் அறியும் உரிமை சட்டதை அமுல்படுத்தியமையைக் கூறலாம். மேற்கண்ட அட்டவணையில் நோர்வே முதலிடத்தையும் சுவீடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. தாய்லாந்து 42 வது இடத்திலும் தெற்காசிய நாடான பூட்டான் 84வது இடத்திலும் பட்டியல் படுத்தப்பட்ட அதேவேளை வடகொரியா இறுதி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நாட்டின் காவல் நாய்களாக விளங்கும் ஊடகங்கள் எது மக்களிற்கு சரி எது நடுநிலையானது என்பதை அறிந்து வெளியிட வேண்டும். ஒரு சிறந்த அறிவுத்தெளிவு மிக்க சமூகத்தை உருவாக்கும் அதிகாரம் ஊடகங்களிற்கே உண்டு. எனினும் குறித்த ஊடகங்கள் சில அரசியல் சுயலாபங்களிற்காக ஒருபக்க நியாயப்பாடுகளை முன்வைப்பது கவலையான விடயமாகும். அரசாங்கத்திற்கும் மக்களிற்குமான உறவுப்பாலமாக விளங்கும் ஊடகங்கள் நேர்மைத்தன்மையுடன் செயற்படும் போதே ஜனநாயகம் தொடர்பாக சற்றேனும் உரையாட முடியும்.

ஆக்கம்:
இ.தனஞ்சயன்

சனி, 4 ஆகஸ்ட், 2018

அரசியல் ஆடுகளத்திலும் வெற்றி பெற்ற இம்ரான் கான்!

அண்மைக்காலங்களில் விளையாட்டு உலகில் பரபரப்பான சம்பவங்கள் இடம்பெற்றன. உலகக்கிண்ண கால்பந்து போட்டி,இலங்கை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி,இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி என போட்டிகள் நடைபெறும் அதேசமயம் போட்டிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய விடயங்களும் இடம்பிடித்து ஊடகங்களுக்கு நல்ல விருந்தாக அமையும். அதிலும் குறிப்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர், திலங்க சுமதி பால அர்ஜுன ரணதுங்க மற்றும் அரவிந்த டீ சில்வா மீது சூதாட்டத்தில் தொடர்பு பட்டதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்ததும் அதனைத் காலாவதியான குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்களுக்கு பதிலளித்து இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான முதல் பேட்டியில் தோற்றதற்கு திலங்க சுமதி பாலா தம்புள்ள மைதானத்திற்கு விஜயம் செய்தமை சந்தேகப்படவைக்கின்றது என முன்னாள் வீரர்கள் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, இலங்கையில் விளையாட்டுத்துறை அரசியலில் மூழ்கி பரிதாபமாக காணப்படும் நிலையில் விரைவில் கிரிக்கெட் சபை தேர்தலினை நடாத்தும் படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் கவனிக்க வேண்டியது. இதேவேளை, 2020 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த சங்ககார குறித்த ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராக களமிறங்குவார் எனவும் அவர் அரசியலில் ஈடுபட வரவேண்டும் என ராஜித சேனாரத்ன அண்மையில் குறிப்பிட்டு இருந்தமை கவனிக்க வேண்டியது. இந்த நிலையில், எமது அயல் நாட்டின் பரம எதிரியான நாடான பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் மற்றும் 1992 உலகக்கிண்ணத்தை பாகிஸ்தானிற்கு பெற்று கெடுத்த அணித்தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தானிய பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணியின் ஆதரவுடன் பிரதமராகின்றார்.65 வயதான இம்ரான் கான் 1996 ஆம் ஆண்டு அரசியலிற்கு நுழைந்தாலும் அரசியலில் 22 வருடங்களாக போராடியே தனது பிரதான இலக்கை (Main Goal) அடைகின்றார். இவருடைய பிரதான கொள்கையாக பாகிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்தல் மற்றும் ஊழல் மோசடிகளை இல்லாது ஒழித்தல் போன்றன காணப்பட்டாலும் பிரதமராக பதவியேற்ற பின்னர், குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சவால்கள் காணப்படும் என்பது மறுப்பதற்கில்லை. பாகிஸ்தானில் இராணுவத்திடம் அதிகாரம் காணப்படுகின்ற நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தின் செல்லப்பிள்ளையாகவே இருக்க வேண்டிய நிலை இருக்கும். அத்துடன் இம்ரான் கானின் வெற்றிக்கு பின்னால் இராணுவத்தின் உழைப்புள்ளது என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இதேவேளை, பூகோள அரசியல்ரீதியில் பாகிஸ்தான் அமைவிடம் இந்திய, சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் அரசியலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட நாடுகளுடன் எவ்வாறான அரசியல் இராஜதந்திர தொடர்புகளை கையாழப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறான சூழலில்,"இந்தியா ஒரு அடி எடுத்தால் நான் இரண்டு அடி எடுப்பேன்" என்று கூறியுள்ளார். இதேவேளை, தான் பதவியேற்கவுள்ள ஆவணி மாதம் 15 ம் திகதி நடைபெறும் நிகழ்வில் இந்திய பிரதமர் மற்றும் தன்னுடைய காலத்தில் இந்திய அணியில் விளையாடிய கபில்தேவ் மற்றும் சுனில் கவாஸ்கருக்கும் அழைப்பு விடுக்க இருக்கின்றமை மேற் சொன்ன கருத்தை உயிரோட்டமிக்க தாக்குகின்றன. சர்வதேச அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்காவுடன் முரண்பட்ட கருத்துக்களினை கொண்டுள்ள இம்ரான் எப்படி பாகிஸ்தானினை மாற்றி அமைத்து கொள்வதுடன் சர்வதேச அளவில் வருகின்ற சவால்களை வெற்றி கொள்ள போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதேநேரம், குறித்த வெற்றி தொடர்பாக, இம்ரான் கானின் முதல் மனைவி Ms Gold smith குறிப்பிடும் போது 22 வருட தியாகம்,தடைகளை வெற்றி கொள்ளுதல் மற்றும் நிராகரிப்புக்களை தாண்டி பாகிஸ்தானின் புதிய பிரதமரான எனது மகன்களின் தந்தைக்கு வாழ்துக்கள் என்று கூறினார்."22 years later, After humiliation, hurdles and sacrifice, My son's father is Pakistan's new prime minister". நிட்சயமாக, கிரிக்கெட் ஆடுகளத்தில் எதிர்கொண்ட சவால்களை விட பாரிய அளவில் சவாலுக்கு முகம்கொடுக்க நேரிடும். எது எப்படியோ, எமது நாட்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அரசியலிற்கு வந்து பாராளுமன்றம் சென்ற வீரர்களை காணமுடியும். ஆயினும், இம்ரான் தனது போராட்ட குணம் மற்றும் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி நகர்ந்து வெற்றி பெற்ற விதத்தில் இருந்து ஓர் முன்மாதிரியாக விளங்குகின்றார். ஆக்கம்: இ.தனஞ்சயன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் மாணவன் மற்றும் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சி பிரிவின் உதவி தயாரிப்பாளர்)

சனி, 28 ஜூலை, 2018

குறைந்த கணத்தில் பெரும் திரளான மக்களை சென்றடையும் தொலைக்காட்சி சமூக மயமாக்கலிற்கான வரப்பிரசாதமே!

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் வெகுஜன ஊடகங்களில் இரண்டாவது மிகப்பெரிய ஊடகமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. அதன் வளர்ச்சி நாளுக்கு நாள் உலகம் பூராகவும் அதிகரித்து செல்வதனை காணமுடிகிறது. அதனுடைய காட்சி வடிவில் கதைகூறும் பானியானது மக்களிடையே பெரும் செல்வாக்கு மிகுந்ததாக இருக்கிறது. சமூகத்தில் இடம்பெறும் வழமைக்கு மாறான சம்பவங்களை மக்களிற்கு கொண்டு செல்லும் ஓர் சாதனமாகும்.  

ஊடகவியலாளர்கள் மக்களின் தகவல் தாகத்தை தீர்த்து வைக்கும் வகையில் செய்தியாக்கம் செய்வார்கள். செய்தி மாத்திரம் அல்ல மக்களிற்கு சிறந்த பொழுது போக்கு அம்சங்களை வழங்கும் ஊடக மாகவும் தொலைக்காட்சி காணப்படுகிறது. பொதுமக்களிற்கு அரசியல், சமுக,கலாச்சார மற்றும் பொருளாதார நிலைமாற்ற அவசியம் தொடர்பாக அறிவூட்டும் ஓர் அதிகாரம் மிக்க சாதனம் தொலைக்காட்சி ஆகும். அரசியல், சமூக, கலாசார,அறிவியல், விளையாட்டு,பொழுது போக்கு, கலை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் தற்போதைய உலகில் மத்திய கூறாக விளங்குவது தொலைக்காட்சி யாகும்.தொலைக்காட்சியின் ஆங்கில சொல்லான  Television லத்தீன் மற்றும் கிரேக்க சொல்லின் கலவையாகும். Tele என்பது கிரேக்க செல்லாகும் 'Far' என்று ஆங்கிலத்தில் அர்த்தமாகும். Visio என்பது லத்தீன் சொல் ஆங்கிலத்தில் sight என்று அர்தப்படுத்தி பின்னர் அதுவே Television எனும் தொலைக்காட்சி யானது. காட்சி தற்கால சமூகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

      இன்றைய போட்டி மிக்க சூழலில் காட்சி வடிவில் தகவல்களினை வழங்கி பார்வையாளர்களினை விமர்சன கண்னோட்டத்தில் சிந்திக்க செய்வதில் பெரும் பங்கு தொலைக்காட்சிக்குஉள்ளது. செய்திகளை தொலைக்காட்சி யில் அறிக்கையிடும் பானியானது இன்று விமர்சனத்துக்குரியதாகக் காணப்படுகிறது. இலங்கையில் காணப்படுகின்ற தொலைக்காட்சிகளை பொறுத்தவரை தமது தனிப்பட்ட சுயலாப அரசியலினை முன்னெடுக்கும் பிரச்சார ஊடகங்களாகவே விளங்குகிறது. வானொலியின் ஆதிக்கத்தில் இருந்து முன்னணியினை தொலைக்காட்சி வகித்தாலும் வானொலிக்கான தனித்துவமான நேயர்கள் காணப்படுகின்றமை புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் வானொலிகளின் எண்ணிக்கைகளை கொண்டு அறிய முடிகிறது. அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் தொலைக்காட்சியினை மக்கள் உயிரோட்டமிக்க ஓர் இடமாக கருதுகின்றனர் என்று ஆய்வு முடிவு பெறப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஆய்வில், வருடத்தில் ஓர் சராசரி மனிதன் 3000 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி அல்லது தொலைபேசியுடன் செலவு செய்கின்றான். 

     மேலும், தொலைக்காட்சி யானது அதனுடைய செல்வாக்கு மற்றும் தாக்கம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகிறது. குறிப்பாக, சிறுவர்களின் மனப்போக்கில் தவறான மாதிரிகாட்சி உருக்களை ஏற்படுத்துகிறது. தற்போதைய காலகட்டத்திலதற 75 வீதமான சிறுவர்கள் தமது பொழுதுபோக்கிக்காக தொலைக்காட்சியினையே தெரிவு செய்கின்றனர். பெற்றோரும் சிறுவர்கள் தமக்கு தொல்லைஇல்லாமல் இருப்பதற்காக தொலைக்காட்சியினை தமது குழந்தைகள் பார்பதற்கு அனுமதிக்கின்றனர். குழந்தைகள் தொலைக்காட்சி யில் எவ்விதமான நிகழ்சிகளை எவ்வளவு தூரம் பார்கின்றார்கள் என்பது தொடர்பாக பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும். தொலைக்காட்சியினை எதிர்மறையான தாக்கத்தில் இருந்து விடுபட தொலைக்காட்சி எவ்வித தாக்கத்தை உண்டுபண்னுகின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நாளைய எதிர்கால சந்ததியான குழந்தைகளை பாதுகாத்து நேர் சிந்தனைமிக்க சமூகத்தை உருவாக்க வேண்டும். அரசியல் ரீதியாக கருத்துருவாக்கங்களை இலகுவாக மேற்கொண்டு தமது இலக்கு பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல தொலைக்காட்சி மிக சிறந்த சாதனமாகும். அண்மையில் விஜயகலா மற்றும் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை தொடர்பாக இலங்கை தொலைக்காட்சி களில் அதிகம் இடம்பிடித்து இருந்தது. அத்துடன் இன்றைய நிலையில், தொலைக்காட்சி பற்றிய அதிகமான விமர்சனங்கள் காணப்பட்டாலும் நவீன காலத்தில் மனித வாழ்க்கையின் முக்கிய பகுதியாக அரசியல், சமுக, பொருளாதார, காலநிலை, விளையாட்டு மற்றும் விளம்பரம் என்று ஒவ்வொரு பகுதியிலும் தொலைக்காட்சியின் செல்வாக்கு அளப்பரியது. தற்போதைய உலகமயமாக்கல் சூழலில் நவீன ஊடகங்களின் வரவு மற்றும் ஊடக ஒருங்கிணைப்பு காரணமாக தொலைக்காட்சியின் நிகழ்ச்சி உள்ளடக்கம் உலகலாவிய ரீதியாக வியாபித்துள்ளது. இதன்காரணமாக, அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகள் காணபட்டாலும் பெற்றோர்கள் நேர்சிந்தனை மற்றும் பயனுள்ள விடயதானங்களை கொண்ட நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் னை தமது குழந்தைகளினை பார்பதற்கு வழிகாட்டுவதோடு இயலுமானவரை குடும்பமாகவும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும். அதிகமான வணிக நிறுவனங்கள் தமது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த தெரிவு செய்யும் ஊடகமாக தொலைக்காட்சியே காணப்படுகிறது. 

   மேலும், தொலைக்காட்சி வழங்கும் நன்மையான விடயங்களாக இளைஞர்களினை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி மற்றும் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி,உலக நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகள்,சமய அற நெறிமுறைகள் தொடர்பான கருத்துக்கள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் போன்றன தொலைக்காட்சியின் நன்மைகள் ஆகும். தொலைக்காட்சி செய்திகள் மற்றும் தொலைக்காட்சி ஆவணப்படங்கள் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு அறிவினை வழங்கும் சிறப்பான படைப்புகள் ஆகும். பொழுது போக்கு மற்றும் பண்பாட்டுத் தளத்தில் 21ம் நூற்றாண்டில் சிறந்த தாக்கத்தை உண்டுபன்னுகின்ற தொலைக்காட்சி தற்கால சமூகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

ஆக்கம் : இ.தனஞ்சயன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் மாணவன் மற்றும் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சி பிரிவின் உதவி தயாரிப்பாளர்)

ஞாயிறு, 27 மே, 2018

ஊடகங்களினை விளங்கிக் கொள்ளுதல் காலத்தின் கட்டாயமாகும்!

       சமூகத்தில் பரந்த மற்றும் பலதரப்பட்ட பங்கினை வகிக்கும் ஊடகங்கள் பற்றிய அறிவுத்தெளிவு இல்லாதன் காரணமாக நாம் பல்வேறு வகையான தகவற்தெளிவு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது . தற்போதைய நிலையில் இன,மத குரோத சிந்தனையை தூண்டும் வகையில் ஊடகங்கள் தமது விற்பனையை பெருக்கி கொள்ள மஞ்சள்இதழியல் பண்புகளை உள்வாங்கிக்கொண்டே கொண்டே தமது ஊடக வியாபாரத்தை செய்கிறது.
       ஊடகங்களில் வரும் தகவல்கள்   உண்மையானது என்ற முற்கற்பிதம் பார்வையாளர்கள் மத்தியில் காணப்படுவதால் பல்வேறு வகையான சிக்கல்களை சமூக மட்டத்தில் தோற்றுவிற்கின்றன. ஊடகங்கள் என்பது தகவல்கள் மற்றும் கருத்துகளை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் ஓர் உபாயம் ஊடகங்கள் எனலாம். ஆங்கிலத்தில் "The Media is an important source of information through its news segments, entertainment and allows for exchange of ideas, suggestions and comments ".நவீன உலகில் சராசரியாக ஒன்பது மணித்தியாலங்களினை ஒருவன் தனது தொலைபேசியில் செலவு செய்கின்றான் என அமெரிக்காவில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
         நமது நாளாந்த வாழ்வில் அதிகமான நேரத்தை தொலைபேசியில் செலவு செய்யும் நாம் அவற்றின் வெளியாகும் தகவல்களின் உண்மைத்தன்மையை விளங்கிக் கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக இணைய ஊடகங்களில் பெரும்பாலும் இத்தகைய பிரச்சினையை அவதானிக்க முடிகின்றது. ஊடகங்களின் செல்வாக்கு(Media influence ) தற்காலத்தில் மிகவும் இன்றியமையாதாகி விட்டது.
     பெரும்பாலானவர்கள் தற்போதைய காலகட்டத்தில்  சமூக  ஊடகங்களில் தங்கியிருப்பதன் காரணமாக, அனைத்து செய்திகளையும் உண்மை என்று நம்புகிறார்கள். இந்த உண்மைத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் விடயம் ஒன்றாகவே ஊடக எழுத்தறிவு காணப்படுகிறது. தற்போதைய நிலையில்,தகவல் பரிமாற்றத்தில் வேகம் மற்றும் விரைவு காரணமாக நம்பகத்தன்மை குறித்து அதிகம் சிந்தனை செய்ய வேண்டிய அவசியம் தோண்றியுள்ளது.
      எம் கண் முன்னே உலகின் உண்மை விடயங்களை படம்பிடித்து காட்டுவது ஊடகங்களாகும். தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு ஊடகங்களும்   இல்லாத நிலையினை கற்பனை பண்ணி பாருங்கள். எங்களால் வட கொரியா,தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா,ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வருகின்ற தகவல்களின் பெற்றுக் கொள்ள முடியுமா? இன்று நாம் அனைத்து தகவல்களையும் வரலாறு, புவியியல், மதம்,தொழில்நுட்பம் போன்றவற்றை Google.com மில் தேடி தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் ஊடகங்களின் செல்வாக்கு பரந்து காணப்படுவதால்,எமது நாளாந்த வாழ்விலும் அதேசமயம் மக்களின் சிந்தனையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய ஊடகங்கள் மக்களின் வாழ்வியலில் சாதக பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை மிக்கது. இத்தகைய ஊடகங்களை சாதகமான விடயங்களிற்கு பயன்படுத்தும் போது, ஆரோக்கியமான விளைவுகளை எதிர்பார்க்க முடியும். ஊடகங்கள் செல்வாக்கு மற்றும் அதிகாரம் வாய்ந்தது. ஊடகங்களில் கேட்கும் பார்கும் செய்திகளை மக்கள் நம்புகின்றனர். இதனையே ஊடக விமர்சகர், Marshall Macluhan "Media is the message "என்கிறார். அதாவது ஊடகம் என்பது செய்தியே ஆகும்.
     21ம்நூற்றாண்டில்ஊடகத்துறையின் தாக்கம் காரணமாக ஊடக எழுத்தறிவு கல்வியுடன் நெருக்கமானதொன்றாக பார்கப்படுகின்றதது. As pen media literacy leadership institute "The ability to access, analyze, evaluate and create media in a variety of forms "என வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது. அதாவது தமிழில் கூறினால் ஓர் தகவலை வெவ்வேறு பட்ட வடிவில் மதிப்பிட்டு,ஒழுங்கு படுத்தி அணுகும் ஆற்றலே ஊடக எழுத்தறிவு என்று வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது. சமூகத்தில் ஊடகத்தின் பங்கினை புரிந்து கொள்ளும் ஆற்றல் ஊடக எழுத்தறிவு என்று மேலும் ஒரு வரைவிலக்கனம் காணப்படுகிறது.
     21 ம் நூற்றாண்டில் ஊடகத்துறை தனித்துறையாக வளர்சியினை உலகளாவியரீதியில் எட்டிய போதும் எமது இலங்கை தமிழ்பேசும் மக்கள் மத்தியில் ஊடகத்துறை இன்றும்கூட தமக்குரிய துறையாக  பெரும்பாலானவர்களால் கருத்தில்கொள்ளாதமை குறித்து அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆக்கம்
இ.தனஞ்சயன்.

வியாழன், 15 மார்ச், 2018

சமூகஊடகங்களை முடக்குவதை காட்டிலும் ஒழுங்குபடுத்துவதே புத்திசாலித்தனமானது!

          தற்போதைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு தகவல்களினை பரிமாற்றம் செய்து கொள்ள மிகவும் சிறந்த ஊடகங்களாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.சமூக ஊடகங்கள் தொழில்நுட்பம், தொலைபேசி மற்றும் இணையத்தின் வரவுகள் காரணமாக நடைமுறையை எளிமையாக்கியுள்ளது.
     2000 ம் ஆண்டிற்கு முன்பு சமூக ஊடகங்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், அகராதியைதான் நாடவேண்டிய நிலைமை இருந்தது. மாறாக, தற்போது நிலமை முற்றிலும் மாற்றம் அடைந்து விட்டது.அரசியல், வணிகம்,தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்டல் மற்றும் சமூகம் சார் விஷயங்களை பகிர்ந்து கொள்ள மிகவும் சிறந்த ஊடகமாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.
       உண்மை ஆரம்பிப்பதற்கு முன்னரே பொய் உலகத்தை சுற்றி வந்து விடும் என்பதே வெளிப்படை. இதற்கு தக்க வாய்பாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இனமுறுகலிற்கான தூண்டுகோலாக சமூக ஊடகங்கள் காணப்படும் என்ற காரணத்தை கருத்தில் கொண்டே இலங்கை அரசாங்கம் சமூக ஊடகங்களான Facebook, Viper மற்றும்  What's app போன்ற சமூக ஊடகங்கள் தகவல் தொடர்பு ஆனைக்குழுவினால் தற்காலிகமாக தணடசெய்யப்பட்டது.இதேவேளை,சமூக ஊடகங்களில் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவிற்கும் கருத்துக்களை பதிவு செய்த 18,19 வசதியை சேர்ந்த  இருவர் கைது செய்யப்பட்டதுடன் சமூக ஊடகங்களில் இனரீதியிலான பதட்ட சூழ்நிலைய உருவாக்குபவர்கள் கண்கானிக்கப்படுகின்றனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் கருத்து வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
         சமூக ஊடகங்களின் மிகப்பெரிய பலம் யாதெனில் ஒருகருத்தை அல்லது செய்தியை சொற்ப நொடிகளில் பல மில்லியன் கணக்கான மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகும்.இதேபோன்றே,உண்மை பரவும் வேகத்தை காட்டிலும் பொய் பரவும் வேகம் அதிகமாகும்.இனைய ஊடகங்களின் உண்மை நிலையாதெனில் யார் வேண்டுயானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் இந்நிலையே பாரிய ஆபத்தான நிலையாக அமைவதுடன் இன அடிப்படை வாதிகள் தமது சுயலாப அரசியலை சாதகமாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது. சமூக வலைத்தளங்களில் ஒன்றான Facebook தடைசெய்யபடவேண்டும் என்ற நிலையில் கருத்துக்கள் காணப்பட்டாலும் இலங்கையை பொறுத்தவரை கட்டுப்படுத்துவதே சிறந்தது.இலங்கையில் தற்காலிக தடை சமூக ஊடகங்களிற்கு காணப்பட்ட காலகட்டத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் facebook என்பது சிறந்த தொழில்நுட்பம் எனினும் மோசமான வன்முறைகள் இடம்பெறுவதற்குரிய களமாக இது அமையக்கூடாது.இதேவேளை,எத்திரியா,வடகொரியா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் Facebook ற்கு தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, சமூக ஊடகங்களில் ஒன்றான Facebook நிறுவனமானது இலங்கை அரசாங்கத்துடன் எவ்வாறு எதிர்காலத்தில் இன மத குரோத பதிவுகளை நீக்கலாம் என்பது தொடர்பில் ஆலோசித்து வருகிறது.
      அண்மையில் இலங்கையில் நடந்த உள்ளூர் அதிகாரங்தேகளிற்கான தேர்தல் மற்றும் உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தேர்தல்கள் கூட சமூக ஊடகங்களின் செல்வாக்கை சான்று பகர்வனவாக அமைந்துள்ளது.மேலும், கண்டி தெல்தேனியாவில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட போதும் VPN மற்றும் Proxy servers வாயிலாக ஒரு சிலர் சமூக ஊடக பா வனையில் ஈடுபட்டனர்.அதேசமயம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ன சமூக ஊடகங்கள் கருத்துக்களை பரிமாறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
      மேலும்,போலியான செய்திகள் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வருகின்றன என்ற உண்மையை நீண்டகாலமாக எதிர்த்து வந்த Facebook CEO மார்க் அண்மையில் உண்மையை ஒத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அதன் விளைவாகவே, Facebook நிறுவனமானது அரசாங்கங்களுடன் இனைந்து தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க கூடிய செய்திகள் தடைசெய்யபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் சமூக ஒருமைப்பாடு போன்றவற்றிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இலங்கை அரசாங்கம் சமூக ஊடகங்களினை தற்காலிகமாக இனமுறுகலை தணிக்க தடைசெய்தமை சரியானதா? என்று Twitter ல் நடாத்தப்பட்ட கருத்துகணிப்பு ஒன்றில் "yes" என்கிற பதிலே அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
      சமூக ஊடகங்களில் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் விருப்பு இடமுன்னரும் குறித்த செய்தியின் உண்மை தன்மை குறித்து(fact checking)ஆழமாக ஆராய்ந்து கொள்ள வேண்டும்.காரணம், ஒவ்வொரு செய்திகளின் பின்னாலும் அரசியல் நிகழ்ச்சி நிரவல் ஒன்று உள்ளது.தனிநபர்,சமூக மற்றும் நாடுகளிற்கெதிராக வெறுப்பை உண்டாக்கும் வகையில் செய்திகளை வடிவமைக்கும் அதிகாரம் சமூக ஊடகங்கள் வாயிலாக இலகுவாக கிடைக்கின்றது.ஏதாவது ஒரு செய்தி பொய்யானது என்று உணரும் சமயத்தில் அந்த செய்திகளினை பரிமாறாமல் விடுவது புத்திசாலித்தனமானது.சமூகமயமாக்கலில் சமூக ஊடகங்கள் பங்கு காத்திரமானது என்று பலர் வாதிட்டாலும் உண்மையான சமூகமயமாக்கலிற்கு கிடைத்த சாபக்கேடாகவே சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.சமூக ஊடகங்களின் பாவனை தொடர்பாக சரியான விழிப்புணர்வை பயனாளிகளுக்கு ஏற்படுத்தாதவரை சமூக ஒருமைப்பாடு முரண்பாடானதே?

இ.தனஞ்சயன்(இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர்)