அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

அரசியல் தொடர்பாடலிற்கு களமாக அமைவது ஊடகங்களே!

முறைசாரா வழி முறையில் அரசியலினை மக்களிற்கு கற்றுக் கொடுப்பனவாக ஊடகங்கள விளங்குகின்றன. முறை சார்  வழிமுறைகளை பின்பற்றி அரசியல் விஞ்ஞானத்தை கற்றுக் கொள்பவர்கள் மிகவும் சிலரே.ஆகையால், அரசியல் கருத்துருவாக்கத்தில் ஊடகங்களின் வகிபங்கு அளப்பரியது.இவை தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவும், மாற்றி அமைத்துக் கொள்ளவும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டிய அவசியப்பாடு உள்ளது.அரசியல் இன்றி ஊடகங்கள் இல்லை ஊடகங்கள் இன்றி அரசியல்   இல்லை எனலாம். அரசியல் இன்று சகல துறையிலிலும் ஊடுவியுள்ளது.விளையாட்டு, கல்வி, பொருளாதாரம்,வைத்தியம்,விவசாயம் என்று அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறது இதனால் ஊடகங்கள் அரசியலினை தவிர்க்க முடியாத நிலை. தற்போது ஊடகங்களின் அரசியல் முக்கியமானதாக காணப்படுகிற அதேவேளை மக்களை மூளைச்சலவை செய்து செயலற்றவர்களாக்கும் செயலைப் அரசியல் பின்புல உதவியுடன் ஊடகங்கள் நிகழ்த்திக் காட்டுகின்றன. இன்றைய ஓவ்வொரு ஊடகங்களின் பின்புலத்தில் மிகப்பெரிய அரசியல் நிகழ்சிநிரல் இருப்பது என்பது உண்மையானது.தம்மை உண்மை,நடுநிலை, துணிவு எனக் கூறிக்கொண்டாலும் அரசியல் ஆதாயத்திற்காகவே ஊடகங்கள் செயற்படுகின்றது என்பதே நியாயமான கருத்து.இந்நிலையில், ஊடகங்கள் மற்றும் அரசியலின் வெற்றி மக்களின் கைகளில் தான் சனநாயக விதிப்படி தங்கியுள்ளது. எனவே,அரசியல் வாதிகள் தமது கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக பல திட்டமிட்ட செயற்பாடுகளினை மேற்கொள்கின்றாகள் இதுவே அரசியல் தொடர்பாடலாகும்.அரசியல் செயற்பாட்டில் கருத்துக்கள் /சிந்தனைகள் ஊடகங்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள், கட்சிகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் வாயிலாக கடத்தப்படுவதே அரசியல் தொடர்பாடல்(Political communication)என வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது.அரசியல் தொடர்பாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் "அரசியலில் விபத்து என்று எதுவுமே இல்லை யாவும் திட்டமே என பந்தயம் கட்டலாம் "என அரசியல் திட்டமிடலின் அவசியத்தை சிந்திக்க வைக்கிறார்.தொடர்பாடல் என்பது சாதாரணமான வாழ்வியலில் மிக இன்றி அமையாதது. அரசியலில் தொடர்பாடல் இன்றி அரசியல் இல்லை எனலாம்.அரசியல் வாதிகளின் முக்கியமான முதல் இராஜதந்திரமாக பொருத்தமான மிகச்சிறந்த ஊடகங்களினை தெரிவுசெய்வதே ஆகும்.ஊடகங்கள் கோட்பாடு ரீதியாக பார்தால் ஊடக தெரிவு கோட்பாட்டை குறித்த இராஜதந்திர பிரோயகத்திற்கு பயன்படுத்தலாம்.அரசியல் தொடர்பாடலினை மிகவும் திட்டமிட்டு திறம்பட மேற்கொண்டு வருபவராக இந்திய பிரதமர் நரேந்திரமோடியினை குறிப்பிடலாம்.தனது நாட்டு மக்களிற்கு உரையாற்றும் போது, பெரும்பாலும் மம்பாத் என்ற வானொலி நிகழ்ச்சி ஊடாகவே மக்களிடம் தமது திட்ட எண்ணங்களை கொண்டு சேர்க்கின்றார்.அத்துடன், தற்காலத்தில் மிகவும் பிரசித்தமடைந்துள்ள சமூக ஊடகங்களினை தனது பிரச்சார கருவியாவும் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.குறிப்பாக, அரசியல் வாதிகள் ஊடகங்களில் தமது பலவீனங்களை மறைத்து முகமூடிகளுடன் தோன்றி தம்மை மக்களின் மீட்பர்களாக,தலைவர்களாக,சீர்திருத்த வாதிகளாக,பேச்சாளர்களாக,தேசப்பற்றாளர்களாக,இன ஆதரவாளராக, உன்னதமானவர்களாக மக்களினை நம்ப வைப்பதற்கு அரசியல் வாதிகளிற்கு ஊடகங்களே மிகவும் சிறந்த களமாக அமைகின்றன.ஆதாரமாக,அரசியல் வாதிகள்/அரசியல்வாதியாக இலக்கு வைத்து இருப்பவர்கள் தம்மை தூய்மையானவர்களாக காட்டி கொள்ள வெள்ளை வேட்டி சட்டை அணிந்து மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் குறிப்பாக பிரபலமான ஆலயத்திருவிழாக்கள்,எதிர்ப்பு ஆர்பாட்டங்கள்,நினைவு தினங்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், திறப்புவிழாக்கள்,மரணவீடுகள், திருமண வீடுகள்,விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒரு நிகழ்வுகளும் இல்லாவிடில், தமக்கு தாமே விழா எடுத்தல் போன்றவற்றின் ஊடாக மேற்கொள்கின்ற தொடர் பாடல் அரசியல் தொடர்பாடலே ஆகும். இதேபோன்று, தமக்கு தாமே புற விளம்பரங்களை வீதியில் தொங்க விடுதல்,பொது கல்வெட்டில் தமது பெயர்களை பொறித்தல் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்றல்,அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றல் போன்றன அரசியல் தொடர்பாடலே ஆகும்.தேர்தல் காலங்களில் அரசியல் தொடர்பாடலே மிக இன்றியமையாதது.தேர்தல் பிரச்சார சமயங்களில், அதிகமான மக்கள் தமக்கு ஆதரவாக உள்ளனர் போன்ற பிரக்ஞையை ஏற்படுத்தல் குறித்த கட்சிக் கொடிகளின் நிறத்தை முக்கியத்துவப்படுத்துகின்றன.ஊடகங்களில் கட்டணம் செலுத்தி தமக்கு தாமே விளம்பரம் செய்தல்,ஆங்காங்கே தாம் படத்திற்காக செய்த சிறிய உதவிகளை ஆவணப்படுத்தி மீள மீள ஊடகங்களில் ஒளிபரப்பு செய்து மக்களின் மூளையினை சலவை செய்தல்.போன்றன அரசியல் தொடர்பாடலிற்கான முக்கிய எடுத்துக்காட்டுகளாகும்.அரசியலில் ஊடகங்களில் அடிக்கடி வருவது கட்டாயமானது.இல்லாவிட்டால், மக்கள் மறந்து விடுவார்கள். இதற்காக, அரசியல்வாதிகள் பல மூலோபாயத் திட்டங்களை மேற்கொள்வார்கள்.அமெரிக்காவில் இறுதியாக இடம்பெற்ற தேர்தலை பொறுத்தவரை சமூக ஊடகங்களின் பங்களிப்பு அளப்பெரியது.அமெரிக்க ஜனாதிபதி ஊடகங்களினை கடுமையாக தேர்தல் காலங்களில் சாடினார். குறிப்பாக, CNN இனை போலி செய்தியை வெளியிட்டு வரும் ஊடகம் என நேரடியாக சாடினார். கடந்த அமெரிக்க தேர்தலில் கிலாரியின் பக்கம் பிரதான ஊடகங்கள்(Mainstream media)சாய்ந்தாலும் ட்ரம்பின் வெற்றி சாதாரணமாக அமைத்ததற்கு சமுக ஊடகங்களே எனலாம்.எனினும்,  ரஷ்யாவின் பங்களிப்பு ட்ரம்பின் வெற்றிக்கு துனைபுரிந்தது என்பதும் மறுப்பதற்கில்லை.இதேவேளை,சர்வதேச அரசியலில் ஊடகங்களின் வலிமை /சர்வதேச உறவை பேனுவதில் அரசியல் தொடர்பாடலை உணர்ந்த சீனா தனது ஆதிக்கத்தை பொருளாதார மட்டத்தில் உயர்தினால் மாத்திரம் போதாது. தொடர்பாடலே மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து C.G.T.N (China global television network ) இனை உலகளாவிய ரீதியில் விரிவாக்கி சீனாவுக்கு சார்பான அரசியல் பொருளாதார விஷயங்களை விவாதித்து நியாயப்படுத்தி வருகிறது. சீனாவின் one road one belt திட்டத்தின் வெற்றியில் குறித்த தொலைக்காட்சியின் பங்கு அளப்பெரியது.அத்துடன் பூகோள அரசியலினையும் குறித்த ஊடகம் விளங்கிக் கொண்டு செய்தியுடன் உலக வரை படத்தின் சீனாவின் கேந்திர நிலையை சுட்டிக்காட்டுகிறது. குறித்த ஊடகமொழியாக ஆங்கிலமே காணப்படுகிறது.இதேபோல்,  Aljazeera கட்டாரை தளமாகக் கொண்டு அமெரிக்கமயமாதலுக்கு எதிராக இயங்கி வருகிறது. இதன்காரணமாகவே,அண்மையில் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை கட்டாருக்கு ஏற்பட்டதற்கு மறைமுக காரணம் குறித்த ஊடகமே என்பது நன்றாக நுணுகி சர்வதேச அரசியலை விளங்கிக் கொள்ளும் போது புரியும்.இதேபோல்,Russia Today மற்றும் Tass போன்றன ரஸ்யா சார்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. B.B.C,CNN,APA,AFP போன்றன அமெரிக்காவின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் ஊடகங்களே!சர்வதேச ஊடகங்களின் விம்பிள்டன் கட்டமைப்பு பரந்தது/அளவீட்டிற்கு அப்பாற்பட்டது. பிரசித்தமான ஊடக பண்பாட்டை(Popular media culture )உருவாக்குவதில் இவற்றின் பங்கு கணிசமானது.இலங்கையில் அரச ஊடகங்கள் நடப்பு அரசாங்கத்தின் ஊதுகுழலாக அரசியல் தொடர்பாடலை மேற்கொள்கின்ற அதேவேளையில், தனியார் ஊடகங்கள் தமது தனிப்பட்ட இலாப அரசியலிற்காவே குறித்த தொடர்பாடலை முன்னெடுத்துச் செல்கின்றன.தமிழகத்தில் அரசியல் தொடர்பாடல் தொலைக்காட்சி ஊடகவே தற்போது பிரபலமடைந்து வருகிறது. இங்கு, சினிமாவின் தாக்கம் அளப்பெரியது.சினிமாவில் இருந்து அரசியலிற்கு வந்து மிகப் பெரிய வெற்றி பெற்றவராக மக்கள் திலகம் என்று கூறப்படும் MGR இறை குறிப்பிடலாம்.பாத்திரம்,பாடல்கள், திரைக்கதை,வசனங்கள் என அனைத்துமே அரசியல் தொடர்பாடலிற்கான ஆதாரங்கள். தற்போதைய கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான உரையாடல்களும் அரசியல் தொடர்பாடலிற்கான சான்றே ஆகும்.விஜய் கூட எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கான தொடர்பாடலாகவே சினிமாவினை பயன்படுத்தி வருகிறார். அழகியதமிழ்மகன்,தலைவா,கத்தி தற்போதைய பாடல் ஆளப்போறான் தமிழன் முதல் என்நெஞ்சில் குடி இருக்கும் வரைக்கும் அரசியல் தொடர்பாடலே!குறிப்பாக அரசியல் தொடர்பாக வில் பின்பற்றும் இராஜதந்திரம் தொடர்பாக கவனிக்க வேண்டியது அவசியமாகும்.பார்வையாளர்களின் இடம், காலம்,மொழி போன்றவை புரிந்து கொள்ளப்படவேண்டும். இதன்காரணமாகவே,நமது நாட்டின் அரசியல்வாதிகள் தெற்கில் ஒருவிதமாகவும் வடக்கில் ஒருவிதமான கருத்தையும் விதைத்து வருகிறார்கள்.இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி அரசியல் தொடர்பாடலை யுத்தத்தை தானே வெற்றி கொண்டதாகவும்,சிறு குழந்தைகள் மீது பாசம் மிக்கவராகவும்,எளிமையான விவசாயி போன்றும்,தமிழ் கற்றுக் கொள்ளும் ஆசையுள்ளது போன்றும் இதன்காரணமாகவே 'நீங்கள் என்னை நம்பலாம் நான் உங்களை நம்புகிறேன் "போன்ற முறையைக் கையாண்டு வந்தார்.மேலும், இவ்வாறான உடைகளை அணிதல்,எப்படி போட்டோ விற்கு போஸ் கொடுத்தல்,உணர்வுகளை எப்படி முகாமை செய்தல்,நேர்காணலிற்கு எப்படி முகம் கொடுத்தல்,பிரபலமானவர்களை வளைத்துப் போடுதல் போன்றன அரசியல் தொடர்பாடலை மேலும் வலுப்படுத்தும்.என்ன தகவலை ஏன் எப்படி எப்போது எங்கே சொல்கின்றோம் என்பதை பொறுத்தே அரசியல் தொடர் பாடல் வெற்றி அமையும்.எவ்வாறாயினும்,அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கூறியதைப் போன்று "சிலரை பல காலம் ஏமாற்றலாம், பலரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால், எல்லாரையும் எல்லாவேளையிலும் எங்கேயும் ஏமாற்ற முடியாது "என்ற சிந்தனை அரசியல் தொடர்பாடலிற்கும் சாலப் பொருத்தமானது.அரசியல், சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களிற்கேற்ப தம்மை தகவமைப்பவர்களே அரசியல் தொடர்பாடலில்  வெற்றிபெறுவார்கள்.இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப்பல்கலைகழகம்,ஊடகக்கற்கைகள்.