மீண்டுமொரு வலைப்பூ பதிவில் சந்திப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.இந்த பதிவு மியன்மாரின் தற்போதய நிலைமை தொடர்பாக ஆராய்கின்றது.
தென்கிழக்காசிய நாடான மியன்மாரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெற்றது. இதில் அந்நாட்டின் அரச ஆலோசகர் ஆங் சாங் சூ கி தலைமையிலான ஆளுங்கட்சி அமோக வெற்றி பெற்றது. மியன்மாரில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவியான ஆங் சாங் சூ கி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை அடுத்து மியன்மாரின் பதற்ற நிலைமை தோன்றியுள்ளதோடு, ஜனநாயக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு திரட்டும் முகமாக பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றன. இதனையடுத்து மியன்மார் இராணுவம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைத் தடை செய்துள்ளது. மியன்மாரில் 53 மில்லியன் சனத்தொகையில் அரைப்பங்கினர் பேஸ்புக் பாவனையாளர்களாக உள்ளனர். இந்நிலையில் மியன்மாரின் தகவல் தொடர்பாடல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களிலிருந்து வரும் தவறான புரிதலை கட்டுப்படுத்துமுகமாக சமூக வலைத்தள தடைகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மேற்கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், விபிஎன் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பேஸ்புக் பாவனையில் மியன்மார் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மியன்மாரில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவன இயக்குனர் கருத்து வெளியிடுகையில், மக்களுக்கு வேறு தெரிவு இல்லை எனத்; தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தின் பேச்சாளரான அன்ரி ஸ்ரோன் மியன்மாரில் நெருங்கிய உறவினர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் சில தளர்வுகளை பேஸ்புக் ஊடாக செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூ கி மீது தவறான முறையில் தொடர்பாடல் கருவிகளை இறக்குமதி செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை பொலிசார் ஆங் சாங் சூ கியின் வதிவிடத்தில் கண்டெடுத்ததாகக் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, ஆசியான் பாராளுமன்றத்தில் மனித உரிமை பிரிவினர் பொருத்தமில்லாத குற்றச்சாட்டு என கூறுகின்றனர். இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஜனநாயகத்திற்கான தேசிய கட்சியும் உத்தியோகபூர்வ அறிக்கையை ஆங் சாங் சூ கி மியன்மாரின் தலைநகரில் வீட்டுக் காவலில் உள்ளதாகவும் எனினும் அவரது உடல் நிலையில் எந்தப் பாதிப்பு இல்லை எனவும் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இராணுவம் ஆங் சாங் சூ கியின் வீட்டுக் காவல் தொடர்பில் எந்தவொரு கருத்தும் வெளியிடவில்லை. மியன்மார் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இராணுவம் ஜனநாயகத்திற்கான தேசிய கட்சி நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் பெற்ற வெற்றியானது முறைகேடான முறையில் பெற்றது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்தும் முன்வைத்து வருவதுடன் ஒரு வருட காலத்திற்கு தேசிய அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மியன்மார் விவகாரம் சர்வதேச அளவில் பாரிய பேசும் பொருளாகவும் மாறியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் பிரித்தானியாவிற்கான நிரந்தர பிரதிநிதியான பார்பரா வுட்வாட் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மியன்மாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக தாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக மியன்மாரின் இறைமை, அரசியல் சுதந்திரம், பிராந்திய பாதுகாப்பு மற்றும் மியன்மாரின் ஐக்கியம் போன்றவை மீள உறுதி செய்வதுடன் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவியான ஆங் சாங் சூ கி மற்றும் ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் கருத்து வெளியிடும் போது மியன்மாரில் ஆட்சியை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் ஆட்சியை மீள கையளிக்கவேண்டும் எனவும் வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் மீள அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.