"சட்டம் ஒருவனை நேசிக்க வற்புறுத்தா விட்டாலும் ஒருவனை தாக்கிகொலைசெய்வதில் இருந்ததாவது பாதுகாக்கும்" என்பது சட்டம் தொடர்பான நம்பிக்கையை ஆழப்படுத்தும் எண்னக்கருவாகும். சமூகம் மற்றும் மக்களின் உரிமைகள் செம்மையான முறையில் பேணப்படுவதற்கு சட்டம் உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும். ஒருவனோ அல்லது குழுவோ தனக்குரிய/தமக்குரிய உரிமை சார்ந்த விடயங்களை நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும்.
சட்டம் என்பது சமுகத்தின் ஒருங்கிசைவு சமூக மேம்பாடு போன்றவற்றை பாதுகாப்பதாக அமைய வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலையும் போது நாடு அதாள பாலத்திற்குள் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக செல்லக் கூடும். சட்டம் என்பது சமூகத்தின் ஒழுங்குகளை பேணிப்பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். அதனை உரிய முறையில் அமுல்படுத்தும் போதே அது வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்கதாக அமையும்.
சட்டபுத்தகத்தில் உள்ளதனை நடைமுறைப்படுத்தும் போதும் அதனை பின்பற்றுவதும் கடினமானதாகவே தோன்றும். எனினும் காலப்போக்கில் அது நடைமுறைக்கு வந்துவிடும். நீதி மற்றும் ஊடகம் என்பவை சுயாதீனமானதாகும். நீதிக்காக போராடும் முதலாவதும் இறுதியானதுமான சட்ட இராஜ்சியத்தின் தலைநகரம் நீதிமன்றம் எனலாம். குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்/சட்டத்தை பாதுகாத்து நீதியை பேணுவதில் மறைமுகமாக பங்காற்றும் முகவர் ஊடகங்களே ஆகும். சட்டங்களை நடைமுறைப்படுத்தி சமுகத்தின் கண்ணாடியாக விளங்குவது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக அழைக்கப்படும் ஊடகங்களே ஆகும். அது மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.
கடந்த காலங்களில் இலங்கையின் ஊடகத்துறையில் மிகவும் ஆபத்தான துறையாகவே பார்க்கப்பட்டது. ஊடகத்துறையினர் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், கொலை முயற்சிகள் மற்றும் கொலை அச்சுறுத்தல் போன்றன கருத்து மற்றும் ஊடக சுதந்திரம் எதிர்மறையான சிந்தனைப்போக்கே காணப்பட்டது. எனினும், தற்போதைய நிலையில் ஊடக துறை தொடர்பாக சற்று ஆரோக்கியமான மனநிலையே காணப்படுகிறது. அதற்கு பிரதான காரணம் இனைய மற்றும் சமூக ஊடகங்களின் அபரிமிதமான அபிவிருத்தி என்றே எண்ணத் தோன்றுகின்றது. இலங்கை சட்டத்தின் கருத்து சுதந்திரம் 14 ம் சரத்தின் அடிப்படையில் தெளிவான சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும் எந்த அளவு தூரம் சட்டம் பிரயோகப்படுத்தப்படுகின்றது என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
ஊடகங்கள் என்பது வெகுஜன பார்வையாளர்களினை கொண்டுள்ளது. அக் குறித்த ஊடகங்களின் வாயிலாக மக்கள் மத்தியில் கருத்ருவாக்கம், விம்பகட்டமைப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தல், செய்தி அறிக்கையிடல், தகவல்களினை வழங்குதல், பகுப்பாய்வு செய்தல், புலனாய்வு தளத்தில் செய்தியை வழங்குதல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். ஊடகங்கள் என்பது தனித்து களிப்பூட்டுவனவாக மாத்திரமல்லாது மக்களிற்கு அறிவூட்டுவதாக அமைய வேண்டும். அதாவது, ஊடகங்கள் சம்பவங்களை நன்றாக ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து என்ன? எங்கே? ஏன்? எப்படி நடந்தது? யார் பங்கு தாரர்கள் போன்ற கேள்விக்குரிய பதில்களை மக்களிற்கு வழங்குவதாக இருக்க வேண்டும்.
ஊடகங்கள் மக்களினை நடப்பு விவகாரங்கள் தொடர்பாக இற்றைப்படுத்தி வைப்பதற்கு பயன்படும் இலகுவான சாதனமாகும். இன்றைய உலகில் எப்பகுதியானாலும் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, சிரியா, ஜேர்மனி என எங்கு என்ன நிகழ்வு நடந்தாலும் இலகுவாகஇலகுவாக தகவல்களினை பெற்று கொள்ள முடிகிறது. உதாரணமாக, பிரான்ஸில் நடைபெறும் மஞ்சள் அங்கி போராட்டத்தை குறிப்பிடலாம். இன்று மக்களினை ஒளியூட்டும் இரு விசைகளாக சூரியன் மற்றும் ஊடகங்களினை குறிப்பிடமுடியும்.
ஊடகங்கள் தற்காலத்தில் நிகழும் மனித உரிமை மீறல்கள், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள், ஜனநாயக பிறழ்வு நடவடிக்கைகள் போன்றவை தொடர்பில் விழிப்பூட்டும் செயற்பாட்டில் பிரதான பங்கு வகிக்கிறது. உதாரணமாக சிரியா மற்றும் ஜேமன் போன்ற நாடுகளில் இடம்பெறும் உள்நாட்டு மோதல்களினால் ஏற்படும் மனித மீறல்கள் சர்வதேச ஊடகங்களில் பிரதானப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசியல் சாசனத்திற்கு விரோதமாக இடம்பெறும் சம்பவங்களை ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் அது தொடர்பாக சட்ட ஏற்பாடுகளினை மக்களிற்கு தெளிவுபடுத்துகின்றன. காரணம் யாதெனில் மக்கள் இன்று சட்டம் தொடர்பான போதிய இன்மையுடனே காணப்படுகின்றனர்.
ஊடகங்கள் குறித்த ஒரு குற்றச்செயல்களை வெளிப்படுத்தி பிரதானப்படுத்துவதோடு அதிகாரத்தில் உள்ளவர்களினை கேள்வி கேட்கின்றது. இதன்காரணமாக, அதிகார வர்க்கம் சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்தை உட்பட்டு நகர்த்துகின்றது. இதனூடாக சட்ட சிக்கல்களில் உள்ள மக்களிற்கு நீதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதிலிருந்து ஊடகங்கள் என்பது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவராக கொள்ள முடியும் என்பது உறுதிப்படுத்துகிறது. இதனாலேயே ஊடகங்கள்காவல் நாய்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஊடகங்கள் குற்ற செயல்கள், ஊழல்கள், சட்ட மற்றும் ஜனநாயக விழுமிய மீறல்கள் போன்றவற்றை பிரதானப்படுத்தி ஊடகங்களில் வெளியிடுவதுடன் அதனை உரியவர்களுக்கு அறிமுகப்படுத்தி குறித்த சட்ட மீறல்களில் ஈடுபட்டோருக்கு உரிய தண்டனையை பெற்று கொடுக்க உதவுகிறது. பிரச்சினைகள் மற்றும் அதற்குரிய தீர்வுகள் தொடர்பாக உரையாடுவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் சிறந்த அடித்தளமாக ஊடகங்களே அமைகின்றன. ஊடகங்களில் சிபாரிசு செய்யப்படும் தீர்வுகள் மக்களின் தீர்வுகளிற்கு இனையானவை எனவே சட்டத்தின் சார்பும் ஊடகங்களிற்கு சார்பானதாகவே அமையும். இது நடுநிலை சார்ந்த ஊடகங்களிற்கே பொருந்தும். இங்கு நடுநிலை என்பதே சிந்தனை மற்றும் கேள்விக்குரிய விடயமாகும்.
ஊடகங்கள் என்பது நீதி மீது நம்பிக்கை அற்று இருப்பவர்களுக்கும் புதிய நம்பிக்கை அளித்து நீதி மீது நம்பிக்கை வேண்டுமளவிற்கு ஊடகங்கள் செயற்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அமையவேண்டுமே தவிர மேட்டுக்குடியின் கூப்பாடாக ஊடகங்கள் அமையக்கூடாது. தண்டனைகள் அநீதியாக இருந்தால் அதனை சுட்டிக்காட்டுவதோடு சட்டத்திற்குட்பட்ட தண்டனைகளை அமுல்படுத்துவதில் உள்ள தாமதங்களினை எடுத்தியம்பி அதனை நடைமுறைப்படுத்த உதவ வேண்டும். அண்மையில் பாராளுமன்றத்தில் நடந்த குழப்பம், எரிபொருள் விலைமாற்றங்கள், இரு பிரதமர்,இரு எதிர் கட்சி தலைவர்கள், பினை முறி மோசடி போண்ற பிரச்சினைகள் ஊடகங்களில் அண்மையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளாக கூறமுடியும். மேலும், புங்குடுதீவு வித்தியாவின் கூட்டு பாலியல் பலாத்காரம் தொடர்பாக ஊடகங்கள் Follow up அறிக்கையிடலினை மேற்கொண்டு இறுதி தீர்ப்பு வரும் வரைக்கும் அவதானித்து வந்தமை அது தொடர்பாக மக்களிற்கும் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய சமூகத்தில் ஊடகங்கள் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இருளை அகற்றி ஒளியேற்றும் சூரியன் போன்றே மக்களின் அறியாமையை போக்கி அறிவூட்டுவதாக ஊடகங்கள் விளங்குகிறது. அரசாங்கத்தை பதில் சொல்ல வைக்கும் அதிகாரம் ஊடகங்களிற்குண்டு . ஊடகங்களினை உதாசீனப்படுத்துவது மக்களினை உதாசீனபடுத்துவதற்கு சமமானது. இதுவே ஜனநாயக நாட்டில் ஊடகங்களிற்கு உள்ள பலமாகும். இது நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை உணர்த்துகிறது.
சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரின் உரிமையையும் அதிகரித்துள்ளதுடன் மக்கள் தமது உரிமைக்காக போராடமுடியும். இது உள்ளூர்,வெளியூர் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டதாகும். இன்று பல போராட்டங்கள் சமூக ஊடகங்கள் ஊடாகவே ஒருங்கினைக்கப்படுகின்றன. உதாரணமாக, பிரான்ஸில் நடைபெறும் மஞ்சள் அங்கி போராட்டத்தை குறிப்பிடலாம். தகவல்கள் மற்றும் விவாதங்கள் ஊடகவே தெளிவு மற்றும் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காகவே ஊடகங்கள் சிறந்த தொடர்பாடல் கருவிகளான உரையாடல், கருத்து கணிப்புகள், விவாதங்கள், கருத்தாடல்கள் போன்றவற்றை மேற்கொள்கின்றன . ஊழல் மற்றும் சுரண்டல்களுக்கு எதிராக போராடுவதில் ஊடகங்களிற்கு பிரதான பங்குண்டு. ஊடகங்கள் தனித்து அறிக்கையிடுவது மாத்திரமல்லாது வெளிப்படையான நிர்வாகத்திறனை பேணுவதற்கு சிறந்த கண்காணிப்பாளராக ஊடகங்கள் இருக்க வேண்டும்.
நிறைவாக, ஊடகங்கள் தனித்து அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடாது அதாவது அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்கத்தை குற்றம்சாட்டமால் மக்கள் எவ்வளவு தூரம் தமது வாழ்வியல் முறைகளினை சட்டம், விழுமியங்கள், நீதி மற்றும் அறத்திற்கு உட்பட்டு மேற்கொள்கின்றார்கள் என்பதனை தெளிவுபடுத்தி மக்களினை சட்டம் மற்றும் ஒழுங்குகளை பின்பற்ற செய்ய விழிப்புணர்வூட்டுவது ஊடகங்களின் பிரதான பொறுப்பு மற்றும் கடமையாகும். அவ்வாறு பின்பற்றும் போதே நிலையான நிம்மதியான சூழலை உடைய சமூகத்தை உருவாக்க முடியும்.
ஆக்கம்
இ.தனஞ்சயன்