அறிவைநாடல்

அறிதலார்வம்
சனி, 4 ஆகஸ்ட், 2018
அரசியல் ஆடுகளத்திலும் வெற்றி பெற்ற இம்ரான் கான்!
அண்மைக்காலங்களில் விளையாட்டு உலகில் பரபரப்பான சம்பவங்கள் இடம்பெற்றன. உலகக்கிண்ண கால்பந்து போட்டி,இலங்கை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி,இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி என போட்டிகள் நடைபெறும் அதேசமயம் போட்டிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய விடயங்களும் இடம்பிடித்து ஊடகங்களுக்கு நல்ல விருந்தாக அமையும். அதிலும் குறிப்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர், திலங்க சுமதி பால அர்ஜுன ரணதுங்க மற்றும் அரவிந்த டீ சில்வா மீது சூதாட்டத்தில் தொடர்பு பட்டதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்ததும் அதனைத் காலாவதியான குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்களுக்கு பதிலளித்து இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான முதல் பேட்டியில் தோற்றதற்கு திலங்க சுமதி பாலா தம்புள்ள மைதானத்திற்கு விஜயம் செய்தமை சந்தேகப்படவைக்கின்றது என முன்னாள் வீரர்கள் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, இலங்கையில் விளையாட்டுத்துறை அரசியலில் மூழ்கி பரிதாபமாக காணப்படும் நிலையில் விரைவில் கிரிக்கெட் சபை தேர்தலினை நடாத்தும் படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் கவனிக்க வேண்டியது.
இதேவேளை, 2020 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த சங்ககார குறித்த ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராக களமிறங்குவார் எனவும் அவர் அரசியலில் ஈடுபட வரவேண்டும் என ராஜித சேனாரத்ன அண்மையில் குறிப்பிட்டு இருந்தமை கவனிக்க வேண்டியது. இந்த நிலையில், எமது அயல் நாட்டின் பரம எதிரியான நாடான பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் மற்றும் 1992 உலகக்கிண்ணத்தை பாகிஸ்தானிற்கு பெற்று கெடுத்த அணித்தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தானிய பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணியின் ஆதரவுடன் பிரதமராகின்றார்.65 வயதான இம்ரான் கான் 1996 ஆம் ஆண்டு அரசியலிற்கு நுழைந்தாலும் அரசியலில் 22 வருடங்களாக போராடியே தனது பிரதான இலக்கை (Main Goal) அடைகின்றார். இவருடைய பிரதான கொள்கையாக பாகிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்தல் மற்றும் ஊழல் மோசடிகளை இல்லாது ஒழித்தல் போன்றன காணப்பட்டாலும் பிரதமராக பதவியேற்ற பின்னர், குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சவால்கள் காணப்படும் என்பது மறுப்பதற்கில்லை.
பாகிஸ்தானில் இராணுவத்திடம் அதிகாரம் காணப்படுகின்ற நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தின் செல்லப்பிள்ளையாகவே இருக்க வேண்டிய நிலை இருக்கும். அத்துடன் இம்ரான் கானின் வெற்றிக்கு பின்னால் இராணுவத்தின் உழைப்புள்ளது என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இதேவேளை, பூகோள அரசியல்ரீதியில் பாகிஸ்தான் அமைவிடம் இந்திய, சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் அரசியலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட நாடுகளுடன் எவ்வாறான அரசியல் இராஜதந்திர தொடர்புகளை கையாழப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறான சூழலில்,"இந்தியா ஒரு அடி எடுத்தால் நான் இரண்டு அடி எடுப்பேன்" என்று கூறியுள்ளார். இதேவேளை, தான் பதவியேற்கவுள்ள ஆவணி மாதம் 15 ம் திகதி நடைபெறும் நிகழ்வில் இந்திய பிரதமர் மற்றும் தன்னுடைய காலத்தில் இந்திய அணியில் விளையாடிய கபில்தேவ் மற்றும் சுனில் கவாஸ்கருக்கும் அழைப்பு விடுக்க இருக்கின்றமை மேற் சொன்ன கருத்தை உயிரோட்டமிக்க தாக்குகின்றன. சர்வதேச அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்காவுடன் முரண்பட்ட கருத்துக்களினை கொண்டுள்ள இம்ரான் எப்படி பாகிஸ்தானினை மாற்றி அமைத்து கொள்வதுடன் சர்வதேச அளவில் வருகின்ற சவால்களை வெற்றி கொள்ள போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதேநேரம், குறித்த வெற்றி தொடர்பாக, இம்ரான் கானின் முதல் மனைவி Ms Gold smith குறிப்பிடும் போது 22 வருட தியாகம்,தடைகளை வெற்றி கொள்ளுதல் மற்றும் நிராகரிப்புக்களை தாண்டி பாகிஸ்தானின் புதிய பிரதமரான எனது மகன்களின் தந்தைக்கு வாழ்துக்கள் என்று கூறினார்."22 years later, After humiliation, hurdles and sacrifice, My son's father is Pakistan's new prime minister". நிட்சயமாக, கிரிக்கெட் ஆடுகளத்தில் எதிர்கொண்ட சவால்களை விட பாரிய அளவில் சவாலுக்கு முகம்கொடுக்க நேரிடும். எது எப்படியோ, எமது நாட்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அரசியலிற்கு வந்து பாராளுமன்றம் சென்ற வீரர்களை காணமுடியும். ஆயினும், இம்ரான் தனது போராட்ட குணம் மற்றும் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி நகர்ந்து வெற்றி பெற்ற விதத்தில் இருந்து ஓர் முன்மாதிரியாக விளங்குகின்றார்.
ஆக்கம்: இ.தனஞ்சயன்
(யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் மாணவன் மற்றும் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சி பிரிவின் உதவி தயாரிப்பாளர்)
லேபிள்கள்:
ஊடகங்கள்,
கிரிக்கெட்,
சர்வதேச அரசியல்,
தணல்,
தொடர்பாடல்,
தொலைக்காட்சி,
படைப்பாக்கத்தொடர்பாடல்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்,
யாழ்பாணம்,
விளையாட்டு இதழியல்,
ஜனநாயகம்,
Globalisation,
Media,
Media culture

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)