அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

சனி, 18 ஆகஸ்ட், 2018

ஊடகங்களின் எல்லையை விரிவடையச் செய்யும் உலகமயமாக்கல்!

இன்றைய சமுகத்தை கட்டுமானம் செய்வதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது. ஒவ்வொரு மனிதனின் நாளாந்த வாழ்கையின் முக்கிய பகுதியாக ஊடகங்கள் காணப்படுகிறது. ஒரு விடயம் பற்றிய கருத்துகளினை உருவாக்கும் பங்கினை ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் அடிப்படையாகக் கொண்டே காணப்படுகிறது. அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் முக்கியமான தொடர்பாடல் கருவியாக ஊடகங்கள் விளங்குகிறது. ஊடகங்களின் பிரதான பணியாகக் காணப்படுவது உலகிற்கு எந்த ஒரு தகவலினதும் சரியான விடயம் எது? பிழையான விடயம் எது? என்பதேயாகும். சரியான நேரத்தில் சரியான விடயத்தை சரியான முறையில் கொண்டு சேர்கும் பாரிய பொறுப்பு ஊடகத்திற்குண்டு. ஊடகங்கள் எங்களைச் சுற்றிய அனைத்தையும் முன்னிலைப்படுத்துகின்றது. உதாரணமாக, இணையம், தொலைக்காட்சி, வானொலி,சஞ்சிகை மற்றும் பத்திரிகை போன்றவற்றை குறிப்பிடலாம். குறித்த ஊடகங்கள் வாயிலாக வரும் தகவல்கள்/செய்திகள் அடிமட்ட மக்களினை சென்றடையும் போதே ஊடகங்கள் வெற்றி அடைகின்றன. சமுக பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்கள் தொடர்புகொண்டுள்ளனர். இவ்வாறான விடயங்களை ஊடகங்கள் வாயிலாகவே வெளிக்கொணரமுடியும். இதன்காரணமாக, மக்கள் ஊடகங்களில் தங்கியுள்ளனர். ஊடகங்கள் மக்களில் தங்கியுள்ளது. தற்போதைய நிலையில், ஊடகங்களினை மக்கள் தவிர்க்க முடியாது. மக்களிற்கு தகவல்களினை வழங்கி அவர்களிற்கு பல்வேறு செய்திகள், நிகழ்வுகள், சமூக நடவடிக்கைகள், வாழ்க்கை முறைமை, பொழுது போக்கு மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை தெளிவுபடுத்துவதாக ஊடகங்கள் காணப்படுகிறது. இலங்கையில் இருந்துகொண்டே, உலகின் எப்பகுதியானாலும் கனடாவோ,ஜேர்மனியோ , தென் கொரியாவோ, அவுஸ்திரேலியாவோ நடைபெறும் நிகழ்வுகளை நேரடியாக கண்டு கொள்ள முடிகிறது. அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியினை உதாரணமாக குறிப்பிடமுடியும். ஊடகங்கள் சமுகம் மற்றும் அவற்றின் கலாச்சாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனினும் உலகமயமாக்கலின் விளைவினால், ஊடகங்கள் பாரிய செல்வாக்கினை பெற்றுள்ளதுடன் மக்களிற்கு பல சாதக பாதக விடயங்களும் காணப்படுகிறது. பல்வேறு வகையான சமூகங்களின் ககலாச்சாரங்களை ஊடகங்கள் வேறு சமூகத்திற்கு சொல்லி கொடுக்க வழிஏற்படுகின்றது. உதாரணமாக, வட இந்திய நாடகங்கள் தமிழிற்கு டப்பிங் செய்தல் மற்றும் தென் இந்திய திரைப்படங்களின் அதீத தாக்கத்தை இலங்கை தமிழ் சமூகத்தை குறிப்பிடலாம். இதன்காரணமாக, ஊடகங்களினை மக்கள் சாட்சியாக பார்கின்றனர். ஊடகங்களே உலக நிகழ்வுகள் தொடர்பாக அறிவூட்டலை வழங்குகிறது. இத்தகைய ஊடகங்கள் அரசியலில் முக்கிய பிரச்சார ஊடக கருவியாகப் பயன்படுத்துகின்றது. நாட்டின் தலைவர்களினை மக்கள் தெரிவுசெய்வதற்கு மக்களினை குறித்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களினை நியாயப்படுத்தும் கருவியாக ஊடகங்களே காணப்படுகிறது. ஊடகங்களினை பொறுத்தவரை சாதக பாதக அம்சங்கள் காணப்பட்டாலும் மக்களின் சுபாவம் மற்றும் மனநிலையிலேயே அதன் சாதக பாதகங்களை தீர்மானிக்க முடியும். ஊடகங்களின் தாக்கத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளும் போது, அதனை எமக்கு சாதகமான முறையில் சூழலினை உருவாக்க முடியும். ஊடகங்களின் செல்வாக்கு காரணமாக, தனிநபர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளில் மாற்றங்களை உண்டாக்க முடியும். உலகமயமாக்கல் காரணமாக, இன்று எமது சாதாரண கருத்துக்கள் கூட இலகுவாக உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் எடுத்துச் செல்லப்படுகின்றது.
ஆக்கம்: இ.தனஞ்சயன்