நீண்ட கால இடைவெளியின் பின்னர் மற்றுமொரு வலைப்பூ பதிவில் சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இன்று உலகலாவிய பேசு பொருளான கொவிட் 19 எனப்படும் கொரோனாத் தொற்று அரசியல் பொருளாதாரத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்பது தொடர்பாக சிந்திப்பதாகேவ குறித்த பதிவு அமையவுள்ளது.
உலகில் உள்ள 200 ற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாத் தாக்கமானது காணப்படுகின்றது. வடகொரியாவில் கொரோனாத் தொற்று தொடர்பாக எந்த செய்திகளும் வரவில்லையாயினும் அண்மையில் வடகொரியாவின் தேசபிதாவான கிம் இல் சுங்கின் ஜணன தினம் அமைதியான முறையிலும் வட கொரியா மக்கள் முக கவசத்தை அணிந்து குறித்த விழாவில் கலந்து கொண்டமை கொரோனாத் தொற்று பாதிப்பு அங்கு இருக்கலாம் என்ற கருதுகோளினை தோற்றுவித்துள்ளது.
வடகொரியாவின் எல்லை நாடான தென் கொரியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மத்தியில் தேர்தலினை நடத்தியுள்ளது. குறித்த தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இந்த அனுபவத்தை இலங்கை பொது தேர்தல் நடாத்த இக் காலகட்டத்தில் பிரயோகிக்கலாம். எனினும், மக்கள் தென் கொரியா மக்களின் மனநிலையை ஒத்தவர்களா என்பது சந்தேகமே.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா பிரச்சினை இன்று அமெரிக்காவை நிலை தடுமாற வைத்துள்ளது. இந்த சூழல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஐனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சிக்கு சாதகமாக அமைய போகின்றது. டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகும்.
எமது அண்டை நாடான இந்தியா, பாகிஸ்தான் தமது ஊரடங்கு கால எல்லையை நீடித்துள்ளன. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக மும்பையிலுள்ள வேற்று மாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை நடாத்தி தம்மை சொந்த மாநிலத்திற்கு அனுப்புமாறு கோரினர். பி்ன்னர், பொதுச் சொத்துகளிற்கு சேதம் விளைவித்து பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில், 70 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் 100 ற்கும் மேற்பட்ட நாடுகள் உதவி கோரியுள்ளதாகவும் அதன் முகாமைத்துவ இயக்குனர் கிறிஸ்டாலினா ஜெயோர்ஜிவா கூறியுள்ளார். ஜி 20 நாடுகளினை குறைந்த வருமானம் பெறும் நாடுகளி ற்கு உதவமுன்வருமாறு கேட்டு கொண்டார். சர்வதேச நாணய நிதியத்திடம் 1 ரில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கும் இயலுமையினை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதேசமயம், சர்வதேச நாணய நிதியத்தின் பொருளியலாலளர் கீதா கோபிநாத் தெரிவிக்கும் போது உலக அளவில் மொத்த தேசிய உற்பத்தி 3% சரிவடைந்துள்ளது. 2009 இல் ஏற்பட்ட பொருளாதார சரிவினை விட இதன் பாதிப்பு அதிகமாகும். கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினையானது இவ் வருட இறுதியில் முடிவடையுமானால் 2021 ல் பகுதியளவாவது பொருளாதார மீட்சியினை பெறமுடியும்.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குத்தரஸ் ஆயுதங்களை அமைதியாக்கி எல்லா நாடுகளும் ஒன்றாக இணைந்து கொரோனா வைரஸினை இல்லாது ஒழிக்க போராட முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சவூதி அரேபியா, ஜெமன், சிரியா மற்றும் பல நாடுகள் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளன. அத்துடன், உலக தலைவர்கள் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த கரிசனையெடுக்க வேண்டுமென்று கூறினார்.
இதேவேளை, கிறிஸ்தவர்களின் உயிர்த்தெழுந்த ஞாயிறு, யூதர்களின் pass over என்று அழைக்கப்படும் விடுமுறை கொண்டாட்ட நிகழ்வு மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார துறைசார் ஊழியர்களின் தியாகங்களை போற்றும் நாளாக மாறியது. அடுத்த மாதமளவில் இஸ்லாமியர்கள் புனித மாதமான ரம்லானினை சந்திக்கவுள்ளனர்.
இஸ்ரேலில் இன்னமும் நிலையான அரசாங்கம் இல்லாத நிலையில் நான்காவது முறையாகவும் பொதுத் தேர்தலினை சந்திக்க தயாராகிறது. இந்த நிலையில், பாலஸ்தீனம் இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்குமாறு கோரியுள்ளது. ஆபிரிக்காவில் கென்யா மற்றும் தென்னாபிரிக்காவில் முடக்க நிலை காரணமாக உணவு பெறுவதில் வன்முறை ஏற்பட்டு இருந்தது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் சுகாதார அமைச்சர் கொரோனா வைரஸினை கையாள்வது தொடர்பில் திருப்தி இன்மையால் மாற்றப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் உலக சுகாதார ஸ்தானத்திற்கு வழங்கும் நிதியை நிறுத்தியுள்ளதுடன் சீனாவிற்கு சார்பாக உலக சுகாதார ஸ்தான இயக்குநர் செயற்படுவதாக குற்றச்சாட்டினை முன்வைத்தார். உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸினை அணுகிய முறை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்ற அதேவேளை ஸ்தாபன இயக்குநரினை பதவி விலக கோரியும் கருத்துக்கள் வலுப்பெறுகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ உலக வங்கி 12 பில்லியன் அமெரிக்க டொலரினை ஒதுக்கியுள்ளதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மால் பாஸ் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனாத் தாக்கம் அதிகமாகும். இந்த சமயத்தில் ஒரு மாத காலமாக முடக்கநிலை காணப்படுவதால் பொருளாதார சரிவினை சந்தித்துள்ளதுடன் மொத்த தேசிய உற்பத்தி 0.4 வீதம் குறைவடைந்துள்ளது. கொரோனாத் தொற்றாளர்கள் 244 இனை கடந்த நிலையில் எப்போது ஊரடங்கு முழுமையாக தளர்தப்பட்டு வழமையான வாழ்விற்கு திரும்பலாம் என்பதே மக்களின் தற்போதைய அபிலாஷையாகவுள்ளது. எனினும், ஊரடங்கு கால வரையறை கானல் நீரீற்கு ஒப்பிடுவதாகேவ அமைந்துள்ளது. எது எப்படியோ, கொரோனா கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து கொரோனாவினை அரசியலாக்கி பொருளாதார சுமையை மக்களே எதிர் கொள்ள வேண்டியேற்படும் என்பதே தற்போதைய உலக நிலைமை ஊடக புரிந்து கொள்ள முடிகிறது.
இ.தனஞ்சயன்