அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

சனி, 11 ஆகஸ்ட், 2018

அரசாங்கத்திற்கும் மக்களிற்குமான உறவுப்பாலமாக விளங்குவது ஊடகங்களே!

             மக்களின் வரியில் செயற்படும் அரச ஊடகங்கள் மற்றவர் மீது சேறு பூசும் விதத்தில் செயற்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அபே கம வளாகத்தில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
சுயாதீனத் தொலைக்காட்சி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் என்பன அரச நிறுவனங்கள் ஆகும். இது நடுநிலையாக செயற்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்துக்கு வால் பிடித்து, மற்றவர்கள் மீது பொய்யான செய்திகளை ஒளிபரப்பி வருவதை அனுமதிக்க முடியாது.
தனியார் ஊடகமொன்றில் யாராவது ஒருவர் மற்றொருவர் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடுவதாயின், அதனை எதிர்க்க முடியாது. ஆனால், நாட்டின் வரிப் பணத்தில் இயங்கும் ஒரு ஊடகம் இவ்வாறு செயற்பட முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். குறித்த செய்தியானது இணையதளத்தில் வெளியாகியிருந்தது. இந்த செய்தியின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதாகவே இந்த பத்தி எழுத்து அமையவிருக்கின்றது.
      ஊடகங்கள் என்பது தகவல்கள் மற்றும் கருத்துகளை பரிமாற்றம் செய்கின்ற சாதனங்களே ஆகும். ஜனநாயகத்தை நிலைநாட்டும் முக்கிய காரணியாக ஊடகங்கள் விளங்குகிறது. எனினும், ஊடகங்கள் பெரும்பாலும் அடக்குமுறையை எதிர்கொள்வதாகவே காணப்படுகிறது. எமது நாட்டை பொறுத்தவரை பாரிய யுத்தமொன்றை எதிர்கொண்ட காரணத்தால் ஊடக சுதந்திரம் பற்றி வாயே திறக்காத சூழ்நிலையே காணப்பட்டது. இதேவேளை யுத்த சூழலில் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். சில ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு தப்பியோடினர். இவ்வாறான ஊடகவியலாளர்களில் பலர் தமிழர்கள்  என்பது கவனிக்கத்தக்கது. மேலும் லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலி கொட போன்றவர்களிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக கேள்வி எழுப்பும் செய்தி ஊடகங்களே காணப்படுகிறதே அன்றி தமிழ் ஊடகவியலாளர் பற்றி ஊடகங்கள் அலட்டிக் கொள்வதில்லை. குறிப்பாக இத்தகைய ஊடகவியலாளர்களிற்கான அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியாக மகிந்த ராஜபக்சவின் காலமே இருந்தது. நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படுகின்ற அரசாங்கத்தின் காலப்பகுதியில் முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் பாரிய ஊடக சுதந்திரத்திற்கான களமுன்டு எனலாம். பொதுவாக அரச ஊடகங்கள்  நடப்பு அரசாங்கத்தின் பிரச்சாரபீரங்கிகளாகவே காணப்படும். காரணம், குறித்த அரச நிறுவனங்களின் தலைவர் குறிப்பிட்ட அரசாங்கத்தினால் நியமிக்கப்படுவார். எனவே, அரச ஊடகங்களினை கட்டுபடுத்தும் அதிகாரம் முழுமையாக அவரிடம் ஒப்படைக்கப்படும். முன்னாள் ஜனாதிபதி குறித்த விடயத்தை அறியாதவர் அல்ல. கடந்த தனது ஆட்சியில் அரச ஊடகங்களினை மிகவும் தனக்கு உடன்பாடுமிக்கதாக பயன்படுத்தியவர்களில் முன்னோடியானவர். போரை வெற்றி பெற்றுக்கொடுத்தவர் மற்றும் சரத்பொன்சேகாவினை ஹிட்லருக்கு ஒப்பிட்டமை போன்றன சில உதாரணங்கள் மேலும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சியினை பிரச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு மஹிந்த ராஜபக்ஷ மீது காணப்படுகிறது. எது எப்படியோ குறித்த கருத்து அரசியல் நோக்கத்தில் வெளியிட்டகருத்தாகவே உட்பொருள் கொள்ள முடிகிறது.
          
           இதேவேளை, அன்மையில் உலக நாடுகள் இடையே ஊடக சுதந்திரம் பற்றி ஆய்வு மேற்கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட 180 நாடுகளை உள்ளடக்கிய அட்டவணையில் இலங்கை பத்து இடங்கள் முன்னேற்றமடைந்து 131 இடத்தை பிடித்துள்ளது. இதற்கான முக்கிய காரணமாக தகவல் அறியும் உரிமை சட்டதை அமுல்படுத்தியமையைக் கூறலாம். மேற்கண்ட அட்டவணையில் நோர்வே முதலிடத்தையும் சுவீடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. தாய்லாந்து 42 வது இடத்திலும் தெற்காசிய நாடான பூட்டான் 84வது இடத்திலும் பட்டியல் படுத்தப்பட்ட அதேவேளை வடகொரியா இறுதி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நாட்டின் காவல் நாய்களாக விளங்கும் ஊடகங்கள் எது மக்களிற்கு சரி எது நடுநிலையானது என்பதை அறிந்து வெளியிட வேண்டும். ஒரு சிறந்த அறிவுத்தெளிவு மிக்க சமூகத்தை உருவாக்கும் அதிகாரம் ஊடகங்களிற்கே உண்டு. எனினும் குறித்த ஊடகங்கள் சில அரசியல் சுயலாபங்களிற்காக ஒருபக்க நியாயப்பாடுகளை முன்வைப்பது கவலையான விடயமாகும். அரசாங்கத்திற்கும் மக்களிற்குமான உறவுப்பாலமாக விளங்கும் ஊடகங்கள் நேர்மைத்தன்மையுடன் செயற்படும் போதே ஜனநாயகம் தொடர்பாக சற்றேனும் உரையாட முடியும்.

ஆக்கம்:
இ.தனஞ்சயன்