அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

உளநலம் என்பதே மிகப்பெரிய சொத்து!

உலக சுகாதார சம்மேளனத்தினால் உலக மனநல தினம் ஒக்ரோபர் மாதம்10 ம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த உலக மனநல தினத்தை கொண்டாடுவதன் நோக்கமாக"உளநலம் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல்" கொள்ளப்படுகின்றது.1992 முதல் இந்த உலக மனநல தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. 
         எமது நாட்டை பொறுத்தவரை பாரிய யுத்தமொன்றை எதிர்கொண்ட காரணத்தால், போரின் தாக்கத்தில் இருந்து மனரீதியாக விடுபட வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது. இன்றைய காலகட்டத்தில் உடல்சுகாதாரத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் நாம் எந்த அளவிற்கு மனநலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்பது கேள்விக்குறியே. பணத்தை முதன்மை படுத்தி இயந்திரதனமான வாழ்க்கை வாழ்வதால் மனரீதியான போதிய உறுதியற்ற தன்மை காணப்படுகின்றது. மனம் உடைந்த நிலையில், உடல்ரீதியாக பலவிதமான உபாதைகள் ஏற்படுவதற்கும் மனநல சுகாதாரமே முக்கியமான காரணமாக விளங்குகிறது.
        எமது நாட்டின் உளநல ஆரோக்கிய அலகின் பணிப்பாளர் வைத்தியர் சித்திரமெளலி டிசில்வா குறிப்பிடும் போது " 20 வீதமான இளம் சந்ததியினர் உளநலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எமது குழந்தைகள் மனப்பதட்டம் (Depression )காணப்படுகிறது. 19 வீதமான சிறுவர்கள் தனிமையில் உள நல பாதிப்புகளிற்கு உள்ளாகியுள்ளார்கள். 25 வயதை அடையும் வரை ஒரு மனிதனுடைய மூளை விருத்தியடைகின்றது. இலத்திரனியல் ஊடகங்களின் அதிகரித்த பாவனை,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைமை மற்றும் கல்வித் திட்டம் போன்றன மாற்றியமைக்க வேண்டும். 
       மேலும், சிறுவர்கள் பசியின்மை, தூக்கமின்மை, தலைவலி,ஆர்வமின்மை போண்றவற்றால் அவதிப்பட்டால் உளநல வைத்தியர்களின் ஆலோசனைகளை பெற்றோர்கள் பெற்றுக்கொள்வது அவசியம். உலகில் உள்ள 180 ற்கு மேற்பட்ட நாடுகளில் உலக மனநல தினம் கொண்டாடப்படுகின்றது. இது பொதுவிடுமுறையாக கொள்ளப்படுவதில்லை. இந்த ஆண்டின் உலக மனநல தினத்தின் தொணிப்பொருளாக "மாறும் உலகில் மனநலம் மற்றும் இளைஞர்கள்"(Young people and mental health in a changing world ) கொள்ளப்படுகின்றது. எமது உளநலனை நன்றாக மேம்படுத்தி கொள்வதற்கு தியானம், உடற்பயிற்சி, இறைநம்பிக்கை, மனதில் புத்துணர்ச்சி கிடைக்கும் சிந்தனை,படைப்பாக்க முயற்சிகள் , பயனுள்ள பொழுது போக்கு, வாசிப்பு,நல்ல நண்பர்களுடன் உரையாடல் மற்றும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடல் போன்றன மனதை எப்போதும் மனதை ஆரோக்கியமாக பேணுவதற்கு உதவி செய்யும். 
       மேலும், இன்றைய உலக உளநல ஆரோக்கிய நாளில் உளநலம் மற்றும் உளவியல் கல்வி தொடர்பாக மேலைநாடுகளில் தெளிவான பார்வை உள்ளபோதும் நமது நாட்டில் எதிர்மறையான சிந்தனையே அதிகமாக காணப்படுகிறன. நமது சமூகம் உளநலம் மற்றும் உளவியல் கல்வி தொடர்பாக சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஆக்கம்; இ.தனஞ்சயன்.