உலகலாவிய ரீதியாக அச்சுறுத்தல் விளைவிக்கும் கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலக நாடுகள் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட திணறி வருகின்றன. இந்த வைரசை ஒழிக்க இதுவரை பூரணமாக தடுக்கக்கூடிய மருந்துகள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
எனினும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமால் நாடு முழுவதும் முடக்க நிலையில் இருப்பது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவேதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டில் தேசிய அளவில் ஊரடங்கை நடைமுறை படுத்தி வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தி வருகின்றன. நியூசிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பாகிஸ்தான் போன்ற நாடுகள் முடக்க நிலையில் சில தளர்வுகளை ஏற்படுத்தி உள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒலிம்பிக் போட்டி உட்பட உலகின் பல முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடான போலந்தில் நடைபெற இருந்த அதிபர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. போலந்தில் தற்போது வரை 15,365 ற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 760 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
எனினும் அதிபர் ஆண்ட்ரேஜ் துடா தலைமையிலான அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனிடையே கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் போலந்தில் வருகிற 10ம் திகதி அதிபர் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் அதிபர் ஆண்ட்ரேஜ் துடா மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு மக்களிடம் பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் அவர் அதிபராக ஆகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்றும், எனவே தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்தன.
அதுமட்டும் இன்றி ஊரடங்கால் வேட்பாளர்கள் பிரசாரத்தை நிறுத்தியுள்ளதால் வாக்குப்பதிவு வெளிப்படையாகவும், நியாயமானதாகவும் இருக்காது என்றும் சர்வதேச அரசியல் விவகார நோக்கர்கள் கவலை தெரிவித்தனர். ஆனால் ஆளும் தேசியவாத சட்டம் மற்றும் நீதி கட்சி, தேர்தலை நடத்தி ஆண்ட்ரேஜ் துடாவை மீண்டும் அதிபராக்குவதில் மும்முரம் காட்டியது.
அதே சமயம் சுகாதார நெருக்கடியை பயன்படுத்தி ஆளும் கட்சி அரசியல் ஆதாயம் தேட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே தேர்தலை ஒத்திவைக்கவேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் வந்த அழுத்தத்தை தொடர்ந்து, அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. எனினும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. கூடிய விரைவில் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்றும், தபால் மூலம் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பீதிக்கு மத்தியில் கடந்த மாதம் தென்கொரியா மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடான மாலி ஆகிய நாடுகளில் தேர்தல்கள் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளமை கவனிக்கதக்கது. இதேவேளை, இஸ்ரேலில் 4 வது முறையாக தேர்தலுக்கு செல்லாமல் மக்கள் எதிர்பை மீறியும் கூட்டரசாங்கம் சுழற்சி முறை பிரதமர் முறைமையின் அடிப்படையில் (Rotative Prime minister ) அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் இம் மாதம் முடக்க நிலை எதிர்வரும் 11 ம் திகதியுடன் முடிவுக்கு வரும் என்கிற தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்ற இந்த சூழலில் அடுத்த மாதம் 20 ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், இலங்கை போலாந்தின் வழியை பின்பற்றுமா? தென்கொரியா அனுபவத்தை பயன்படுத்துமா? புதிய தந்திர சூத்திரம் வகுக்கப்படுமா? என்பதை சில கால பொறுமையின் பின்னரேஅறிந்து கொள்ள முடியும். அன்மைய நாட்களின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானாவர்களின் எண்ணிக்கை தலைநகரில் அதிகரித்தமை தேர்தலை பிற்போடுவதற்கு ஒரு காரணியாக அமையலாம்.