அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

சனி, 21 ஆகஸ்ட், 2021

போராடாமல் தோற்கடிக்கும் புதிய வகை பொறிக்குள் சிக்கவுள்ள தலிபான்கள்?

நீண்ட நாட்களின் பின்னர் மற்றுமொரு வலைப்பூ பகுதியில் சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். கொவிட் சூழலால் ஏற்பட்ட வேலைபளு மற்றும் தனிப்பட்ட சில காரணங்களுக்காக வலைப்பூ பதிவில் தொடர்ச்சியான கட்டுரைகளை வழங்க முடியவில்லை. எனினும் குறித்த சில கால இடைவெளியின் பின்னர் தொடர்ச்சியான கட்டுரைகளை வழங்கலாம் என்று எதிர்பார்க்கின்றேன். இக்கட்டுரையானது தற்போதைய சர்வதேச அரசியலில் பேசு பொருளாக காணப்படுகின்ற ஆப்கானிஸ்தான் நிலைமைகள் தொடர்பாக வழங்குகின்ற செய்தி தொகுப்பாக அமையவுள்ளது. 

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலிலுள்ள ஜனாதிபதி மாளிகையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை அடுத்து 'ஆப்கானிஸ்தான் யுத்தம்' நிறைவடைந்துள்ளதாக தலிபான்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர். காணொளி வழியாக உரையாற்றிய தலிபான்களின் பிரதித் தலைவர் முல்லா பர்தா அக்குன்ட் தாம் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை அடைந்துள்ளதாகவும் இதன் மூலமாக ஆப்கானிஸ்தான் தேசம் வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்தார். 

'10 நாட்கள்' எனும் குறுகிய காலத்தில் முழு ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள்.  இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தமது நாட்டு பிரஜைகளை மீள அழைக்கும் நடவடிக்கைகளை பல நாடுகள் ஆரம்பித்தன. 

முன்னாள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ;ரப் கானி நாட்டில் இருந்து வெளியேறியிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தஜிகிஸ்தான் அல்லது உஸ்பெக்கிஸ்தானில் அரசியல் தஞ்சமடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக தான் நாட்டின் இருந்து வெளியேறியதாக முன்னாள் ஜனாதிபதி அஷ;ரப் கானி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காபுல் விமான நிலையத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு ஏராளமானவர்கள் திரண்டதன் காரணமாக விமான நிலையத்தில் பாரிய பதற்ற நிலை தோன்றியது. 

தலிபான்களின் தலைவர் கருத்து வெளியிடுகையில், மீள வௌ;வேறு மாகாணங்களிலுள்ள தமது உறுப்பினர்களை ஒன்றுதிரட்டுவதாகவும் வெளிநாட்டுப் படையினர் நாட்டை விட்டு வெளியேறியதுடன் புதிய அரசாங்க கட்டமைப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.  

தாலிபான் போராளிகள் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிற்கு அருகில் நேற்று வந்ததையடுத்து அந்த நாட்டின் கட்டுப்பாட்டை அவர்களுக்கு கையளிக்க ஆப்கானிஸ்தான் அரசு தீர்மானித்தது. அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரை பழிவாங்கப் போவதில்லை என்று தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.  நகரில் இருந்து வெளியேறுபவர்களுக்கு எந்த துன்புறுத்தலும் இன்றி வெளியேற சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பெண்களின் உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க தமது அமைப்பு தயாராக இருப்பதாக தலிபான் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் பெண்களுக்கான கல்வி கற்கும் முறைமை மற்றும் தொழில் செய்யும் உரிமையை தமது கட்டுப்பாட்டிற்குள் உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு இஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் சரியான சட்டத்திட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என தலிபான் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.               

1996 தொடக்கம் 2001ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியிலிருந்த காலப்பகுதியில் பெண்களுக்கு வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதேவேளை, தூக்குத்தண்டனை மற்றும் கல்லால் எறிந்து தண்டனை வழங்குதல் போன்ற அபாயகரமான சட்ட நடைமுறைகள் காணப்பட்டன. 

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தனது ராஜதந்திர உத்தியோகத்தர் குழு மற்றும் தமது நாட்டவர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இதற்காக குறிப்பிட்ட நாடுகளின் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கெதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க தெரிவித்திருந்தார். 

ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து மக்கள் நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள பாகிஸ்தான் நாட்டிற்கு செல்வதற்கு தேச எல்லையில் நீண்ட வரிசையில் நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கான் அகதிகளுக்கு அமெரிக்கப் பிரஜாவுரிமை வழங்குவதற்கு தயாரென அறிவித்திருந்தார். அத்துடன், அமெரிக்காவினுடைய ஜனாதிபதி ஜோ பைடன், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை காரணமாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் உலங்கு வானூர்தி ஊடாக நேற்றைய தினம் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமொன்றின் பாகங்களை பிடித்த நிலையில் பயணித்த 5 பயணிகள் விமானத்தில் இருந்து கீழே விழும் காட்சி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக காணப்பட்டன. 20 வருடகாலமாக நீடித்த ஆப்கான் யுத்தத்தில் அமெரிக்காவின் 2,442 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,800 தனியார் ஒப்பந்த அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20,666 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாத மதிப்பீட்டின் படி இந்த நீண்ட யுத்தத்தில் 47,245 ஆப்கான் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பெண்களின் உரிமைகளை மதிப்பதற்கும், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் உறுதியளிப்பதாக ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. தமது முதலாவது உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பில் பங்கேற்ற தலிபான் அமைப்பினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். 

தலைநகர் காபுலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்கள் ஆப்கானிஸ்தானில் யுத்தம் நிறைவுக்கு வந்திருப்பதாகவும் எவரையும் பழிவாங்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். வலய மற்றும் உலகின் ஏனைய நாடுகளுடன் நட்புறவினைப் பேணுவதற்கு தமது அமைப்பு எதிர்பார்ப்பதாக தலிபான் அமைப்பின் பிரதம ஊடகப் பேச்சாளர் சபுஹுல்லா முஜாஹிதீன் தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கும் சபுஹுல்லா முஜாஹிதீன் பதிலளித்தார். இஸ்லாமிய சட்டத்திற்குள்  பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், பெண்களைப் பல்கலைக்கழக கல்வி வரை கொண்டு செல்வதற்கும் இடமளிக்கப்படுமென அவர் குறிப்பிட்டார். 

கட்டாருக்கு நாடு கடத்தப்பட்ட தலிபான் அமைப்பின் உயர்நிலை அரசியல் தலைவர்கள் பலர் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்பதற்காக மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பியிருந்தமை விசேட அம்சமாகும். இதேவேளை ஆப்கானிஸ்தானில் இருந்து தமது இராணுவத்தை வாபஸ் பெற எடுத்த தீர்மானம் ஒரு சரியான முடிவு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஒரு சரியான தருணத்திலேயே அவ்வாறான ஒரு தீர்மானம் ஒன்றை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாலிபான் இயக்கம் ஆப்கானிஸ்தானில் முழுமையான ஆட்சி அதிகாரத்தை நேற்று தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்தது. 

அமெரிக்க இராணுவமும் நேட்டோ இராணுவமும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததையடுத்து தாலிபான் இயக்கம் 10 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதி ஜோ பைடன் மீது பெரிதும் குறை கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜோ பைடன் ஆப்கானிஸ்தானுக்காக அமெரிக்க பிரஜைகளின் உயிரை தொடர்ந்தும் பழிகொடுக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக அமெரிக்கா 500 மில்லியன் டொலர் பணத்தை ஒதுக்கியுள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற குழப்பநிலையை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. இந்த குழப்பநிலையினால் 5 பேர் உயிரிழந்தனர். 

சில நபர்கள் விமானத்தில் தொங்கி பயணம் செய்ய முயற்சி செய்துள்ளனர். விமானத்தின் சில்லில் சிக்கியிருந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளின் தூதுவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பு, தலிபான்கள் மீது இந்தக் குற்ச்சாட்டை முன்வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. முன்னைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய நேட்டோ இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆப்கானிஸ்தானியர்களை தலிபான் அமைப்பு இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மொழிபெயர்ப்பாளர்களாகவும்,வெளிநாட்டு தொடர்பாளர்களாகவும் பணியாற்றிய அரச பணியாளர்களைத் தேடும் செயற்பாட்டில் தலிபான் அமைப்பு தற்சமயம் ஈடுபட்டுள்ளது. அத்துடன் போரில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஊடக சந்திப்பை மேற்கொண்ட தலிபான் அமைப்பு, ஜனநாயக முறையில் நாட்டை நிர்வகிக்கப் போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நிறைவாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினரின் வெளியேற்றம் மற்றும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பது அமெரிக்காவின் தோல்வியென பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. உண்மையில் தற்போதைய நிலைமையின் அடிப்படையில் அமெரிக்காவின் தோல்வி போல தென்பட்டாலும் நீண்ட எதிர்கால அடிப்படையில் அமெரிக்காவின் பொறிகளுக்கு தாலிபான்கள் சிக்க வைக்கப்பட்டிருப்பதாகவே நோக்க முடிகிறது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தனது படைகளை நிலைநிறுத்திய போது ஏராளமான செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவை இராணுவ ஆயுத பலம் மற்றும் மனித பலம் போன்றவை ஆகும். 

தலிபான்கள் மற்றும் அமெரிக்காவிடையே கடந்த வருடம் பெப்ரவரி 29ம் திகதி மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது. எனினும் உடன்படிக்கையில் உள்ளடக்கங்கள் முழுமையாக வெளியுலகத்திற்கு வெளிப்படுத்தப்படவில்லை. இந்நிலையிலே அனைத்து சம்பவங்களும் நிறைவேறியிருக்கின்றன. அமெரிக்கப் படையினர் மற்றும் அமெரிக்க பிரஜைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் போது எந்தவிதமான தீங்குகளும் தலிபான்களால் மேற்கொள்ளப்படவில்லை. 

தலிபான்கள் தற்போது ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் இனிவரும் நாட்களில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே அனைவரது வினாவாகும். ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சியினை நிலைநாட்டுவார்களா? பெண் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுமா? ஊடகங்கள் எவ்வாறு இயங்கப் போகின்றன? பொருளாதார வளர்ச்சியினை எவ்வாறு முன்கொண்டு செல்லப் போகின்றார்கள்? என்பதே அவ்வினாக்களாகும்.

தலிபான்களின் முதலாவது ஊடக சந்திப்பு மேற்கூறிய அனைத்து வினாக்களுக்கும் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்திய போதும் நடைமுறை செயற்பாடு சாத்தியமற்றதாகவே அமையும் என்பது சர்வதேச அரசியலை புரிந்து கொண்டவர்களுக்கு எளிதில் கணித்துக் கொள்ள முடியும். தாலிபான்கள் ஆட்சியின் போது ஆப்கானிஸ்தானில் உள்ள ஏனைய வன்முறை அமைப்புக்கள் தலிபான்களுக்கு எதிராக போர்க் கொடிகளை எதிர்காலத்தில் தூக்கலாம். தற்போதும் ஆப்கானிஸ்தானில்; தலிபான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதுடன் அவை துப்பாக்கி முனை கொண்டு அடக்கப்படுகின்றன. தலிபான்கள் உலக அரசியலில் அமெரிக்க சார்பு நிலைபாட்டையா, சீனா சார்பு நிலைபாட்டையா எடுக்கப் போகின்றார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றது. எனினும் ஆப்கானிஸ்தான் நிலைமை பல்வேறு உதாரணங்களை எதிர்கால உலக ஒழுங்கிற்கு எடுத்துச் சொல்லும் என்பது தற்போதைய நிலைபாடாகும்.     

 தொகுப்பு-இ.தனஞ்சயன்




 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக