அறிவைநாடல்

அறிதலார்வம்
வியாழன், 2 மே, 2019
"வாள்முனையினை விடவும் பேனா முனையே வலிமையானது"
உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் விஸ்தரிக்கும் நோக்கில் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் 1993 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வொரு வருடமும் மே 3 ஆம் திகதி பத்திரிகை சுதந்திரதினமாக கொண்டாடப்பட்டுவருகின்றது. "குல்லர்மோ கானோ இசாசா " என்ற கொலம்பிய நாட்டு பத்திரிகையாளரின் பெயரால் வழங்கப்படுகிறது. "எல் எஸ்பெக்டேட்டர்' என்ற பத்திரிகையில் பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா கும்பலுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால், பத்திரிகை அலுவலகத்தின் முன்பாகவே, 1986ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சேவையை மற்றும் துணிச்சலினை பாராட்டியே, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், உலகம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து, பத்திரிகை சுதந்திரம் எதிர்நோக்கி உள்ள பிரச்னைகள், அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் போன்றவற்றை "யுனெஸ்கோ" ஆராய்கின்றது.
ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே 'பத்திரிகை சுதந்திர சாசனம்' முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட , 'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடக சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆனை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.
ஜனநாயகத்தின் நான்கு பிரதான தூண்கள் என்று சொல்லப்படுபவற்றில் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என நான்காவது இடத்தில் ஊடகங்கள் இருக்கின்ற போதிலும், அதற்கு மேலுள்ள தூண்களும் சரியாகச் செயற்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, மக்களுக்கு அறிவிக்கும் முக்கியமான பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.
ஊடகங்கள் என்று வரும்பொழுது வழக்கமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் போன்ற ஊடங்களைத் தாண்டி இணைய செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் தகவல்களும் ஊடகங்கள் என்ற வகைக்குள்ளேயே அடங்குகின்றன.
பத்திரிகைச் சுதந்திரம் உள்ள உலக நாடுகளின் தரப்படுத்தல் வரிசையில் இலங்கைக்கு 126 ஆம் இடம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஊடக சுதந்திரம் உச்ச அளவில் உள்ள நாடாக நோர்வே தெரிவாகியுள்ளது. இஸ்ரே 88 ஆவது இடத்திலும், கனடா 18 ஆவது இடத்திலும், ஜேர்மனி 13 வது இடத்திலும் உள்ளது. அமெரிக்கா 48 ஆவது இடத்தில் உள்ளது. சீனாவுக்கு 177 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. கடைசி இடமான 180 ஆவது இடத்துக்கு துர்க்மெனிஸ்தான் தெரிவாகியுள்ளது.
ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரத்தை வழங்கக் கூடியதாக கருதப்படும் இன்றைய இலங்கை அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்பாக இலங்கையில் நிலைமை 165வது இடத்தில் காணப்பட்டது. எனவே, இந்த முன்னேற்றமென்பது முக்கியமானது என்ற போதிலும் 2015ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டில் 24 இடங்கள் முன்னேறி 141ஆவது இடத்திலிந்த இலங்கை, 2016 இலிருந்து 2017 இற்கு எந்தவித முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை. எனினும் 2018; இல் 131 ஆவது இடத்தினை பெற்ற அதேவேளை 2019 இல் 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு 126 ஆவது இடத்தை பெற்றுள்ளது.
உலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட ஊடக சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஊடகங்களின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். எனினும், கடந்த ஒருவருடத்தில், உலகளாவிய ரீதியில் ஆப்கானிஸ்தானில் 15, சிரியாவில் 11, மெக்ஸிகோவில் 9, ஜேமனில் 8, இந்தியாவில் 8, அமெரிக்காவில் 6 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சீனாவில் 60 , எகிப்தில் 38 , துருக்கியில் 33, சவூதி மற்றும் ஈரானில் 28 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் உள்ள 180 நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரநிலைமைக்கு அமைய மேற்கொண்ட ஆய்வுகளுக்கு அமைய, நாடுகளின் ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியல் வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சள் , சிவப்பு, கருப்பு என்ற 5 பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன.
சிறந்த ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வெள்ளை நிற வலையத்திற்கு உள்ளவாக்கப்படுகின்து. இதில் 8% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடக சுதந்திரம் ஓரளவுக்கு சிறப்பாகவுள்ள நாடுகள் மஞ்சள் நிற வலயத்திற்குள் உள்ளவாக்கப்படுகின்து. இம்முறை இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 16% மான நாடுகள் இந்த வலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
செம்மஞ்சள் நிறத்திற்குட்பட்ட வலையத்தில் இடம் பெற்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் தொடர்பான பிரச்சனை நிலவுகின்றதாகும். இதில் ஜப்பான், பிறேசில், இஸ்ரேல், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட 37% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.
சிவப்பு வலையத்திற்குட்பட்ட நாடுகள் என்பது ஊடக சுதந்திரம் மிக சிறப்பாக இல்லை என்பதாகும். ரஷ்யா, இந்தியா, மாலைத்தீவு உள்ளிட்ட 29% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.
ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகள் கறுப்பு வலையத்திற்குட்பட்டதாகும். ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகளில் வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற 11% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமாகப் பத்திரிகைகளை வெளியிடுவதற்கும் செய்திகளைச் சதந்திரமாக மக்களை சென்றடைவதற்கும் உலகிற்கு வாய்க்கப் பெற்ற ஒரு உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிர்களைத் தியாகம்; செய்தவர்களையும் நினைவு கூறும் தருணமாக இன்றைய தினம் அமைகிறது.
இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ "குல்லர்மோ கானோ இசாசா உலக பத்திரிகை சுதந்திர விருது" வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் "குல்லர்மோ கானோ இசாசா" என்பவரின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாக பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகையாளர் ஒருவருக்கு இந்நாளில் 25,000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது. சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது.
"வாள்முனையினை விடவும் பேனா முனையே வலிமையானது"(Pen is more mightier than sword) என்பது ஊடகவியலாளர்களின் பேனாவின் வலிமையை எடுத்து காட்டுமொரு பொன்மொழியாகும். செய்தி அறிக்கையிடலில் ஊடக தர்மத்தை (Media ethics) பேனுவது மிகவும் அவசியமானது. இதேவேளை, தேவையற்ற அழுத்தங்களுக்கு அடிபணிந்தோ, சுய லாப நோக்கிலோ செயற்படாமல் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பொது மக்களின் நலன்களை உறுதி செய்யும் வகையில் செயற்பட வேண்டும்.

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக