அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

ஓர் ஆண்டுக்கும் மேலான வர்த்தகப்போர் மேலும் நீடிக்குமா?

 
      அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போரில் பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு  சீனா கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும்பதிலடியாக சீனப் பொருட்கள் மீது 5 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா அளிக்கும் வர்த்தக சலுகைகளை சீனா உள்ளிட்ட உலக நாடுகள் அனுபவித்து வருவதாகவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அந்நாடுகள் கூடுதல் வரி விதிப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். இதையடுத்து சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட இறக்குமதிப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து வரு‌கிறது.

இதனிடையே, கடந்த வருடம்  செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்ததற்கு பழிவாங்கும் வகையில், சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க சோயா, நிலக்கடலை உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி வரியை சீனா அதிகரித்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிபர் டிரம்ப் பேசியதாவது எதிர்வரும்  ஒக்ரோபர்  1ம் தேதி முதல், 21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீன உற்பத்திப் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்பட்டிருக்கும் 25 சதவீத வரி, 30 சதவீதமாக உயர்த்தப்படும். மேலும், செப்ரம்பர்  1ம் தேதி முதல் 10 சதவீதமாக விதிக்கப்பட்டிருக்கும் சீனாவின் 17.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீதான வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்படும். நேர்மையான, நியாயமான வர்த்தகம் நடைபெற நியாயமற்ற இந்த வர்த்தக உறவை சரிசெய்ய  வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சீனா வேண்டுமென்றே, அரசியல் உள்நோக்கத்துடன் அமெரிக்காவின் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஓர் ஆண்டுக்கும் மேலாக வர்த்தகப்போர் நீடிக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத காரணத்தால், இருநாடுகளும் பரஸ்பரம் வரி விதித்து பதிலடி கொடுத்து வருகின்றன.

 அண்மையில், 35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக 5 சதவீத வரி விதித்தது. அதற்கு பதிலடியாக 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவும் 5 சதவீதம் கூடுதல் வரி விதித்தது.

இந்த வர்த்தகப்போர் காரணமாக சீனா பெரும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பண மதிப்பு கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில், தலைநகர் பீஜிங்கில் ‘ஸ்மார்ட் சீனா’ (Smart China) சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய அந்நாட்டின் துணை பிரதமர் லியூ ஹீ, வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாக கூறினார்.

இது குறித்து அவர் பேசுகையில், “புதிய தொழில்நுட்ப துறையில் வர்த்தக பாதுகாப்புவாதத்தையும், முற்றுகையையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது. உற்பத்திச் சங்கிலிகளின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதுள்ள Trade war (வர்த்தகப்போர்) பிரச்சனையை ஒத்துழைப்பு மூலம் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வர்த்தகப் போரின் விரிவாக்கத்தை ஏற்கமுடியாது. அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார்.

இதேவேளை, அமெரிக்கா,அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கையில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா கடும் வரி விதித்து, வரிவிதிப்பு மன்னனாக திகழ்வதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார்.

 இந்த நிலையில் அங்கு பென்சில்வேனியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியாவும், சீனாவும் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக திகழ்கின்றன. அவர்களை இனி வளரும் நாடுகள் என கூற முடியாது. எனவே அவர்கள் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெற முடியாது” என கூறினார்.

மேலும், “அவர்கள் வளர்ந்து வரும் நாடுகள் என்ற வகையில் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெறுகின்றனர். இது அமெரிக்காவுக்கு பாதகமாக அமைகிறது. அவர்கள் ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருந்து நன்மைகளை அனுபவித்து வருகின்றனர்” எனவும் கூறினார்.

இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தம் நடத்தும் முயற்சியில் இரு நாட்டு தலைவர்களும் ஈடுபட்டனர். இதற்கான பேச்சுவார்த்தை கடந்த நவம்பரில் தொடங்கியது. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் எந்த பலனையும் தரவில்லை.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், “கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு சீனாவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள்  சீனாவை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளன. இதனால் இவ்விவகாரத்தில் சீனா அமெரிக்காவுடன் ஒப்பந்ததை ஏற்படுத்த விரும்புகிறது. ஆனால் ஒப்பந்தம் ஏற்படுத்த நான் தயாராக இல்லை” என தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலக பொருளாதார வல்லரசுநாடுகள் தமக்கிடையே மோதிக் கொள்வது உலகின் ஏனைய நாடுகளின் பொருளாதாரத்திலும் ஏதேனும் ஒரு எதிர்மறைத் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதே நிதர்சனம்.






1 கருத்து: